வருமான வரி செலுத்த சுற்றறிக்கை!

2/13/2020 5:12:21 PM

வருமான வரி செலுத்த சுற்றறிக்கை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி-வேலை வழிகாட்டி

வருமானவரி விலக்கு உச்சவரம்பை தற்போதுள்ள ரூ.2.50 லட்சத்தில் இருந்து, ஆண்டுக்கு ரூ. 4 லட்சமாக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்துவருகிறது என்ற தகவல் 2017ல் பரவியது. ஆனால், அப்படி எந்த மாற்றமும் நிகழவில்லை. வருமான வரி ஏய்ப்பு நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கும், அவற்றைத் தடுப்பதற்கும் மத்திய அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உரிய காலத்தில் வருமான வரி செலுத்தவேண்டியதன் அவசியத்தை அனைத்து தரப்பு மக்களிடமும் எடுத்துரைத்து வருகின்றனர். பொதுவாக, ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் தங்களது கணக்கைத் தாக்கல் செய்வது அவசியம்.

அதன்படி ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கும் அதிகமான வருமானம் ஈட்டுபவர்கள் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு விவரங்களை வழங்காவிட்டால், அவர்கள் ஊதியத்தில் இருந்து வரியாக 20 சதவீதம் பிடிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஜனவரி 16-ம் தேதி வருமான வரித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையின் படி டிடிஎஸ்-ஆக 20 சதவீதம் ஊதியத்திலிருந்து கழிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.டிடிஎஸ் பேமென்ட் மற்றும் வருவாயைக் கவனமாகக் கண்காணிக்கவே இந்த விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2018-19-ம் நிதியாண்டில் இந்தப் பிரிவில் நேரடி வரிவருவாயில் 37 சதவீதம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி வருமான வரித்துறை வெளியிட்ட 86 பக்க சுற்றறிக்கையில் “வருமான வரிச்சட்டம் பிரிவு 206-ஏஏ-ன்படி ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கு மேல் ஊதியம் பெறுபவர்கள் பான் கார்டு, ஆதார் விவரங்களைத் தெரிவிப்பது கட்டாயமாகும். இந்தப் பிரிவின் கீழ் பெறக்கூடிய வருமானம் வரிப் பிடித்தத்திற்கு உட்பட்டதே. ஒரு ஊழியர் பான்கார்டு, ஆதார் விவரங்களை வழங்கத் தவறும்பட்சத்தில் அவரின் ஊதியத்திலிருந்து 20 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாகவோ பிடித்தம் செய்ய அவரே பொறுப்பாகிறார். ஒருவேளை ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், எந்தவிதமான வரியும் வசூலிக்கப்படாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X