செழிப்பான வாழ்வுக்கு செராமிக் டெக்னாலஜி

8/4/2017 2:20:17 PM

செழிப்பான வாழ்வுக்கு செராமிக் டெக்னாலஜி

தற்போதைய நவநாகரீக யுகத்தில் செராமிக் டைல்ஸ், அலங்காரப் பொருட்கள், வியக்க வைக்கும் ஜாடிகளை தயாரிக்கும் நிறுவனங்களின் வளர்ச்சி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பீங்கானை மூலப்பொருளாக கொண்டு, அதை உற்பத்தி செய்வது, வடிவமைத்து விற்பனைக்கு அனுப்பி வைப்பது வரையிலான படிப்பாக பி.டெக். செராமிக் இன்ஜினியரிங் / டெக்னாலஜி பட்டப்படிப்பு விளங்குகிறது. கலை ஆர்வமும் கற்பனை வளமும் கொண்டிருப்பவர்களுக்கு இப்படிப்பு ஏற்றது. பீங்கான் பொருள் தயாரிப்பு மட்டுமின்றி, பெரிய அளவிலான தொழிற்சாலைகள், ஆராய்ச்சிக் கூடங்களிலும் செராமிக் தொழில்நுட்பம் பயன்படுகிறது.

பொறியியல் கலந்தாய்வு மூலம் இதில் சேரலாம். சாலிட் ஸ்டேட் ஆஃப் பிசிக்ஸ் அண்ட் கெமிஸ்ட்ரி, விலங்கியல், மெட்டாலர்ஜி, செராமிக் ரா மெட்டீரியல், பிராசஸ் செராமிக், பிசிக்கல் செராமிக் உள்ளிட்ட  பாடங்கள் இதில் கற்றுத் தரப்படுகின்றன. இப்படிப்பை தமிழகத்தில் படித்தாலும்கூட, வட மாநிலங்களில் இதற்கான பணி வாய்ப்பு அதிகம் உள்ளது. குறிப்பாக குஜராத் மாநிலத்தில் இத்தொழில் அபார வளர்ச்சி கண்டுள்ளதால், அங்குள்ள தொழிற்சாலைகளில் உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும். படித்து முடித்தவுடன் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும்.

இஸ்ரோ, பாபா அணு ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில் உயர் பொறுப்பை பெறவும் இயலும். இப்படிப்பை முடித்தவர்கள் செராமிக் டெக்னாலஜிஸ்டாகவும், செராமிக் டிசைனராகவும் பணியில் அமரலாம். மொத்தத்தில் இது சவாலான படிப்பாக இருந்தாலும், எதிர்கால வாழ்வை செழிப்பாக அமைத்துக்கொள்ள முடியும். செராமிக் டெக்னாலஜி படித்து முடித்தவர்களுக்கு வெளிநாடுகளிலும் அமோக வரவேற்பு உள்ளது. வசதி படைத்தவர்கள் சுயமாக தொழிற்சாலை அமைத்து, அதிகளவு சம்பாதிக்க முடியும். உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து பெரும் தொழிலதிபராகலாம்.