அரசு விதிகளை மீறும் தனியார் பள்ளிகள்!

2/13/2020 5:04:52 PM

அரசு விதிகளை மீறும் தனியார் பள்ளிகள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி-வேலை வழிகாட்டி

அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று கல்வித்துறை அறிவித்திருந்தது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படவிருந்த, ‘நீட்’ நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகள், உள்ளாட்சித்  தேர்தல் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டன. இந்த நிலையில் கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்தபின் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள அனைத்து பள்ளிகளும் அரையாண்டு விடுமுறை அளிக்கவேண்டும் என செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்தின என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது பற்றி கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தியிடம் கேட்டபோது, ‘‘இப்படிப்பட்ட அறிவிப்புகள் வழக்கமாக எல்லாத் தேர்வு விடுமுறை நேரத்திலும் வெளியிடப்படும்.

ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகள் வழக்கமாக இந்த அறிவிப்புகளை எப்போதும் பின்பற்றுவதில்லை. சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற நாட்களிலும் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்தியுள்ளன. பொன்னேரி அருகில் விடுமுறை நாளில் சிறப்பு வகுப்புக்குக் குழந்தைகளை அழைத்துச் சென்ற தனியார் பள்ளி வாகனம் கால்வாயில் கவிழ்ந்ததில் 10 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். உடனே சிறப்பு வகுப்புகள் நடத்திய தனியார்ப் பள்ளிகளின் பட்டியல் சேகரிக்கப்படுவதாகவும், நடவடிக்கை எடுக்கக் கல்வித் துறை தீவிரம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், வட்டார, மாவட்ட அளவிலுள்ள கல்வித்துறை அதிகாரிகள் உண்மையான தகவல்களை அரசுக்கு கொடுக்கப்போவதில்லை என்பதே உண்மை’’ என்று ஆதங்கத்தோடு தெரிவிக்கிறார்.

மேலும் தொடர்ந்த அவர் ‘‘பள்ளிப் பகுதியிலுள்ள பொதுமக்களிடம் சென்று விசாரித்தால்தான் உண்மைகளைக் கண்டறிய முடியும். தனியார் பள்ளிகள் அருகிலுள்ள மற்றும் சாலைகளிலுள்ள CCTV-களை ஆய்வு செய்தாலே விடுமுறை நாட்களில் பள்ளி வாகனங்கள் இயக்கப்பட்டதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், கல்வித்துறை இப்படிப்பட்ட முயற்சிகளை நிச்சயம் எடுக்கப்போவதில்லை. அதேபோல இந்த ஆண்டு புதிய பாடநூல்கள் நடைமுறைக்கு வந்துள்ளதால், பாடங்களை முடிப்பதற்கு, கூடுதல் காலம் தேவை என்பதற்காகத் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் சனி, ஞாயிறு மற்றும் பிற அரசு விடுமுறை நாட்களிலும் நடப்பதாகக் கூறப்படுகிறது. இக்கல்வியாண்டு மட்டுமில்லை, சிறப்பு வகுப்புகள் நடப்பது தனியார்ப் பள்ளிகளின் வழக்கமான நடைமுறை.

விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று தனியார்ப் பள்ளிகள் விளம்பரம் செய்துதான் பெற்றோர்களை ஈர்க்கின்றனர். சிறப்பு வகுப்பு என்ற பெயரில் மாணவர்களை 12 மணிநேரம் தொடர்ந்து மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் வருத்துவது தவறு. மெதுவாகக் கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்பு என்று அறிவிப்பதுண்டு. ஆனால், தங்கள் பள்ளி அதிகமான மதிப்பெண் பெறவேண்டும் என்பதற்காக நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கே சிறப்பு வகுப்புகளில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது உண்மை. பொதுத் தேர்வில் தோல்வியடையும் நிலையிலுள்ள மெதுவாகக் கற்கும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கி பள்ளியை விட்டு நீக்கி தனித் தேர்வர்களாகத் தேர்வெழுத வைக்கும் அவலமும் தனியார் பள்ளிகளில் நடக்கிறது’’ என்கிறார் மூர்த்தி.

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

X