இந்திய மாணவர்கள் இங்கிலாந்தில் படிக்க செவனிங் உதவித்தொகைத் திட்டம்!

10/22/2019 12:44:49 PM

இந்திய மாணவர்கள் இங்கிலாந்தில் படிக்க செவனிங் உதவித்தொகைத் திட்டம்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இங்கிலாந்தைத் தவிர்த்துப் பிற நாடுகளில் வசிப்பவர்கள், இங்கிலாந்தில் கல்வி பயின்றுவிட்டு, தங்கள் சொந்த நாட்டில் பணியாற்றுவதற்காக உயரிய எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் வகையில் இங்கிலாந்து அரசால் 1983 ஆம் ஆண்டு செவனிங் உதவித்தொகைத் திட்டம் (Chevening Scholarships) தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ் படிப்புதவித்தொகை (Scholarship) மற்றும் ஆய்வு உதவித்தொகை (Fellowship) எனும் இரு பிரிவுகளிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முழு உதவித்தொகையுடன் இங்கிலாந்தில் முதுநிலைப் பட்டப்படிப்புகள் மற்றும் பல்வேறு துறைகளிலான படிப்புகளில் 2020-2021 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்திய மாணவர்கள் செவனிங் திட்டத்தின் மூலம் இங்கிலாந்திலுள்ள 122 அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதாவதொரு பல்கலைக்கழகத்தில் ஒரு வருட கால அளவிலான முதுநிலைப் பட்டப்படிப்புகள், இரண்டு அல்லது மூன்று மாத கால அளவிலான நிதி சேவைகள், இதழியல், அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் சேர்ந்து படிக்க முடியும்.

இத்திட்டத்தில் இந்தியாவிலிருந்து மொத்தம் 120 மாணவ  மாணவியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கான முழுப்படிப்புதவித்தொகையும் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கத் தகுதி

இத்திட்டத்தின் கீழான படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு விரும்புபவர்கள் இந்தியக் குடியுரிமை கொண்டவராக இருக்கவேண்டும். இங்கிலாந்தில் கல்விக்கான படிப்பை நிறைவு செய்துவிட்டு இரண்டு ஆண்டுகளில் சொந்த நாடு திரும்புபவராக இருக்க வேண்டும். மேலும் இவர்கள் இளநிலைப் பட்டப்படிப்பை நிறைவுசெய்து இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவத்தைப் பெற்றிருக்க வேண்டும். இங்கிலாந்தில் படிப் பதற்குத் தேவையான ஆங்கில மொழித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில மொழித் தகுதி குறித்த விவரங்கள் இந்த அமைப்பின் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.  

விண்ணப்பிக்கும் முறை

இத்திட்டத்தில் படிக்க விரும்புபவர்கள் http://www.chevening.org/india எனும் இணையதளத்திற்குச் சென்று, இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு முன்பாக, விண்ணப்பம் செய்வதற்குக் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். விண்ணப்பிக்கும்போது செல்லத்தக்க கடவுச்சீட்டு (Valid Passport), தேசிய அடையாள அட்டை (National ID Card), பல்கலைக்கழகச் சான்றிதழ்கள் (University transcripts and degree certificates) போன்றவற்றைப் பதிவேற்றம் செய்ய வேண்டியிருக்கும். இங்கிலாந்து பல்கலைக்கழகங்களிலிருக்கும் படிப்புகளில், அவரவர் கல்வித்தகுதிக்கேற்ப ஏதாவது மூன்று படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

நேர்காணல்

இணையதளத்தின் வழியாகச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து, 2019ஆம் ஆண்டு நவம்பர் 06 முதல் டிசம்பர் இறுதி வரையிலான காலத்தில் விண்ணப்பங்கள் சரிபார்ப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவினால் ஒவ்வொரு விண்ணப்பமும் சரிபார்க்கப்பட்டு தகுதியுடைய விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படும்.

2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் பிப்ரவரி மாதம் முதல் வார காலத்திற்குள்ளாக இந்தியாவிலுள்ள இங்கிலாந்து தூதரகம் / துணைத் தூதரக அலுவலகங்களில் நேர்காணலுக்குத் தகுதியுடையவர்கள் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு  தேர்வு செய்யப்படுவார்கள். அதன் பின்னர், பிப்ரவரி இரண்டாம் அல்லது மூன்றாம் வாரத்தில் நேர்காணலுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும்.

நேர்காணலுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் 25.2.2020 தேதிக்குள் இளநிலைப் பட்டப்படிப்புச் சான்றிதழ் மற்றும் தேவையான சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். அதன் பின்பு, 02.03.2020 முதல் 01.05.2020 வரையிலான காலத்தில் உலகம் முழுவதுமுள்ள நாடுகளிலிருந்து மாணவர்களுக்கான நேர்காணல்கள் அந்தந்த நாடுகளிலிருக்கும் இங்கிலாந்து தூதரகம்/துணைத் தூதரகம்/உயர் ஆணையாளர் அலுவலகங்களில் நடைபெறும். இந்திய மாணவர்களுக்கான நேர்காணல் மேற்காணும் நாட்களுக்குள் ஒன்றாக இருக்கும்.

முடிவுகள்

நேர்காணலுக்குப் பின்பான முடிவுகள் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தின் ஆரம்ப நாட்களில் வெளியிடப்படும். இங்கிலாந்து பல்கலைக்கழகங்களுக்கான கட்டுப்பாடற்ற அளிப்புகள் (unconditional offers) மற்றும் ஆங்கில மொழித் தேவைக்கான சந்திப்புகள் போன்றவை 16.07.2020 ஆம் நாளுக்குள் நிறைவு செய்யப்படும். செவனிங் படிப்புதவித்தொகைத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான படிப்புகள் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தொடங்கும்.

இத்திட்டம் குறித்த மேலும் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள மேற்காணும் இணையதளத்தினைப் பார்க்கலாம். அத்துடன் இந்த இணையதளத்திலிருக்கும் http://www.chevening.org/apply/faqs எனும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (Frequently Asked Questions) பக்கத்தையும் பார்த்துத் தெளிவினைப் பெறலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 5.11.2019.
 
தொகுப்பு: வெங்கட் குருசாமி 

X