20 ஆயிரம் ரூபாயில் மினி டிராக்டர்!

2/14/2020 5:34:48 PM

20 ஆயிரம் ரூபாயில் மினி டிராக்டர்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி-வேலை வழிகாட்டி

அரசுப் பள்ளி மாணவனின் புது முயற்சி!

‘‘அப்பா ஈஸ்வரன், அம்மா சாந்தி இருவருமே நெசவுத்தொழிலாளிகள். எனக்கு ஒரு தம்பி, அவன் பெயர் தயாநிதி. மாணவர்களின் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு மத்திய அரசு தயாரிப்புச் செலவு வழங்குவதுடன் விருதும் வழங்கும், உங்களில் ஆர்வம் இருப்பவர்கள் பெயர் கொடுங்கள் என எங்கள் பள்ளியில் கூறினார்கள். விவசாயிகள்தான் நாட்டின் முதுகெலும்பு என்பதால் விவசாயத்தைப் பாதுகாக்கும் வகையில் நான் ஒரு மினி டிராக்டரை கண்டுபிடிக்க வேண்டும் என எனது அப்பாவிடம் சொன்னேன், அவரும் எனக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதி கூறினார். இதனையடுத்து பள்ளியில் பெயர் கொடுத்தேன். மத்திய அரசு வழங்கிய பத்தாயிரம் ரூபாய் தந்தார்கள், அதனோடு கூடுதலாக பத்தாயிரம் ரூபாய் சேர்த்து வயதானவர்கள் முதற்கொண்டு எல்லோராலும் எளிமையாக இயக்கக்கூடிய டிராக்டர் தயாரிப்பில் இறங்கினேன். அப்பாவும், தம்பி தயாநிதியும் உதவி செய்ததோடு ஊக்கமும் அளித்தார்கள்’’ என்ற அனிஷ் தன் கண்டுபிடிப்பின் பயன்பாடு மற்றும் தயாரித்த விதத்தை விவரிக்க தொடங்கினார்.

‘‘என் தந்தை மற்றும் தம்பியின் ஒத்துழைப்போடும் என் பள்ளி ஆசிரியர் முருகேசன் வழிகாட்டுதலோடும் ஒரு மினி டிராக்டரை உருவாக்கினேன். அதை நாமக்கல்லிலுள்ள ஸ்பெக்ட்ரம் அகாடெமியில் இன்ஸ்பயர் அவார்டுக்காக நடைபெற்ற நிகழ்ச்சிக்குக் கொண்டு சென்றேன், மரவள்ளிக்கிழங்கு, பருத்தி, வாழைமரம், கரும்பு போன்றவற்றிற்கு களை எடுக்கலாம், பாக்கு மரம், வேம்பு, கொய்யா, தென்னை, மாமரம் போன்றவற்றிற்கு அடியில் வளரும் புற்களை நீக்கி மண்ணைக் கிளறி பண்படுத்தலாம் என விளக்கம் அளித்தேன். பாராட்டுகள் கிடைத்துள்ளது. இன்ஸ்பயர் அவார்டு கிடைக்குமா என்பது பிறகுதான் தெரியவரும். மோட்டார் சைக்கிள் டயர், ஒரு மோட்டார் சைக்கிளின் எஞ்சினைப் பொருத்தி இந்த மினி டிராக்டரைத் தயாரித்துள்ளேன். இதனைக் கொண்டு, புஞ்சை நிலம் மற்றும் மானாவாரி இடங்களில் உழவு செய்யலாம். மற்றபடி கொஞ்சம் கனமான பொருட்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்ல என பல வகையிலும் பயன்படுத்தலாம்.

இந்த மினி டிராக்டர் தற்போது நடந்துகொண்டே இயக்குவதுபோல வடிவமைத்துள்ளேன். அடுத்தகட்டமாக உட்கார்ந்துகொண்டு இயக்குவது போலவும் வடிவமைக்கவுள்ளேன். பெட்ரோலில் இயக்கப்படுவதால் புகை வருகிறது, அதனால் காற்று மாசுபடும். எனவே, அதனை மாற்றி மின்சாரத்தை சேமித்து பேட்டரியில் இயங்கும்படியும் செய்யலாம் என முயற்சி செய்து வருகிறேன்’’ என்று உத்வேகத்தோடு தெரிவித்த அனிஷ், ‘‘விவசாயப் படிப்பின் மீது எனக்கு ஆர்வம் உள்ளது. அதில், உயர் படிப்பு படித்து விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்’’ என்றான். தன்னைப்போலவே தன் தம்பியும் ஆழ்துளை கிணற்றிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றும் கருவியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறினான் பள்ளி மாணவன் அனிஷ். இன்றைய போட்டி மிகுந்த உலகில் தனித்திறமையுடன் வரவேண்டுமென்றால் அதற்கான முயற்சி செய்தே ஆகவேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் திறமை, ஆர்வம் வேறுபடும். மாணவர்களின் திறமைக்கு ஏற்றவாறு பள்ளியைத் தேர்ந்தெடுக்கலாம். அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் பலர் தங்கள் துறைகளில் சாதனைபுரிவதற்குக் காரணம் அவர்கள் பாடங்களை முறையாகக் கற்றதுடன், பள்ளிக் கல்வி அல்லாத சில திறமைகளை வளர்த்துக் கொண்டதும்தான்.

அதற்குத் தேவையான நேரமும் முயற்சியும் இருந்ததால் அவர்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால், இன்று பல தனியார் பள்ளிகளில் பரிட்சையில் வெற்றி பெறத் தேவையான அனைத்தும் அளவுக் கதிகமாக மாணவர்களிடம் திணிக்கப்படுகிறது. இன்றைய பள்ளிகளில் அனைவருக்கும் ஒரே முறையில் திறமைகளைத் திணிக்க முற் படுகிறார்கள். இதனால் அந்த அளவுக்கு அழுத்தத்தை தாங்க முடியாத மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். பள்ளிக் கல்வி மட்டும் தான் ஒருவரது எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின்மேல் பெரும் எதிர்பார்ப்பை அழுத்தமாக வைக்கின்றனர். ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பள்ளிக் கல்வி முடிக்கும் அனைவரும் மருத்துவராக ஆகப்போவதில்லை.

அதற்கான ஆர்வமும் திறமையும் அனைத்து மாணவர்களுக்கும் இல்லை என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும். இதைத் தான் படிக்க வேண்டும் என்று கூறாமல் எதை அவர்களால் சிறப்பாகச் செய்ய முடியுமோ எந்தத் துறையில் திறமையாக விளங்க முடியுமோ அதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அனிஷின் தந்தை தன் மகனின் தனித்திறனை, விருப்பத்தை உணர்ந்து ஊக்கமளித்ததால்தான் இன்று மினி டிராக்டர் என்ற ஒரு கருவியை வடிவமைக் முடிந்தது. எனவே, அவரவர்களுக்கு ஆர்வம் எதில் உள்ளதோ அதில் அவர்களைக் கவனம் செலுத்தவிட்டால் அம்மாணவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

X