உயர்கல்விக்கு உதவும் உதவித் தொகைகள்!

8/20/2019 2:54:19 PM

உயர்கல்விக்கு உதவும் உதவித் தொகைகள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

வசதியான குடும்பப் பின்னணி இருந்தும் படிக்காதவர்கள், செலவு செய்ய காத்திருக்கும் பெற்றோர்களைக்கொண்ட மாணவர்கள் பற்றி பிரச்னை இல்லை. ஆனால், வறுமையான குடும்பச்சூழல் காரணமாக பல ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வியை மேற்கொள்ள முடியாமல் கூலிவேலைக்குச் செல்லும் அவலநிலைக்கு தள்ளப்படுவதுதான் கொடுமை.

பள்ளி அளவில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் பொருளாதாரப் பிரச்னைகள் காரணமாக அவர்களின் உயர்கல்வி படிப்பு என்பது கனவாகவே இருந்துவருகிறது. எனவே, கல்வி கற்பதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக மத்திய அரசு உதவித்தொகை திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அதன்படி ஏழை மற்றும் நடுத்தர சமூகத்து மாணவர்களை உயர்கல்வி படிக்க ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு கல்வி உதவித்தொகைகளை ஒவ்வோர் ஆண்டும் வழங்கிவருகிறது. அதன்படி இவ்வாண்டும் கல்வி உதவித்தொகைகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பட்டயப்படிப்புகளுக்கான உதவித்தொகை

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள் பட்டயப்படிப்புகளில் சேர்வதற்கு ஏதுவாக அறிமுகப்படுத்தப்பட்டது இக்கல்வி உதவித்தொகைத் திட்டம். இந்தியா முழுவதும் உள்ள மொத்தம் 82,000 மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் 50% மாணவிகளுக்கு வழங்கப்படும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. அதன்படி 4,883 தமிழக மாணவர்களுக்கும், 78 புதுச்சேரி மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படவிருக்கிறது. இந்த உதவித்தொகையானது ஆண்டு ஒன்றுக்கு, மத்திய அரசின் இடஒதுக்கீட்டின்படி, ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.10,000 என படிப்பு முடியும் காலம் வரை வழங்கப்படும். கல்வித் தகுதி: விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் +2 முடித்துவிட்டு, இளநிலைப் பட்டப்படிப்பில் சேர்ந்திருக்க வேண்டும். மேலும் +2 பொதுத்தேர்வில் 80% மதிப்பெண் பெற்றவராக இருத்தல் வேண்டும். தொலைநிலை முறையில் +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்க இயலாது. உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்குள் இருத்தல் அவசியம்.

இந்திராகாந்தி  கல்வி உதவித்தொகை

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆண், பெண் விகிதாசாரங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. குழந்தைகளை பெற்றெடுப்பதே பெண்களின் பணி என கருதும் இந்திய சமூக மனநிலையில் பெண்கள் உயர்கல்வியைப் படிக்க வேண்டும் என்பதற்காக பல்கலைகழக மானியக் குழுவால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இந்திராகாந்தி ஸ்காலர்ஷிப். ஆண்டுக்கு ரூ.36,200 வீதம் முதுகலை படிப்புக்கான கால அளவான இரண்டு ஆண்டுகள் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. இந்தியா முழுவதும் மொத்தம் 3,000 மாணவிகளுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் குடும்பத்தில் ஒற்றை அல்லது இரட்டை பெண்குழந்தைகளாக இருக்க வேண்டும். நடப்புக் கல்வி ஆண்டில், பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டு முதுநிலைப் படிப்பு படித்துக்கொண்டிருப்பவர்கள் இக்கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். தொலைநிலை முறையில் படிப்பவர்கள் விண்ணப்பிக்க இயலாது.

தேர்ந்தெடுக்கும் முறை: மாணவிகள் தங்கள் இளங்கலை பட்டப்படிப்பில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர்.

தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

இந்திய சமூக அடுக்கில் மிகவும் பின்தங்கியுள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மாணவர்கள் தொழில்நுட்ப முதுநிலைப் பட்டபடிப்பு படிக்க வழிசெய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது இக்கல்வி உதவித்தொகைத் திட்டம்.
கல்வித் தகுதி: மருத்துவ இயல், பொறியியல், வேளாண்மையியல், சட்டவியல், மருந்தாளுநர் இயல் போன்ற முதுகலைத் தொழில்நுட்பப் படிப்புகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். எம்.இ., எம்.டெக் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.7,800ம் மற்றும் பிற துறைகளில் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.4,500ம் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.scholarships.gov.in என்ற இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேற்கூறிய அனைத்து ஸ்காலர்ஷிப்களுக்கும் விண்ணப்பிக்க கடைசி நாள் 31.10. 2019.

சிறுபான்மையினருக்கு உதவித்தொகை

அரசு அல்லது தனியார் கல்வி நிறுவனங்களில், ஒன்றாம் வகுப்பு முதல் முதுநிலைப் பட்டப்படிப்பு வரை படிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசு உதவித்தொகைகளை வழங்குகிறது.

ப்ரீ மெட்ரிக் உதவித்தொகை

கல்வித் தகுதி: ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயில்பவராக இருக்க வேண்டும். முந்தைய ஆண்டு தேர்வில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரது ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

உதவித்தொகை: வகுப்பைப் பொறுத்து மாதம் ரூ.600 வரை வழங்கப்படும்.

போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை

கல்வித் தகுதி: 11 மற்றும் 12ம் வகுப்பு பயில்பவராக இருக்க வேண்டும். முந்தைய ஆண்டு தேர்வில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரது ஆண்டு வருமானம் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

உதவித்தொகை: ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் இதர செலவினங்களுக்கு மாதம் ரூ.380 வரையிலும் வழங்கப்படும்.

மெரிட் கம் மீன்ஸ் உதவித்தொகை

கல்வித் தகுதி: இளநிலை அல்லது முதுநிலைப் பட்டப்படிப்பு பயில்பவராக இருக்க வேண்டும். முந்தைய ஆண்டு தேர்வில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரது ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

உதவித்தொகை: ஆண்டுக்கு ரூ.20,000 மற்றும் இதர செலவினங்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வரையிலும் வழங்கப்படும். மேலும், குறிப்பிட்ட 85 கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் முழுவதும் திருப்பி வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் 15.10.2019.

முழுமையான விவரங்களுக்கு www.scholarships.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

- குரு

X