+2 தாவரவியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெறலாம்

12/19/2017 10:45:46 AM

+2 தாவரவியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெறலாம்

நன்றி குங்குமம் சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி

“உயிரியல் பாடப்பிரிவில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் குறிக்கோள் மருத்துவப் படிப்பாகும். ஆனால், தற்போது NEET தேர்வு மதிப்பெண்களே மருத்துவம் சேர உதவுகிறது. இருப்பினும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவப் பிரிவுகளுக்கும், மருத்துவம் சார்ந்த B.PT., B.Pharm மற்றும் துணை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கும் உயிரியல் பாடத்தில் கிடைக்கும் மதிப்பெண்களே இடம் கிடைப்பதை உறுதி செய்யும்.

மேலும் வேளாண்மை, உயிரி தொழில்நுட்பவியல் படிப்புகளில் சேர்வதற்கும் உயிரியல் பாடத்தில் பெறும் மதிப்பெண்களே துணைபுரிகின்றது.” என்கிறார் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை தாவரவியல் ஆசிரியர் ஆர்.கண்ணபிரான். அவர் தரும் ஆலோசனைகள்…

உயிரியல் பாடமானது உயிரியல் தாவரவியல், உயிரியல் விலங்கியல் என இரண்டு பிரிவுகளைக் கொண்டது. உயிரியல் தாவரவியல் பிரிவுக்கு மொத்தம் 100 மதிப்பெண்களும், உயிரியல் விலங்கியல் பிரிவுக்கு 100 மதிப்பெண்களும் வழங்கப்படும். இதில் ஒவ்வொரு பிரிவுக்கும் 25 மதிப்பெண்கள் செய்முறைத் தேர்விற்கும், 75 மதிப்பெண்கள் கருத்தியல் தேர்விற்கும் வழங்கப்படுகிறது. உயிரியல் பிரிவைப் பொறுத்தவரை 75 மதிப்பெண்களுக்கான தேர்விற்கு 90 நிமிடங்கள் கால அவகாசம் வழங்கப்படும். இந்த 90 நிமிட நேரத்தை மிகச்சரியாகப் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.

ஒரு மதிப்பெண்ணுக்கு விடையளிக்க ஒரு நிமிடம் என்ற வகையில் 75 மதிப்பெண்களுக்கு 75 நிமிடங்களைப் பயன்படுத்த வேண்டும். மீதமுள்ள 15 நிமிடங்களில் எழுதிய விடைகளை சரிபார்க்கவும், கூடுதல் நேரம் தேவைப்படும் வினாக்களுக்கு விடையளிக்கவும் பயன்படுத்தலாம். தாவரவியல் பாடத்தில் 75 மதிப்பெண்களையும் முழுமையாகப் பெற வேண்டுமானால், பின்வரும் குறிப்புகளையும், ஆலோசனைகளையும் கவனத்தில் கொண்டால் எளிதாகப் பெறலாம்.

வினாத்தாள் அமைப்பு முறையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். உயிரி தாவரவியல் பாடத்தில் ஒரு மதிப்பெண் வினாக்கள் மொத்தம் 14 இடம் பெறும். முதல் மற்றும் ஐந்தாம் பாடங்களில் இருந்து மூன்று வினாக்கள் வீதமும் மீதமுள்ள நான்கு பாடங்களில் இருந்து தலா இரண்டு வினாக்கள் வீதமும் கேட்கப்படும். அனைத்துப் பாடங்களில் இருந்தும் ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படுவதால், அனைத்துப் பாடங்களையும் வரி விடாமல் படித்துப் பார்ப்பதுதான் சிறந்தது.

பாடப்பகுதியின் பின்னால் உள்ள அனைத்து வினாக்களையும் படிப்பதோடு புத்தகத்தினுள் உள்ள இரு சொற்பெயர்கள் அவற்றின் சாதாரணப் பெயர்கள் மற்றும் பயன் போன்றவற்றையும் அறிவியல் அறிஞர்களின் பெயர்கள், கண்டுபிடிப்புகள், ஆண்டுகள் ஆகியவற்றையும் படிக்க வேண்டும். படிக்கும்போதே அவற்றைப்பற்றி குறிப்புகள் எடுத்துக்கொள்வது இறுதி நேர திருப்புதலுக்கு உதவியாக அமையும். இது தவிர இந்த ஆண்டில் சற்று கடினத் தன்மையுடன் வினாத்தாள் அமையும் என்பதால் அதற்கேற்ப எவ்வாறெல்லாம் வினாக்கள் கேட்கப்படலாம் என்று சிந்திப்பதும்
அவசியம்.

