8ம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS உதவித்தொகை தேர்வு!

10/14/2019 12:25:46 PM

8ம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS உதவித்தொகை தேர்வு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான என்.எம்.எம்.எஸ். (National Means Cum Merit Scholarship Scheme 2019-20)தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்தியில், ‘தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் திட்டத்தின்கீழ் உதவித்தொகை எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. உதவித்தொகை வழங்க மாணவர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு  வரும் டிசம்பர்1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்.எம்.எம்.எஸ். தேர்வு நடத்தப்படவுள்ளது.

இந்தத் தேர்வுக்கான  விண்ணப்பங்களை அக்டோபர்11-ஆம் தேதி வரை www.dge.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் அக்டோபர்16-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க தகுதி:

மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் (அரசு, மாநகராட்சி,  நகராட்சி, அரசு உதவிபெறும் பள்ளி) நிகழ் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாணவர்களின் பெற்றோரின் குடும்ப வருமானம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். ஏழாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 50% மதிப்பெண்களும்,  மற்ற பிரிவினர் 55% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுடைய தேர்வர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவர்களிடம் கொடுத்து பெற்றோர் உதவியுடன் பூர்த்தி செய்ய வேண்டும். புகைப்படம் ஒட்டி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைத் தேர்வர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் தேர்வுக் கட்டணம் ரூ.50-ஐ செலுத்தி அக்டோபர் 16-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

தேர்வு முறை:

என்.எம்.எம்.எஸ். தேர்வு இரண்டு பகுதிகளைக் கொண்டது. பகுதி1ல்  மனத்திறன் படிப்பறிவுத் தேர்வு (Mental Ability Test-MAT) காலை 9.30 மணி முதல் காலை 11 மணி வரை நடைபெறும். பகுதி 2-ல் படிப்பறிவுத் தேர்வு, (www.dge.tn.gov.in) காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். தேர்வில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதம் ஒன்றுக்கு ரூ.1,000 வீதம் உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும் கூடுதல் விவரங்கள் அறிய https://scholarships.gov.in/public/schemeGuidelines/NMMSSGuidelines.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

X