செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முனைவர் பட்ட ஆய்வு உதவித்தொகை பெற விருப்பமா?

9/1/2017 5:42:35 PM

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முனைவர் பட்ட ஆய்வு உதவித்தொகை பெற விருப்பமா?

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி நிறுவனமாகச் செயல்பட்டு வரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செம்மொழித் தமிழ்ப் புலமையினை மேம்படுத்துவதற்காக, முனைவர் பட்ட மேலாய்வு, முனைவர் பட்ட ஆய்வு போன்றவைகளுக்கான உதவித்தொகையினைத் வழங்கி வருகிறது. இந்நிறுவனம் 2017-2018 ஆம் ஆண்டிற்கான உதவித்தொகைக்கான
விண்ணப்பங்களை வரவேற்கிறது.

உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள்
முனைவர் பட்ட ஆய்வு பல்கலைக்கழகத்திலோ, நிறுவனத்திலோ முழுநேர முனைவர் பட்ட ஆய்விற்காக ரெஜிஸ்டர் செய்திருக்க வேண்டும். இலக்கியம், மொழியியல், மானிடவியல், சமூகவியல், கல்வியியல், தொல்லியல், கல்வெட்டியல், இசையியல், நிகழ்த்துக்கலைகள், வழக்காற்றியல் போன்ற ஏதாவதொரு துறையில் 55% மதிப்பெண்ணோடு முதுகலைப் பட்டம் தேர்ச்சி தேவை. எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு 5% மதிப்பெண்கள் வரை தளர்வுண்டு.

முனைவர் பட்டத்திற்கான தலைப்பு செம்மொழி நிறுவனத்தின் விதிப்படி கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டும். செவ்வியல் நூல்கள் 41 குறித்த தலைப்பில் ஏதாவதொரு பொருளைக் கொண்டதாக இருப்பது அவசியம். விண்ணப்பிப்பவருக்கு 2-9-2017 அன்று 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயதுத் தளர்வுண்டு. தங்களது முதுகலைப் பட்டத்தில் ஆய்வுப் பட்டறிவு உடையவர்கள், உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பித்தால் மேலும் 5 ஆண்டுகள் வரை வயதுத் தளர்வுண்டு.

முனைவர் பட்ட மேலாய்வு
இலக்கியம், மொழியியல், மானிடவியல், சமூகவியல், கல்வியியல், தொல்லியல், கல்வெட்டியல், இசையியல், நிகழ்த்துகலைகள், வழக்காற்றியல், மெய்ப்பொருளியல் போன்ற ஏதாவதொரு துறையில் செம்மொழி நிறுவனம் வரையறுத்துள்ளபடி கி.பி. 6 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட 41 செவ்வியல் இலக்கியங்களோடு தொடர்புடைய தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.  

இதற்கு விண்ணப்பிக்க, 2-9-2017 அன்று 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டு களும் வயதுத் தளர்வுண்டு. நிலையான பணியில் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராதவர்கள், தமிழை ஒரு பாடமாகப் படிக்காதவர்கள் விண்ணப்பிக்கும் நிலையில், தமிழில் பயிற்சிச் சான்றினை இணைக்க வேண்டும்.

விண்ணப்பம்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் http://www.cict.in/ எனும் இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது இந்நிறுவனத்தின் அலுவலகத்திலிருந்து நேரடியாகவோ, அஞ்சல் வழியிலோ பெற்றுக் கொள்ளலாம். நிரப்பிய விண்ணப்பங்களை ”பதிவாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், எண்.40, நூறடிச் சாலை, தரமணி, சென்னை - 600113” எனும் முகவரிக்குத் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பங்கள் சென்றடையக் கடைசி நாள்: 02-09-2017.

தேர்வுகள்
விண்ணப்பித்தவர்களுக்கு முதலில் எழுத்துத்தேர்வு, பின் நேர்முகத் தேர்வு என இரு தேர்வுகள் நடைபெறும். முனைவர் பட்ட மேலாய்வுக்கான உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்தவர்களுக்குச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் தற்போது நடைபெற்றுவரும் திட்டப்பணிகளையும், இனி மேற்கொள்ளவிருக்கும் திட்டப் பணிகளையும் நிறைவேற்றத்தக்கதான பொருத்தப் பாடுகளும், வேண்டல்களும் கணக்கில் கொள்ளப்படும்.

உதவித்தொகை
உதவித் தொகை வழங்குவதற்குத் தேர்வு செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை, உள்ளிட்டுத் தேர்வு மற்றும் வழங்கல் போன்றவற்றில் நிறுவனத்தின் இயக்குநரின் முடிவே இறுதியானது. இதுபோன்று தகுதியுடையவர்களுக்கான தேர்வு இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதியைப் பின்பற்றியிருக்கும்.

முனைவர் பட்ட ஆய்வுக்கான உதவித்தொகை மாதம் ஒன்றுக்கு ரூ.12,000/-(2 ஆண்டு களுக்கு). ஆய்வு தொடர்பான பிற செலவு களுக்கு ஆண்டுதோறும் ரூ.12,000/- தனி. முனைவர் பட்ட மேலாய்வுக்கான உதவித்தொகை மாதம் ஒன்றுக்கு ரூ 18,000/-(2 ஆண்டுகளுக்கு). பிற செலவினங்களுக்காக ஆண்டுதோறும் ரூ 30,000/- தனி. கூடுதல் தகவல்களுக்கு, மேற்காணும் முகவரியில் அமைந்திருக்கும் இந்நிறுவன அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று அல்லது 044 - 22540125 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

- தேனி மு. சுப்பிரமணி

X