அழுகைக்கும் சிரிப்புக்கும் நெருங்கிய உறவு உண்டு..!

2/5/2020 3:12:26 PM

அழுகைக்கும் சிரிப்புக்கும் நெருங்கிய உறவு உண்டு..!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இயற்கை ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு தனித்த பண்பை வழங்கியிருக்கிறது. அந்த வகையில் மனிதர்களுக்கு மட்டுமே கிடைக்கப்பெற்ற தனித்துவமான பண்பு புன்னகை.மனிதர்களுக்குச் சிரிப்பு சிம்பன்சிகளிடமிருந்து வந்திருக்கிறது. மனிதர்களும் சிரிக்கிறார்கள்., சிம்பன்சிகளும் சிரிக்கின்றன. மனிதர்களால் பேச முடிகிறது சிம்பன்சிகளால் பேச முடிவதில்லை. இதற்குக் காரணமும் சிரிப்புதான். மனிதர்களின் சிரிப்பிற்கும்
சிம்பன்சிகளின் சிரிப்பிற்கும் அடிப்படையில் சில  வித்தியாசங்கள் இருக்கின்றன. சற்று கவனித்துப் பார்த்தால் சிம்பன்சிகள் சிரிக்கும்போது அவை மூச்சு வாங்குவதுபோல் இருக்கும்.

சிம்பன்சிகளுக்கு மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை வெளியே விடும்போதும் ஒரே விதமான ஓசை அசைவுகளே இருக்கிறது. அதுவே மனிதர்களுக்கு மூச்சை உள்ளிழுக்கும்போதும், வெளியில் விடும்போதும் மூச்சின் அலைவரிசைகள் மாறும் தன்மை இருக்கிறது. இதன் காரணமாகவே மனிதர்களால் சிரித்தபடி பேச முடிகிறது, பேசியபடி சிரிக்க முடிகிறது. இதற்குப் பரிணாம வளர்ச்சியின்படி மனிதன் நேராக நிமிர்ந்து நடக்க ஆரம்பித்த பிறகு மனித உடலின் மேல் பாகத்திற்கு உடல் கனத்தை சுமக்கும் வேலை இல்லாமல் போனது ஒரு காரணம். மனிதர்கள் நிமிர்ந்து நடப்பதால் சிரிக்கும் போதும், பேசும்போதும் அலைவரிசை மாற்றி பலவகையான மூச்சு சப்தங்களை உண்டாக்கும் வல்லமை கிடைக்கிறது.

அது மனிதர்களுக்கு மட்டுமே கிடைக்கப்பெற்ற தனித்துவம் என்று சொல்லலாம். புன்னகைக்கு ஒரு விசேஷ குணம் உண்டு. யாரும் சொல்லிக் கொடுக்காமல் மனிதர்களாகக் கற்றுக்கொள்ளும் பாடங்களில் முக்கியமானது புன்னகை. Laughter therapy என்ற மருத்துவ முறை உருவாகி வருவதற்கு முன்பே ‘வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்‘ என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். சிரிப்பு ஒரு மருந்து. ஒரு நிமிடம் வாய் விட்டுச் சிரித்தால், ¾ மணி நேரத்திற்கு உடல் ரிலாக்ஸ் ஆகிறது என்று நரம்பியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். அதை நல்ல சிரிப்பு நல்ல ஆரோக்கியத்திற்கு அடிப்படை என்று மருத்துவ ரீதியாக குறிப்பிடுகிறார்கள்.

அன்றாட வாழ்வின் அழுத்தங்களால் மனிதர்கள் வயதாக வயதாகப் புன்னகைப்பதைக் குறைத்துக்கொண்டே வருகிறார்கள். சிறியவர்களாக இருக்கும்போது ஒரு நாளைக்குச் சராசரியாக 200 முறை புன்னகைப்பவர்கள், பெரியவர்களானதும் ஒரு நாளைக்கு 25 முறைக்கு மேல் புன்னகைப்பதில்லை என்கிறது ஒரு புள்ளிவிவரம். சிரிப்பு ஆராய்ச்சி வாய்விட்டு சிரிப்பதையும், புன்னகையையும் வைத்து உலகம் முழுக்க பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்துகொண்டே யிருக்கின்றன. சந்தோஷமாக இருந்தால்தான் புன்னகைக்க வேண்டுமா என்ற கேள்வி இன்றுவரை எல்லோர் மனதிலும் இருக்கிறது.

