ஊக்கத்தொகையுடன் படிக்கலாம் அறிவியல் துறை பட்டப்படிப்புகள்!

8/7/2019 4:36:13 PM

ஊக்கத்தொகையுடன் படிக்கலாம் அறிவியல் துறை பட்டப்படிப்புகள்!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

* ஊக்கத்தொகை

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிக்கும், அடிப்படை அறிவியல் பிரிவுகளை பட்டப்படிப்பில் எடுத்து கற்பதோடு மட்டுமின்றி, தொடர்ந்து ஆய்வில் ஈடுபடும் உற்சாகமும், உத்வேகமும் உள்ள மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை அறிவித்துள்ளது கிஷோர் வைக்யானிக் புராட்சகன் யோஜனா (Kishore Vaigyanik Protsahan Yojana) நிறுவனம்.

இத்திட்டத்திற்கான பொருளா தாரத்தை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை (Department of Science and Technology Govt of India) தருகிறது. பெங்களூரில் உள்ள Indian Institute of Sciences - Bangalore இந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களும் இத்திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

என்னென்ன படிப்புகளுக்கு ஊக்கத்தொகை?

KVPY திட்டத்துக்கு நடத்தப்படும் தேர்வில் தேர்சி பெறும் B.Sc., BS., B.Stat., B.Maths. M.Sc.,(Integrated), MS.,(Integrated) ஆகிய படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.5000 மற்றும் ஆண்டு இதர செலவினங்கள் (Contigency Grant) ரூ.20,000 வழங்கப்படும். இத்தொகை முதல் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். M.Sc. முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் MSc/MS நான்கு, ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.7000 மற்றும் (Annual Contigency Foro) ரூ.28,000 வழங்கப்படும்.

KVPY-ன் மூன்று திட்டங்கள்

தகுதியான மாணவர்கள் நுண்ணறிவுத் தேர்வு (Aptitude Test) வழியாக தேர்வு செய்யப்படுவார்கள். இதில் மூன்று முறைகளில் மாணவர்கள் தகுதிநிலை நிர்ணயம் செய்யப்படும்.

SA முறை: தற்போது அறிவியல் பாடங்களை +1 வகுப்பில் (2019-20) எடுத்து படித்துக்கொண்டுள்ள, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணிதம், அறிவியல் பாடங்களில் பொதுப் பிரிவினராயின் குறைந்தது 75 விழுக்காடு மதிப்பெண்களும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளாயின் குறைந்தது 65 விழுக்காடு மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். இவர்கள் +2 பொதுத்தேர்வில் அறிவியல் பாடங்களில் பொதுப் பிரிவினராயின் குறைந்தது 60 விழுக்காடும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் குறைந்தது 50 விழுக்காடும் பெற வேண்டும். 2021-22 கல்வி ஆண்டில் இவர்கள் குறிப்பிட்ட அறிவியல் பாடங்களை எடுத்துப் படிக்க மட்டுமே இந்த ஊக்கத்தொகைகள் வழங்கப்படும். இடைப்பட்ட காலத்தில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், விஜ்யோஷி (Vijoshi) தேசிய அறிவியல் முகாமிற்கு அழைக்கப்படுவார்கள். இதற்கான பயணம் உள்ளிட்ட செலவுகளை KVPY ஏற்றுக் கொள்ளும்.

SX முறை: தற்போது அறிவியல் பாடங்களை +2-ல் எடுத்து படித்துக் கொண்டுள்ளவர்கள், பத்தாம் வகுப்பில் கணிதம், அறிவியல் பாடங்களில் பொதுப் பிரிவினராயின் குறைந்தது 75 விழுக்காடு மதிப்பெண்களும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளாயின் குறைந்தது 65 விழுக்காடு மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். இவர்கள் +2 பொதுத் தேர்வில் அறிவியல் பாடங்களில் பொதுப் பிரிவினராயின் குறைந்தது 60 விழுக்காடும், ஆதி திராவிடர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகளாயின் குறைந்தது 50 விழுக்காடு மதிப்பெண்களும் பெற வேண்டும்.

SB முறை: இம்முறையில் பட்டப் படிப்புகளான B.Sc., BS., B.Stat., B.Math, M.Sc. (Integrated) 2019-20 கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டுள்ளவர்கள் +2-ல் அறிவியல் பாடங்களில் பொதுப் பிரிவினராயின் குறைந்தது 60 விழுக்காடு மதிப்பெண்களும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் 50 விழுக்காடு மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

KVPY தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்திமொழிகளில் ஆன்லைனில் நடைபெறும். ‘சரியான விடையைத் தேர்வு’ செய்யும் முறையிலான தேர்வாகும். இத்தேர்வின் முதல் பகுதியில் ஒரு சரியான விடைக்கு ஒரு மதிப்பெண் தரப்படும். தவறான விடைக்கு 0.25 மதிப்பெண் குறைக்கப்படும். இரண்டாம் பகுதியில் சரியான விடைக்கு 2 மதிப்பெண்கள் தரப்படும். தவறான விடைக்கு 0.50 மதிப்பெண் குறையும். SA முறையில் அனைத்து வினாக்களும் கட்டாயமாக விடையளிக்க வேண்டிய வினாக்கள். SB/SX முறையில் தேர்வர்கள் பகுதி ஒன்றில் ஏதேனும் மூன்று பிரிவுகளையும், இரண்டாம் பகுதியில் ஏதேனும் இரண்டு பிரிவுகளையும் எடுத்துக்கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை: இந்திய குடிமக்கள் அனைவரும் விண்ணப்பிக் கலாம். OCI/PIO பிரிவினரின் அனுமதி கர்னாடக உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு காத்திருக்கிறது. விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினர் ரூ.1000, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ரூ.500 செலுத்த வேண்டும். ஆன்லைனில் http://www.kvpy.iisc.ernet.in/main/index.htm என்ற இணையம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 20.8.2019. நுண்ணறிவுத் தேர்வு (Kvpy Aptitude Test) நடைபெறும் நாள் 3.11.2019.

குறிப்பு: சிறந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குப் பல சிறப்பு ஊக்கங்களை KVPY வழங்குகிறது.

தொடர்பிற்கு: The Convener, Kishore Vaigyanik Protsahan Yojana (KVPY), Indian Institute of Science, Bangalore - 560 012 . Telephone:(080) 22932975 / 76, 23601008, 22933536. Email For Application related queries : applications.kvpy@iisc.ac.in. For Fellowship related queries: fellowship.kvpy@iisc.ac.in

-முனைவர் ஆர் ராஜராஜன்

X