IBPS தேர்வில் வெற்றி பெற சில ஆலோசனைகள்!

12/4/2017 2:30:24 PM

IBPS தேர்வில் வெற்றி பெற சில ஆலோசனைகள்!

பொதுத்துறை நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையில் காலிப் பணியிடங்களை நிரப்பக்கூடிய நிறுவனங்களில் முதல் இடத்தில் இருப்பது அரசு வங்கிகள்தான். இரண்டாம் இடத்தில் இருப்பது ரயில்வே துறை. பொதுவாக அரசு வேலையை விரும்பக்கூடியவர்களில் பெரும்
பாலோர் வங்கிப் பணியில் சேர்வதற்கே ஆர்வம் காட்டுவார்கள். ஆண்டுதோறும் பல ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதால் வங்கித் தேர்வுகள், திறமை படைத்தவர்களுக்கான சிறந்த வரமாக விளங்குகின்றன.

வங்கித் தேர்வைப் பொறுத்தவரை கொஞ்சம் சவாலான ஒன்றுதான். பொது அறிவு, நுண்ணறிவுத்திறன் கேள்விகளுடன் ஆங்கில அறிவு, பொருளாதாரம், வங்கித்துறை சார்ந்த கேள்விகளும் தேர்வு எழுதுபவர்களுக்கு மிரட்சியை ஏற்படுத்துகின்றன. தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு கடினமாக உழைத்தால்தான் வங்கிப் பணிகளில் சேர்வது சாத்தியமாகும்.

முன்பெல்லாம் அரசு வங்கிகள் தனித்தனியாக தேர்வு நடத்தி வங்கிப் பணியாளர்களைத் தேர்வு செய்து வந்தன. ஆனால், தற்போது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு, ஊழியர்களைத் தேர்வு செய்யும் பணியை ‘ஐ.பி.பி.எஸ்.,’ (Institute of Banking Personnel Selection) தேர்வாணையம் செய்துவருகிறது. இது 2011ம் ஆண்டு முதல் ‘கிளார்க்’, ‘புரபேஷனரி ஆபீஸர்ஸ்’, ‘ஸ்பெஷலிஸ்ட் ஆபீஸர்ஸ்’, கிராம வங்கிகளுக்கான ‘உதவியாளர்’ மற்றும் ‘அதிகாரி’ தேர்வுகளை நடத்திவருகிறது.

எப்போதும் படிக்க வேண்டும் வங்கிப் பணிக்கான தேர்வு அறிவிப்பு வரும்வரை காத்திருக்காமல் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு திறமையை மெருகேற்றிவந்தால்தான் தேர்வை எதிர்கொண்டு எளிதில் வெற்றி பெறலாம். முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என்று பிரித்து பார்க்காமல் ஒட்டுமொத்தமாக தயாராவதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.

காரணம், போட்டியாளர்கள் எண்ணிக்கையைக் குறைத்து, திறமையானவர்களை வடிகட்டத்தான் 2 தேர்வுகள் நடத்தப்படுகிறது. ஆகவே, நன்றாகப் படித்தால் 2 தேர்வுகளிலும் ஜெயித்துவிடலாம். அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலையில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகுதியாக பள்ளி/கல்லூரிகளில் ‘கம்ப்யூட்டர் சயின்ஸ்’ ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். அல்லது டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு 20 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: அதிகாரி பதவிக்கு ஆன்லைன் முறையிலான பிரிலிமினரி மற்றும் மெயின் இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். பிரிலிமினரி தேர்வு அடிப்படையில் தேர்ச்சி பெறுவோர் மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவர். மெயின் தேர்வில் கட்-ஆப் மதிப்பெண் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், இட ஒதுக்கீடு, வங்கியில் உள்ள காலிப் பணியிடங்கள், அரசு விதிகள் அடிப்படையில் இறுதியாகத் தேர்வு செய்யப்படுவர்.