மனம் சந்தோஷமாக இல்லாதபோது கூட புன்னகைக்க முடியும். காரணம், வாய்விட்டுச் சிரிப்பது-புன்னகை எல்லாம் ஒரு தொற்று வியாதியைப் போன்றது. பார்த்ததும் தொற்றிக்கொள்ளக்கூடியதுதான் என்பதை ஆராய்ச்சியின் வழியாகவே கண்டறிந்தார்கள். ரிச்சர்ட் டேவிட்சன் என்ற உளவியல் பேராசிரியர் Madison நகரில் Wisconsin பல்கலைக்கழகத்தில்  மூளை அலைகளை அளக்கும் ஈஈஜி கருவியைச் சில மாணவர்களுக்குப் பொருத்தி அவர்களுக்குச் சிரிப்புப் படங்களைக் காண்பித்தார். படங்களைப் பார்த்த மாத்திரத்தில் மாணவர்களின் மனதில்  சந்தோஷ வட்டத்தில் மின் அலைகள் பாய்ந்ததை கண்டறிந்தார். வலுக்கட்டாயமாகப் புன்னகையையும், சிரிப்பையும் உண்டாக்குவதால் இயற்கையான சந்தோஷத்தை கண்டது போலவே மனித மூளையில் சந்தோஷ மின் அலைகள் பாய்கின்றன என்பதைக் கண்டறிந்தார்.

அந்த ‘சுரப்பி’தான் உடலுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அதேபோல் வடகரோலினா பல்கலைக்கழகத்தின் ஆர்னிகேன் என்ற உளவியல் பேராசிரியர் உடல் உபாதையும், மனஅழுத்தமும் கொண்ட நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தொடர்ந்து (3 வாரங்களுக்கு) சில நகைச்சுவை வீடியோக்களைக் காட்டினார். இறுதியில் அவர்களைப் பரிசோதித்தபோது அவர்களின் உடல் உபாதை கணிசமாக குறைந்திருந்தது தெரிந்தது. அந்த வகையில் மனஅழுத்தத்தைப் போக்கும் மருந்துகளில் புன்னகையும் ஒரு முக்கியமான முதன்மையான மருந்தாக இருக்கிறது என்றார். மனித உடலுக்கு இயற்கையான வலி நிவாரணி எண்டார்ஃபின் சுரப்பிகள்தான்.

சந்தோஷத்தை அதிகரிக்கும் எண்டார்ஃபின் சுரப்பிகள் உடலில் அதிகம் சுரக்க சிரிப்புதான் உதவியாக இருக்கிறது. அது மன அழுத்தத்தை விலக்கி உடல் வலியைக் குறைத்து குணமாக்குகிறது என்பதையும் ஆராய்ச்சியின் வழியாகவே நிரூபித்தார்கள். உடலைப் பலவீனமாக்கும் ஆங்கைலோ ஸ்பாண்டிலிட்டீஸ் என்ற நோயால் நார்மன் கசின்ஸ் என்ற அமெரிக்க பத்திரிகையாளர் பாதிக்கப்பட்டிருந்தார். நோய் முற்றிவிட்டது என்று மருத்துவர்கள் கைவிட்டபோதும் மனம் தளராமல், வீட்டிற்கு வந்து தொடர்ந்து ஆறு மாதங்கள் சிரிப்பு வீடியோக்களையும், திரைப்படங்களையுமே பார்த்தார். வெடித்துச் சிரித்தார். அந்தச் சிரிப்பு வைத்தியம் அவரை நோயிலிருந்து காப்பாற்றியது.

மருத்துவர்களே வியந்த அந்த விஷயத்தை அவர் ‘ஒரு நோயின் கதை‘ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டார். இதன் பிறகே  எண்டார்ஃபின்களின் செயல் பற்றி உலகம் திரும்பிப் பார்த்தது. மனிதர்கள் சிரிக்கும்போது எண்டார்ஃபின்கள் மூளையில் சுரக்கிறது. அவை உடலை அமைதிப்படுத்தும் குணம் கொண்டவை. நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குபவை. இதன் காரணமாகத்தான் எப்போதும் சிரித்திருப்பவர்கள் பலவீனமடைவதில்லை, நோய் ஏற்படுவதில்லை. அழுகைக்கும் சிரிப்புக்கும் உளவியல் ரீதியாகவும், உடலியல் ரீதியாகவும் நெருங்கிய உறவு உண்டு.

கடைசியாக நீங்கள் எப்போது வெடித்துச் சிரித்தீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். அப்போது உடல் முழுவதும் ஒரு பரவச உணர்வு ஏற்பட்டிருப்பது புரியும். மூளையில் எண்டார்ஃபின்களின் சுரப்பு உச்சகட்டத்தைத் தொட்டிருப்பது தெரியும். உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் போதை மருந்துகள் மூலம் எண்டார்ஃபின் சுரப்பிகளால் போதை உண்டாகும். அதேபோல சிரிப்பாலும் நேர்மறையான வழியிலேயே போதை உண்டாகும். இதன் காரணமாகத்தான் சிரிக்கும்போது கண்களில் நீர் வருகிறது. கண்களில் நீர் வர சிரிக்கலாம்.

தொடரும்

X