ஊக்கத்தொகையுடன் நாடகப் படிப்பு!

4/3/2018 4:47:55 PM

ஊக்கத்தொகையுடன் நாடகப் படிப்பு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

புதுடெல்லியில் உள்ள நாடகப் படிப்புகளுக்கான,தேசிய நாடகப் பள்ளி (National School of Drama) மத்திய அரசின் பண்பாடு மற்றும் கலாசாரத் துறையின் கீழ் இயங்குகிறது. இப்பள்ளி ஒரு தன்னாட்சி அமைப்பாக செயல்படுகிறது. நாடகக் கலைகளுக்கான மூன்று வருட டிப்ளமோ படிப்பிற்கு, தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்ய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜூலை 16 அன்று தொடங்கவுள்ள இப்படிப்பில் நடிப்பு, வடிவமைப்பு, இயக்கம் மற்றும் இவை தொடர்பான கலைகள் கற்றுத் தரப்படுகின்றன. இப்படிப்பு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி வழியாக இருக்கும்.

கல்வித்தகுதி: இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் அல்லது மொழி அறிவுடன் குறைந்தது ஆறு மாதம் தியேட்டர் புரொடக்சனில் பணி அனுபவ அறிவு இருக்க வேண்டும். இத்துடன் தியேட்டர் தொடர்பான வல்லுநர்களிடமிருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: விண்ணப்பிக்க பொதுப்பிரிவினர் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு 30 ஆண்டுகள். ஆதிதிராவிடர், பழங்குடியினர்க்கு 5 ஆண்டுகள் வயதில் சலுகை உண்டு.தேர்வு செய்யும் முறை: தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்ய இரண்டு கட்ட தேர்வு நடைபெறும். முதல் கட்டத் தேர்வு நுழைவுத் தேர்வு ஆகும். இந்த நுழைவுத் தேர்வும் ஆடிசன் தேர்வும் (Preliminary Test/Audition) 12 தேர்வு மையங்களில் நடைபெறும்.

சென்னையில் 22.05.2018 அன்று நடைபெறும். இதற்கான பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜூன் 26 முதல் 30 வரை டெல்லி நாடகப் பள்ளியில் பயிற்சிப் பட்டறைக்கு (work shop)அழைக்கப்படுவார்கள். இதற்கான போக்குவரத்துக் கட்டணம், இடவசதி மாணவர்களுக்கு வழங்கப்படும். இப்பயிற்சிப் பட்டறையில் மாணவர்களின் நுண்ணறிவு மற்றும் திறமைகள் தக்க வல்லுநர் குழுவால் சோதித்தறியப்படும்.

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மருத்துவச் சோதனைக்கு அனுப்பப்படுவார்கள்.தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.8000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இப்படிப்பிற்கு மூன்று முறைகளில் விண்ணப்பிக்கலாம்.

முதல் முறையில், http:// www.onlineadmission.nsd.gov.in என்ற இணையம் வழியாக 16.04.2018 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணம் ரூ.50. இரண்டாம் முறையில் நாடகப்பள்ளியின் இணையமான www.nsd.gov.in வழியாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்துடன், ‘‘The Director, National School of Drama, New Delhi’’ என்றவாறு ரூ.150-க்கும் டிமாண்ட் டிராஃப்ட் (Demand Draft) எடுத்து இணைத்து அனுப்ப வேண்டும். உறையின் மேல் ‘‘Application for Admission 2018-21’’ என்று எழுத வேண்டும்.மூன்றாம் முறையில் நாடகப் பள்ளி யில் நூல் விற்பனை நிலையத்தில் ரூ.150-க்கு விண்ணப்பத்தை நேரில் பெற்று விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பத்தை சமர்ப்பிக்க இறுதி நாள்: 16.04.2018.

- ஆர்.ராஜராஜன்

X