10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வுத் தேர்வு!

9/3/2019 2:50:47 PM

10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வுத் தேர்வு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

*திறன் தேர்வு

நாடு முழுவதும் உள்ள திறன் வாய்ந்த பள்ளி மாணவர்களைக் கண்டுபிடித்து உயர்கல்வி பயில அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் State level Talent Search Examination (NTSE). அதன்படி ஒவ்வொரு வருடமும் தகுதியான மாணவர்கள் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய அளவில் நடக்கும் (NCERT) தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக 2019-20 கல்வி ஆண்டுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்வுமுறை: பத்தாம் வகுப்பு பயிலும் திறன் வாய்ந்த மாணவர்கள் மேல்நிலை, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளைப் படிக்க ஊக்கப்படுத்தும் பொருட்டு இத்திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டுவருகிறது. இரண்டு நிலைகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. முதல் நிலை மாநில அளவிலும், இரண்டாம் நிலை தேசிய அளவிலும் நடத்தப்படுகிறது. முதல் நிலையில் மாநில அளவில் சுமார் 466 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பின் இரண்டாம் நிலையில் தேசிய அளவில் சுமார் 3,000 மாணவர்கள் இத்தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

கல்வித் தகுதி: தமிழகத்திலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற கல்விநிறுவனங்களில் நடப்பு ஆண்டில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

உதவித்தொகை: இத்தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் தங்கள் மேல்நிலை, இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் என அடுத்தடுத்து படிக்கும் காலங்களுக்கு ஏற்ற வகையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. +1 மற்றும் +2 படிக்கும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் ரூ.1,250, இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கு ரூ.2,000 மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளின்படி கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் மூலம் விண்ணப்பித்தல் வேண்டும். www.dge.tn.gov.in என்ற இணையதளம் சென்று பள்ளித் தலைமை ஆசிரியர் விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும். பூர்த்தி செய்த படிவத்துடன் ரூ.50ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்தி தலைமை ஆசிரியரிடம் கொடுத்து ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 7.9.2019.

மேலும் தெளிவான விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

- வெங்கட்

X