ரீசனிங் எபிலிட்டி: ரீசனிங் மற்றும் ஆப்டிடியூட் சார்ந்து கேள்விகள் இடம்பெறும். உங்களின் பகுத்தறியும் திறனை புடம்போட்டு சோதிக்கும் தேர்வு என்பதால் ஆழ்ந்த கவனம் செலுத்துவதால் மட்டுமே ரீசனிங் பகுதி களுக்கு எளிதில் விடையளிக்க முடியும். உதாரணமாக, ஒரு கேள்வியில் கொடுக்கப்பட்டிருக்கும் படம் அல்லது வடிவத்தின் அடுத்தநிலை எப்படியிருக்கும் என்றோ அல்லது பொருத்தமான அடுத்தபடம் எது என்றோ நாம் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். இதற்கு துரிதமாக விடைகாண புதிர்கள், மூளை விளையாட்டுகளில் பயிற்சி பெறுவது அவசியம்.

கணித பயிற்சி: ஆப்டிடியூட் வினாக்களில் கணிதப் புலமை உள்ளவர்கள் எளிதாக மதிப்பெண் பெற்றுவிடுவார்கள். 12-ம் வகுப்பு வரை கணிதம் படித்திருந்தால் இந்தப்பகுதி சுலபமாக இருக்கும். பெரும்பாலான கேள்விகள் அரித்மெடிக், ஜியாமட்ரி சார்ந்து கேட்கப்படும். கணித சூத்திரங்களை நினைவு வைத்து பயிற்சி செய்தால் எளிதாக விடைகாண முடியும். தீவிரமான பயிற்சியின் மூலம் இதை சாத்தியமாக்கலாம். ஆங்கிலப் பயிற்சி: ஆங்கில மொழி தொடர்பாக கேள்விகள் கேட்கப்படும்.

கொடுக்கப்பட்ட ஆங்கிலப் பத்தியிலிருந்து சரியான விடைகளைத் தேர்வு செய்வது, ஆங்கில வாக்கியங்களில் உள்ள தவறுகளைக் கண்டுபிடிப்பது, வாக்கியங்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற வகை வினாக்கள் இப்பகுதியில் இடம்பெறும். அடிப்படை ஆங்கில இலக்கணம், வாக்கிய அமைப்பு, புரிந்துகொள்ளும் திறன் ஆகிய திறமைகளை வளர்ப்பது மதிப்பெண்களை அள்ள உதவி புரியும். வார்த்தை வளத்தை அதிகரித்துக் கொள்ள ஆங்கில செய்தித்தாள்கள், பத்திரிகைகளைத் தொடர்ந்து வாசித்து பயிற்சி பெற வேண்டும்.

நிதித்துறை அறிவு: வங்கி மற்றும் நிதித்துறை சார்ந்த கேள்விகள் இடம்பெறும். இந்தியப் பொருளாதாரம், இந்திய வங்கித்துறை, நிதி அமைப்பு, நிறுவன நடைமுறைகள், அரசு திட்டங்கள் பற்றி ஆழமான தகவல்களை தெரிந்து வைத்துக்கொள்வது இந்தப் பகுதிக்கு விடையளிக்க உதவியாக இருக்கும்.

அன்றாட செய்தித்தாள்கள், நிதி மற்றும் வங்கிப் பணிகள் சார்ந்த பருவ இதழ்களைத் தவறாமல் படித்துவந்தால் இவை பற்றிய தகவல்களைத் தொகுத்து திறமையை வளர்த்துக்கொள்ளலாம்.

கணினி திறமை: கணினி அறிவு சார்ந்து கேள்விகள் கேட்கப்படும். வங்கித்துறைக்கு கணினி அறிவு மற்றும் திறமை முக்கியமானதாகும். கணினி சார்ந்த அடிப்படை அறிவு அவசியம். தவிர அடிப்படை கணினித் தொழில்நுட்பம், மென்பொருள், வன்பொருள், இணையதளம், நவீன நுட்பங்கள் மற்றும் தகவல்தொழில்நுட்பம் பற்றிய பரந்த அறிவுத்திறனும் அதிக மதிப்பெண் பெற உதவியாக இருக்கும்.

