மாதம் ரூ.20,000 உதவித்தொகையுடன் மெட்ரோ ரயில் தொழில்நுட்பம் படிக்கலாம்!

7/7/2017 2:25:24 PM

மாதம் ரூ.20,000 உதவித்தொகையுடன் மெட்ரோ ரயில் தொழில்நுட்பம் படிக்கலாம்!

இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவற்றின் கூட்டாண்மை நிறுவனமாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் நிதியுதவியுடன் சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் ‘மெட்ரோ ரயில் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை’ (P.G.Diploma in Metro Rail Technology and Management) எனும் ஒரு வருடகால அளவிலான முதுநிலைப் பட்டயப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முதுநிலைப் பட்டயப்படிப்பில் சேர்க்கை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

கல்வித்தகுதி: இப்படிப்புக்கு விண்ணப்பிக்க ஏதாவதொரு பல்கலைக்கழகத்தில் கட்டுமானப் பொறியியல் (Civil Engineering) பட்டப்படிப்பில் (BE/B.Tech) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், கூட்டு மதிப்பெண்களாக (Aggregate Marks) 70% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்கள், பொறியியல் தகுதித் தேர்வில் (GATE) தேர்ச்சி பெற்றுத் தகுதியுடையவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்களின் வயது 4.7.2017 அன்று 28 வயதுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும். ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: இப்படிப்பிற்கான விண்ணப்பப் படிவத்தினைச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் http://chennaimetrorail.org என்ற இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை நிரப்பித் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அஞ்சல் உறையின் மேல் “Application for PG Diploma Course” என்று குறிப்பிட்டு “The Course Coordinator, CMRL Sponsored PG Diploma Course, Department of Civil Engineering, IIT Madras, Chennai 600036” எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பம் சென்று சேரக் கடைசித் தேதி 4.7.2017.

மாணவர் சேர்க்கை: இப்பட்டயப்படிப்புக்காக வரப்பெற்ற விண்ணப்பங்களிலிருந்து விண்ணப்பதாரர் பொறியியல் தகுதித் தேர்வு (GATE) மற்றும் பொறியியல் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு தகுதியுடைய மாணவர்கள் பட்டியல் ஒன்று தயார் செய்யப்படும்.

இப்பட்டியலுக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சென்னை, இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப் படும். அதன் பின்னர், இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு உடற்தகுதிச் சோதனைக்குப் பிறகு இறுதியாகச் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்படும்.

பயிற்சி: தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மாதம் ரூ.20,000/- உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படும். இவர்கள் பயிற்சிக் காலத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயிற்சி அதிகாரிகளாகவும் இருப்பார்கள். ஒரு வருட காலப் படிப்பை நிறைவு செய்தவர்கள், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ஐந்து வருடகாலத்திற்கான ஒப்பந்த அடிப்படையில், ரூ.40,000 மாதச் சம்பளத்தில் ‘உதவி மேலாளர்’ பணியில் அமர்த்தப்படுவார்கள்.

ஐந்து வருட கால நிறைவுக்குப் பின்பு இப்பணியிடத்தின் ஒப்பந்தம் மீண்டும் நீட்டிக்கப்படலாம். இந்த முதுநிலைப் பட்டயப்படிப்பு குறித்த மேலும் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள மேற்காணும் இணையதளத்தைப் பார்வையிடலாம். சென்னை, கோயம்பேட்டில் அமைந்திருக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது நிறுவனத்தின் 044 - 23792000 எனும் தொலைபேசி எண்ணிலோ chennaimetrorail@cmrl.in எனும் மின்னஞ்சல் வழியிலோ தொடர்புகொண்டும் தகவல்களைப் பெறலாம்.

- தேனி மு. சுப்பிரமணி

X