மூன்று மதிப்பெண் வினாக்கள் மொத்தம் பத்து வினாக்கள் இடம்பெறும். இதிலிருந்து ஏழு வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். ஒன்று மற்றும் இரண்டாவது பாடங்களில் இருந்து இரண்டு வினாக்கள் வீதம் ஐந்தாவது பாடத்தில் மூன்று வினாக்களும் மூன்று, நான்கு, ஆறு ஆகிய பாடங்களில் இருந்து தலா ஒரு வினா வீதமும் இடம்பெறும். 1, 2, 5 ஆகிய மூன்று பாடங்களில் உள்ள அனைத்து மூன்று மதிப்பெண் வினாக்கள், படங்கள் அவற்றின் பாகங்கள் ஆகியவற்றைப் படித்தாலே ஏழு வினாக்களுக்கும் பதில் அளித்துவிடலாம்.

மூன்றாவது பாடத்தில் இடம்பெற்றுள்ள படங்களையும் அவற்றின் பாகங்களையும் வரைந்து பழகிக்கொண்டால் ஒரு வினாவிற்கு விடையளிப்பது எளிதாகும். அடிக்கடி கேட்கப்படும் வினாக்களை நன்கு படித்துக்கொள்ள வேண்டும். ஐந்து மதிப்பெண், பத்து மதிப்பெண் வினாக்களுக்கான விடைகளின் உள்ளேயிருந்தும் மூன்று மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படும் என்பதால் அவற்றைப் படிக்கும்போதே நன்கு கவனித்துப் படிக்க வேண்டும்.

ஐந்து மதிப்பெண் வினாக்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு பாடத்திலிருந்தும் ஒவ்வொரு வினாவும் ஐந்தாவது பாடத்தில் மட்டும் இரண்டு வினாக்களும் இடம்பெறும். மொத்தமுள்ள ஏழு வினாக்களில் நான்கு வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். இதில் பெரும்பாலும் முதல் பாடத்திலிருந்துதான் கட்டாய வினா இடம்பெறுவதால் முதல் பாடத்தில் உள்ள அனைத்து ஐந்து மதிப்பெண் வினாக்களையும் படித்துவிட வேண்டும்.

ஐந்தாவது பாடத்தில் உள்ள அனைத்து ஐந்து மதிப்பெண் வினாக்களையும் படித்துவிட்டால் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க முடியும். ஐந்தாவது பாடத்தில் உள்ள ஆய்வுகள் குறித்த வினாக்கள் வினாத்தாளில் அடிக்கடி இடம்பெறுகிறது. மேலும் இது செய்முறைத் தேர்விற்கும் படிக்க வேண்டியதாகும். மீதமுள்ள பாடங்களில் இருந்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைப் படித்தாலே நான்கு வினாக்களுக்கு எளிதாக பதில் அளிக்கலாம். இரண்டு ஐந்து மதிப்பெண் வினாக்களை இணைத்து 10 மதிப்பெண் பகுதியிலும் வினாக்கள் இடம்பெறலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பத்து மதிப்பெண் வினாக்கள் 1, 2, 4, 5 ஆகிய நான்கு பாடங்களில் இருந்து மட்டுமே இடம்பெறும். நான்கு வினாக்களில் ஏதேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளித்தால் போதுமானது. Open Choice முறையில் வினாக்கள் அமைவதால் ஒன்று மற்றும் நான்கு ஆகிய பாடங்களில் உள்ள அனைத்து பத்து மதிப்பெண் வினாக்களையும் படித்தாலே போதுமானது. இருப்பினும் அடிக்கடி கேட்கப்படும் கிரப் சுழற்சி, கிளைக்காலைசிஸ் திசு வளர்ப்பு தொழில்நுட்பம் ஆகிய வினாக்களையும் படிப்பது கூடுதல் வலு சேர்க்கும்.

விடை எழுத கருப்பு, நீல நிற பேனாக்களை மட்டும் பயன்படுத்தவும். படங்களை வரைய பென்சிலைப் பயன்படுத்தவும். தெளிவாக வரைந்து பாகங்களைக் குறிக்கவும்.விடைகளைத் தெளிவாக சுருக்கமாக எழுதவும். சொந்த நடையிலும் எழுதலாம். மையக்கருத்தில் மாற்றங்களின்றி எழுதவும். இந்த ஆலோசனைகளைப் பின்பற்றினால் தாவரவியல் பிரிவில் முழு மதிப்பெண்களையும் எளிதாகப் பெறலாம்.வாழ்த்துகள் மாணவர்களே!

(அடுத்தடுத்த பக்கங்களில் மாதிரி வினாத்தாள்)

X