நேர்காணல்: எழுத்துத் தேர்வுக்கு அடுத்தகட்டம் நேர்காணல். புரபெசனரி அதிகாரி மற்றும் சிறப்பு அதிகாரி பணிகளுக்கு நேர்காணல் தேர்வு நடத்தப்படுகிறது. நேர்காணலில் இந்த கேள்விகளைத்தான் கேட்பார்கள் என்று குறிப்பிட முடியாது. ஆனாலும் பொருளாதாரம், வங்கித்துறை சார்ந்த அடிப்படைகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள், பரபரப்பு நிகழ்வுகள் பற்றிய கேள்விகள் இடம்பெறும் என்று யூகிக்கலாம். சொந்த விவரங்கள், வேலை பற்றிய அறிவு சார்ந்த கேள்விகளும் கேட்கப்படும். வங்கி வேலைக்கு நீங்கள் தகுதியானவர் என்பதை நிரூபிக்கும் தேர்வாகவே நேர்காணல் இருப்பதால் நன்கு பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள்.

தேர்வு நேரம்
வருகின்ற டிசம்பர் மாதம் 1,315 வங்கி சிறப்பு அதிகாரி பணிக்கான பிரிலிமினரி தேர்வு 30 மற்றும் 31ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வு ஒரு மணிநேரமும், டிசம்பர் 2,3,9,10 ஆகிய தேதிகளில் 7815 கிளார்க் பணிக்கான பிரிலிமினரி தேர்வு 2 மணிநேரமும் நடைபெறும்.  

IBPS தேர்வுக்கு வேகமும் விவேகமும் மிக அவசியம். 36 செகண்ட்டில் ஒரு கணக்கிற்கு விடையளிக்க முடியுமா? முடியும்! அப்படி முடித்துதான் இன்று பல இளைய தலைமுறையினர் வங்கி அதிகாரியாக பணி புரிந்து கொண்டிருக்கின்றனர்.  வங்கி அதிகாரி ஆவது என்பது ஒரு சாதாரண விஷயம்அன்று அதற்குக் கடின உழைப்பும் முயற்சியும் பயிற்சியும் தேவை.

தேர்வு நேரத்தில் பின்பற்ற…

* அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க முற்படாதீர்கள்.
* கேள்விகளை தேர்ந்தெடுத்து விடையளிக்க தங்களுக்குக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். தவறானால் மதிப்பெண் குறைக்கப்படும்.
* எந்தெந்த பாட பிரிவிற்கு எவ்வளவு நேரம் ஒதுக்கவேண்டும்.  என்பதை முன்கூட்டியே அறிந்திருக்கவேண்டும்.
* எந்த பாடப்பிரிவிற்கும் தேவையான நேரம் தாண்டி கூடுதலான நேரம் ஒதுக்கிவிட வேண்டாம். இறுதியில் மீதம் இருக்கும் நேரத்தை அதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
* IBPS தேர்வு எழுதுவதற்கு முன்பு தங்களுடைய விடையளிக்கும் திறன் மற்றும் வேகம் இவற்றை அறிந்திருக்க வேண்டும்.  அவற்றை அறிந்துகொள்வதற்கு வாரம் இருமுறை (Online Test) இணையத்தேர்வு எழுதியிருக்கவேண்டும்.
* தினமும் ஆங்கில நாளிதழ் தவறாமல் படிக்கவேண்டும்.
* தேர்வு எழுத செல்வதற்கு முன்பு சுமார் 25 முதல் 30 வரையிலான மாதிரி தேர்வு எழுதிப் பார்த்திருக்கவேண்டும்.
* 9.Tables, Fraction, Percentage, mind Calculation இவற்றில் நன்கு பயிற்சி பெற்றிருக்கவேண்டும். இவை அனைத்தையும் கடைப்பிடித்தால் நிச்சயம் அரசு வங்கிகளில் அதிகாரியாக ஆகலாம்.

X