எஸ்.சி./எஸ்.டி. மாணவர்களுக்கு ONGC வழங்கும் உதவித்தொகை!

12/27/2018 3:20:34 PM

எஸ்.சி./எஸ்.டி. மாணவர்களுக்கு ONGC வழங்கும் உதவித்தொகை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

குடும்பச் சூழல் மற்றும் வறுமையின் காரணமாக ஒரு பின்தங்கிய மாணவனின் உயர்கல்வி படிப்பு தடைபடக்கூடாது என்ற நோக்கில் ஒவ்வோர் ஆண்டும் உதவித்தொகை வழங்கிவருகிறது (Oil and Natural Gas Corporation Limited) ONGC நிறுவனம். இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் எஞ்சினியரிங், மருத்துவம் போன்ற உயர்கல்வி பயில்வதற்கு உதவும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இவ்வாண்டுக்கான நான்கு உயர்கல்வி படிப்புகளுக்கு தலா 4,000 வீதம் 1000 பேருக்கு உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

எஞ்சினியரிங் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 494, எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கு 90, பிசினெஸ் அட்மினிஸ்டிரேஷன் சார்ந்த முதுகலைப் படிப்புகளான எம்.பி.ஏ. 146 மற்றும் ஜுவாலஜி/ஜியோ பிசிக்ஸ் படிப்புகளுக்கு 270 என மொத்தம் 1000 பேருக்கு உதவித்தொகைகள் வழங்கப்படவுள்ளது. இந்திய மாநிலங்களை ஐந்து மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திற்கும் 200 உதவித்தொகைகள் வீதம் மொத்தம் 1000 உதவித்தொகைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேவையான தகுதி :

மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற கல்விநிறுவனங்களில் எம்.பி.பி.எஸ்/எஞ்சினியரிங்/எம்.பி.ஏ போன்ற படிப்புகளில் முதல் ஆண்டு படித்துவரும் மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள் ஆவர். எம்.பி.பி.எஸ் மற்றும் எஞ்சினியரிங் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் +2வில் 60% மதிப்பெண்ணும், முதுகலை தேர்ந்தெடுத்தவர்கள் இளங்கலையில் சி.ஜி.பி.ஏ. 6.0 என்ற அளவில் அதாவது 60% மதிப்பெண்கள் பெற்றிருத்தல் அவசியம். மேலும் விண்ணப்பதாரர்களின் ஓர் ஆண்டு குடும்ப வருமானம் ரூ4.50 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் அவசியம்.  

வயதுவரம்பு :

விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் 1.11.2018 அன்றின்படி 30 வயதிற்கு மிகாமல் இருத்தல் அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.ongcindia.com என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்யவேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்துடன் படிக்கும் கல்லூரியின் முதல்வர் / துறைத் தலைவரின் சான்றொப்பம் பெற்று ‘Green Hills, Tel Bhavan, Dehradun- 248003’ என்ற முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.1.2019.  

குறிப்பு

* ஏற்கனவே தனியார் அல்லது அரசிடமிருந்து உதவித்தொகை பெறும் மாணவர்கள் விண்ணப்பிக்கக்கூடாது.
* மாணவர்களின் மதிப்பெண்கள் 50% -க்கு குறைவாகும் பட்சத்தில் உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்படும்.
* மேலும் விவரங்களுக்கு www.ongcindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

- வெங்கட்.

X