முனைவர் பட்ட ஆய்வு, மேலாய்வுக்கு உதவித்தொகை!

8/23/2017 12:13:15 PM

முனைவர் பட்ட ஆய்வு, மேலாய்வுக்கு உதவித்தொகை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் அறிவிப்பு!

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி நிறுவனமாகச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (Central Institute of Classical Tamil) செயல்பட்டுவருகிறது. இந்நிறுவனம் செம்மொழித் தமிழ்ப் புலமையினை மேம்படுத்துவதற்காக, முனைவர் பட்ட மேலாய்வு, முனைவர் பட்ட ஆய்வு போன்றவற்றுக்கான உதவித்தொகையினைத் தகுதியுடையவர்களுக்கு வழங்கிவருகிறது. இந்நிறுவனம் 2017-2018ம் ஆண்டிற்கான உதவித்தொகை வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள்: முனைவர் பட்ட ஆய்வு இந்த உதவித்தொகையைப் பெற விரும்புவோர் பல்கலைக்கழகத்திலோ, நிறுவனத்திலோ முழுநேர முனைவர் பட்ட ஆய்விற்காகப் பதிவு செய்திருக்க வேண்டும். இலக்கியம், மொழியியல், மானிடவியல், சமூகவியல், கல்வியியல், தொல்லியல், கல்வெட்டியல், இசையியல், நிகழ்த்துகலைகள், வழக்காற்றியல் போன்ற ஏதாவதொரு துறையில் 55% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்று முதுகலைப் பட்டம் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5% மதிப்பெண்கள் வரை தளர்வு உண்டு.

முனைவர் பட்டத்திற்கான தலைப்பு செம்மொழி நிறுவனம் வரையறுத்துள்ளபடி கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகவும். செவ்வியல் நூல்கள் 41 குறித்த தலைப்பில் ஏதாவதொரு பொருளைக் கொண்டதாக இருக்க வேண்டும்.இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பவருக்கு 2.9.2017 அன்று 30 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மூன்று ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும் வயது தளர்வு அளிக்கப்படும். தங்களது முதுகலைப் பட்டம் தொடர்பான ஆய்வுப் பட்டறிவு உடையவர்கள், உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பித்தால் மேலும் ஐந்து ஆண்டுகள் வரை வயதுத் தளர்வு அளிக்கப்படும்.     

முனைவர் பட்ட மேலாய்வு: இலக்கியம், மொழியியல், மானிடவியல், சமூகவியல், கல்வியியல், தொல்லியல், கல்வெட்டியல், இசையியல், நிகழ்த்துகலைகள், வழக்காற்றியல், மெய்ப்பொருளியல் போன்ற ஏதாவதொரு துறையில் செம்மொழி நிறுவனம் வரையறுத்துள்ளபடி கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட 41 செவ்வியல் இலக்கியங்களோடு தொடர்புடைய தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பவருக்கு 2.9.2017 அன்று 40 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மூன்று ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும் வயதுத் தளர்வு அளிக்கப்படும். நிலையான பணியில் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்க இயலாது.தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராதவர்கள், தமிழை ஒரு பாடமாகப் படிக்காதவர்கள் விண்ணப்பிக்கும் நிலையில், தமிழில் பயிற்சி உடையவர்கள் என்பதற்கான சான்றினை இணைக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: முனைவர் பட்ட ஆய்வு மற்றும் முனைவர் பட்ட மேலாய்வு ஆகிய இரண்டு உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் http://www.cict.in எனும் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது இந்நிறுவனத்தின் அலுவலகத்திலிருந்து நேரடியாகவோ, அஞ்சல் வழியிலோ பெற்றுக் கொள்ளலாம்.

நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் ‘பதிவாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், எண்.40, நூறடிச் சாலை, தரமணி, சென்னை  600113’ எனும் முகவரிக்குத் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 2.9.2017.

தேர்வுகள்: விண்ணப்பித்தவர்களுக்கு முதலில் எழுத்துத் தேர்வும், அதனைத் தொடர்ந்து நேர்முகத்தேர்வும் என இரு தேர்வுகள் நடத்தப்படும். இத்தேர்வுகள் வழியாக தகுதியுடையவர்கள் மதிப்பீடு செய்யப்படுவார்கள். முனைவர் பட்ட மேலாய்வுக்கான உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் தற்போது நடைபெற்று வரும் திட்டப் பணிகளையும், இனி மேற்கொள்ளவிருக்கும் திட்டப் பணிகளையும் நிறைவேற்றத்தக்கதான பொருத்தப்பாடுகளும், வேண்டல்களும் கணக்கில் கொள்ளப்படும்.

உதவித்தொகை: இந்நிறுவனத்தின் உதவித்தொகை வழங்குவதற்குத் தேர்வு செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை, உள்ளீட்டுத் தேர்வு மற்றும் வழங்கல் போன்ற அனைத்திலும் இந்நிறுவனத்தின் இயக்குநரின் முடிவே இறுதியானது. இதுபோன்று தகுதியுடையவர்களுக்கான தேர்வு இந்திய அரசின் இடஒதுக்கீட்டு முறையையும் பின்பற்றி இருக்கும். முனைவர் பட்ட ஆய்வுக்கான உதவித்தொகைக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ.12,000 வீதம் இரண்டாண்டுகளுக்கு அளிக்கப்படும்.

இதுதவிர, ஆய்வு தொடர்பான பிற செலவினங்களுக்காக ஆண்டுதோறும் ரூ.12,000 அளிக்கப்படும். முனைவர் பட்ட மேலாய்வுக்கான உதவித்தொகைக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ.18,000 வீதம் இரண்டாண்டுகளுக்கு அளிக்கப்படும். இது தவிர, ஆய்வு தொடர்பான பிற செலவினங்களுக்காக ஆண்டுதோறும் ரூ.30,000 அளிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு மேற்காணும் இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது மேற்காணும் முகவரியில் அமைந்திருக்கும் இந்நிறுவன அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்றோ அல்லது 044 - 22540125 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ கூடுதல் தகவல்களைப்
பெற்றுக்கொள்ளலாம்.

- முத்துக்கமலம்

X