சம்பளம் பேசுவது எப்படி? - இன்டர்வியூ டிப்ஸ்!

8/24/2017 5:38:01 PM

சம்பளம் பேசுவது எப்படி? - இன்டர்வியூ டிப்ஸ்!

வேலைக்கு தகுதியானவர் என நீங்கள் செலக்டாகி விட்டீர்கள். அத்தோடு விஷயம் முடியவில்லை. முக்கிய விஷயத்தில் இனிதான் நீங்கள் முடிவெடுக்கப் போகிறீர்கள். என்ன அது?  யெஸ்! சம்பளம்தான் அது.

நட்புணர்வும் புன்னகையும் தேவை!
வாடகை கொடுக்கும்போது ஓனர் கட்டாயம் சிரிப்பார்தான். ஆனால் கூடவே நீங்களும் காம்போவாக புன்னகைத்தால்தான் அடுத்த நாள் உங்கள் வீட்டு கிச்சனில் தண்ணீர் வரும். உங்கள் வேலையில் சம்பளம் பேசும்போது எவ்வளவு கவனமாக இருக்கவேண்டும்? முதலில் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி சொல்லி பேசுவது அவசியம்.

பேசிய சம்பளம் செட்டாகவில்லையா உடனே முகத்தில் உதயசூரியனாய் கோபம் காட்டுவதோ, கம்பெனியை பேட்வேர்ட்ஸில் பேசுவதோ நல்லதல்ல. ஏன்? “இப்போது ஓகே ஆகவில்லைதான்  ஆனால் பின்னாளில் உங்களை அழைக்க சான்ஸ் இருக்கிறதே! அதற்குத்தான்” என்கிறார் வேலைவாய்ப்பு ஆலோசகர் மெக்டொனால்ட்.

சம்பளத்தோடு பிற அம்சங்களும் முக்கியம்!
பட்ஜெட் போன்தான் தேவை என்றாலும் விலையை மட்டும்தானா பார்ப்போம், பேட்டரி,ஓஎஸ், ப்ளூடூத் என பலதும் கவராகிறதா என பார்ப்போமில்லையா? அதேதான். சம்பளத்தை மட்டும் கறாராக நினைக்காமல் அதற்கு ஈடாக லீவ் நாட்கள், நெகிழ்வான பணிச்சூழல், பயிற்சி வாய்ப்புகளும் முக்கியம். “சம்பளம் போதவில்லையென்றாலும் எனது வேலைத்திறனை பார்த்துவிட்டு பின்னர் சம்பளத்தை உயர்த்த முடிவெடுங்கள் என்று கூறுவதில் தவறில்லை” என்கிறார் “Poised for Success”  நூலின் ஆசிரியர் ஜாக்யுலின் வொய்ட்மோர்.

கொஞ்சம் பயிற்சி கொஞ்சம் முயற்சி!
சம்பளம் பேசும்போது அதற்கான மினிமம் ட்ரெய்னிங் தேவை. நீங்கள் பேசும் பதில்களோடு உங்கள் உடல்மொழியான குரலின் உணர்ச்சி, முக பாவனைகள் குறித்தும் கவனித்து ஹெச்ஆர் உங்களுக்கு வேலையில் ஆர்வமுள்ளதா என்பதை மனதில் நோட் செய்துகொள்வார்கள். முடிந்தவரை உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் பதில் பேசுவது சிறப்பு.

தகராறு இல்லாத தகுதிக்கான சம்பளம்!
 நீங்கள் வேலை செய்யப்போகும் வேலை, அதில் உங்கள் அனுபவம் பொறுத்து சம்பளம் கேட்பதில் தவறில்லை. எக்ஸ்ட்ரீமாக போய் டிஸ்கவுண்ட் சம்பளம் அல்லது உலகவங்கி தலைவரின் சம்பளம் கேட்டால் எப்படி? உங்கள் அனுபவத்தில் பிற கம்பெனிகளில் வேலை செய்பவர்களின் சம்பளத்தை இதற்கு ரெஃபரென்ஸ் எடுத்துக்கொள்ளலாம்.

எமோஷனலை குறையுங்கள்!
சரியானபடி ஸ்கெட்ச் போட்டு சம்பளம் பேசி வேலையை வாங்கிவிட்டோம் என ‘ஹூர்ரே’ என அலறி  குஷியானால் அது உங்கள் வேலைக்கு நெகடிவ்வாகும். “நம்பிக்கையற்றவர்களை விட ஆர்வம்கொண்டவர்களை நான் வரவேற்கிறேன். அவர்களே நிறுவனத்தின் எதிர்காலத்திற்கு சிறந்த முதலீடு” என சக்சஸ் சீக்ரெட் சொல்கிறார் வேலைவாய்ப்பு நிறுவன இயக்குநரான டான் மார்டினி. டிப்ஸ்களை தாண்டி சூழல்களுக்கேற்ப நடக்கும் சமயோசிதம் உங்களை நிறுவனத்தின் மதிப்பிற்குரிய ஒருவராக மாற்றுவது உறுதி.

-ச.அன்பரசு