கல்விக்கான உதவித் தொகைகள்!

5/27/2019 3:01:55 PM

கல்விக்கான உதவித் தொகைகள்!

நன்றி குங்குமம் கல்வி- வழிக்காட்டி

*ஸ்காலர்ஷிப்

டீம் எவரெஸ்ட் -  ‘I am the change’  

உதவித்தொகை டீம் எவரெஸ்ட் கடந்த 12 வருடங்களாக 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கல்லூரிப் படிப்பு பயில உதவியுள்ளது. இந்த வருடம் டீம் எவரெஸ்ட், சென்னையில் உள்ள, பெற்றோர் இல்லாத அல்லது தாயையோ, தந்தையையோ இழந்த மாணவ, மாணவிகளுக்கு 2019 ஆம் ஆண்டில் கல்லூரியில் இளநிலைப் படிப்பில் (UG Degree) சேர `I am the change Scholarship’ எனும் கல்வி உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

டீம் எவரெஸ்ட் - `I am the change’ கல்வி உதவித் தொகைத் திட்டம் கீழ்வரும் சலுகைகளை உள்ளடக்கியது.

* ஆண்டுதோறும் 30,000/- ரூபாய் வரை உதவித்தொகையாக வழங்கப்படும். இந்தத் தொகையை கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், உணவு விடுதிக் கட்டணம், பேருந்து கட்டணம் அல்லது புத்தகக் கட்டணம் போன்றவற்றிற்கு உபயோகிக்கலாம்.
* உதவித்தொகை பெற தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகள் டீம் எவரெஸ்ட் நடத்தும் வார இறுதி வகுப்புகளில் ஆண்டொன்றுக்கு 100 மணி நேரமாவது பங்கேற்க வேண்டும். டீம் எவரெஸ்ட் நடத்தும் உள்ளிருப்புப் பயிற்சியிலும் (Internship) கண்டிப்பாக பங்கேற்க வேண்டும்.

உதவித்தொகைக்கு  விண்ணப்பிக்க தகுதிகள்

* மாணவ/மாணவிகள் பள்ளி இறுதித் தேர்வில் (Plus-2) 60% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.
* அரசு, அரசு உதவி பெறும் மற்றும் கார்ப்பரேஷன் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், தனியார் பள்ளி மாணவர்களாக இருந்தால் அவர்களது பள்ளி கல்விக் கட்டணம் ரூபாய் 20,000-க்குள் இருக்க வேண்டும் அல்லது வேறு ஏதேனும் உதவித்தொகை மூலம் படித்திருக்க வேண்டும்.
* குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
* பெற்றோர் இல்லாத (Parentless) அல்லது தாயையோ, தந்தையையோ இழந்த (Single Parented) மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
* இந்த உதவித்தொகை சலுகை (Merit Quota) முறையில் கல்லூரியில் இடம் பெற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும். நிர்வாகம் (Management Quota) மூலம் கல்லூரியில் இடம்பெற்றவர்களுக்கு இது பொருந்தாது.

உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான  வழிமுறைகள்

மாணவ, மாணவிகள் 8955664410 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்புகொள்ள வேண்டும்.
Website: www.everestscholarship.com
விண்ணப்பித்த பின், டீம் எவரெஸ்ட் அமைப்பு மாணவ, மாணவியரைத் தேர்ந்தெடுத்து, இந்த உதவித்தொகையை வழங்கும்.

மாநில அரசு வழங்கும் பள்ளிக் கல்வி, உயர்கல்வி உதவித்தொகைகள்!

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவியருக்கு பின்வரும் திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பள்ளி படிப்பு உதவித்தொகை

பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.2,00,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். மற்றும் குடும்பத்தில் பட்டதாரி எவரும் இருக்கக்கூடாது என்ற நிபந்தனைகளுக்குட்பட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சார்ந்த 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு கற்பிப்பு கட்டணம் ஆண்டுக்கு ரூ.200 என்ற அளவிலும் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு ரூ.250 என்ற அளவிலும் வழங்கப்படுகிறது.

பள்ளி மேற்படிப்பு உதவித்தொகை

பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.2,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மற்றும் குடும்பத்தில் பட்டதாரி எவரும் இருக்கக்கூடாது என்ற நிபந்தனைகளுக்குட்பட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் ஆங்கில வழிக் கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்த மாணவ மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.500 கற்பிப்பு கட்டணமாக வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு கற்பிப்பு கட்டணம் மேலே குறிப்பிடப்பட்ட அளவில் எவ்வித நிபந்தனையுமின்றி வழங்கப்படுகிறது.

இணையவழி மூலம் பட்டப்படிப்பிற்கான கல்வி உதவித்தொகை

மூன்றாண்டு கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு இலவச கல்வி உதவித்தொகை திட்டம், பாலிடெக்னிக்குகளில் மூன்று வருட பட்டயப்படிப்புகளுக்கு இலவசக் கல்வி உதவித்தொகை திட்டம், தொழிற் கல்வி படிப்புகளுக்கு இலவசக் கல்வி உதவித்தொகை திட்டம் போன்றவை வழங்கப்படுகின்றன.

இணையதள முகவரி http://escholarship.tn.gov.in/scholarship.html

X