ஊக்கத் தொகையுடன் ஆய்வுப் படிப்புகளை மேற்கொள்ளலாம்!

5/27/2019 3:05:24 PM

ஊக்கத் தொகையுடன் ஆய்வுப் படிப்புகளை மேற்கொள்ளலாம்!

நன்றி குங்குமம் கல்வி- வழிக்காட்டி

அறிவியல் மற்றும் எஞ்சினியரிங் துறைகளில் அடிப்படை ஆய்வுகளை மேற்கொள்ள இந்திய மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் 2009 ஆண்டு புது டெல்லியில் நிறுவப்பட்டது Science and Engineering Research Board (SERB).  இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் இவ்வமைப்பானது இந்திய கல்விநிறுவனங்களுடன் இணைந்து அறிவியல் துறைகளில் ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கு பல்வேறு வகையான ஃபெல்லோஷிப் திட்டங்களை அறிமுகப்படுத்தி வழங்கிவருகிறது. அவ்வகையில் 2019 ஆண்டிற்கான National Post Doctoral Fellowship (N-PDF) பெற அறிவிப்பு வெளியாகியுள்ளது.   

ஃபெல்லோஷிப் அறிவியல் மற்றும் பொறியியல் சார்ந்த துறைகளில் ஆய்வுகளை மேற்கொள்ள விரும்பும் போஸ்ட் பிஎச்.டி மாணவர்களுக்கு இரண்டு வருட கால அளவிலான ஃபெல்லோஷிப் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித் தகுதி

விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அங்கீகாரம் பெற்ற கல்விநிறுவனங்களில் Ph.D / M.D / M.S பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். மேலும் ஆய்வை சமர்பித்துவிட்டு முனைவர் பட்டத்திற்காக காத்துக்கொண்டு இருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 30.5.2019 என்ற தேதியின்படி 35 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். எஸ்.சி / எஸ்.டி மாணவர்களுக்கு வயது வரம்பில் ஐந்து வருடத் தளர்வு வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.serbonline.in என்ற இணையதளம் சென்று விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 30.5.2019.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

முனைவர் படிப்பில் மேற்கொண்ட ஆய்வு, இளங்கலை மற்றும் முதுகலையில் எடுத்த மதிப்பெண்கள் ஆகியவற்றால் விண்ணப்பதாரர்கள் ஷார்ட்லிஸ்ட் செய்யப்படுவர். Science and Engineering Research Board ஆல் உருவாக்கப்படும் நிபுணர் குழுவின் பரிந்துரைப்படி ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டவர்கள் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர்.

ஃபெல்லோஷிப்புக்கு வழங்கப்படும் தொகை உள்ளிட்ட அதிக தகவல்களை அறிய www.serb.gov.in என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கவும்.

- துருவா

X