+2 வணிகவியல் பாடத்தில் சென்டம் பெற சூப்பர் டிப்ஸ்!

2/19/2018 2:01:53 PM

+2 வணிகவியல் பாடத்தில் சென்டம் பெற சூப்பர் டிப்ஸ்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

+2 வணிகவியல் பாடமானது கருத்தியல் சார்ந்த பாடம் என்றும், பக்கம் பக்கமாக எழுதினால் மட்டுமே மதிப்பெண் பெற முடியும் என்றும், இந்த பாடத்தில் 200/200 மதிப்பெண் பெறுவது கடினம் என்றும் மாணவர்கள் மத்தியில் ஒரு எண்ணம் நிலவுகிறது. ஆனால், வணிகவியல் பாடத்தை பொறுத்தவரை பாடத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு சரியான கருத்துகளை மட்டும் எழுதி முழுமையான மதிப்பெண்களைச் சுலபமாக பெற முடியும்‘‘ என்கிறார் விழுப்புரம் மாவட்டம் பி.என்.தோப்பு நகராட்சி மேல்நிலைப்பள்ளி வணிகவியல் முதுகலை ஆசிரியர் வ.எழிலன். அவர் தரும் ஆலோசனைகளைப் பார்ப்போம்.

வணிகவியல் பாடத்தில் மொத்தம் 8 தலைப்புகள் உள்ளன. முதலில் இந்த 8 தலைப்புகளையும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். பின்னர் அவற்றின் இயல்புகள், நன்மைகள், குறைபாடுகள் ஆகியவற்றை எளிமையாக புரிந்துகொள்ள முடியும். அதன்பின் ஒரு தலைப்பிற்கும் மற்றொரு தலைப்பிற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை ஒப்பிட்டுப் படிக்க வேண்டும். இவ்வாறு படித்தால் அனைத்து தலைப்புகளும் தெளிவாக புரிந்துவிடும்.

விடைகளை எழுதும்போது பத்தி பத்தியாக எழுதாமல் தேவையான கருத்துகளை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வரிசைப்படுத்தி எழுதினாலே போதுமானது. கடந்த ஆண்டுகளின் வினாத்தாள்களை எடுத்து பயிற்சி செய்துவந்தால் நல்ல புரிதல் கிடைத்து முழு மதிப்பெண் பெற உதவியாக இருக்கும்.

மேலும் வினாக்கள் எவ்வாறு கேட்கப்படுமோ என்ற அச்சம் நீங்கி ஒரு நம்பிக்கை ஏற்படும். பொதுவாக மொத்தமுள்ள 40 ஒரு மதிப்பெண் வினாக்களில் 3 அல்லது 4 வினாக்கள் புத்தகத்தின் உள்ளிருந்து கேட்கப்படும். அவ்வாறு உள்ளிருந்து கேட்கப்படும் வினாக்கள் எவ்வாறு உள்ளிருந்து கேட்கப்படுகிறது என்பதையும் இதன்மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

பொதுத்தேர்வு நெருங்கிவிட்ட காரணத்தால் நீங்கள் உங்கள் படிக்கும் நேரத்தின் அளவை அதிகரிக்க வேண்டும். காலம் பொன் போன்றது என்பதை மனதில் கொண்டு அந்த காலத்தை வீணாக்காமல் உங்கள் சிந்தனை முழுவதையும் படிப்பிலேயே செலுத்தினால் நீங்களும் முழு மதிப்பெண் பெற்று சாதனையாளராக வலம் வரமுடியும்.

நீங்கள் பயிற்சி செய்யும்போது ஏற்படும் சந்தேகங்களைக் குறித்துக்கொண்டு உங்கள் ஆசிரியரை அணுகி அதனை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். வணிகவியல் தேர்வுக்கு நேர மேலாண்மை மிகவும் அவசியமாகும். எனவே, தேர்வறையில் உங்கள் கவனம் முழுவதும் தேர்வு எழுதுவதிலேயே இருக்க வேண்டும். அப்போதுதான் கொடுக்கப்பட்டிருக்கும் நேரத்திற்குள் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க முடியும்.

ஆசிரியரின் உதவியோடு எந்தெந்த வினாக்களுக்கு எவ்வாறு விடை எழுதினால் முழு மதிப்பெண் பெற முடியும் என்பதையும், பகுதி வாரியாக கேட்டறிந்து அதனடிப்படையில் பயிற்சி செய்ய வேண்டும்.பொதுவாக ‘அ’ பகுதிக்கு விடையளிக்க 30 நிமிடமும், ‘ஆ’பகுதிக்கு விடையளிக்க 30 நிமிடமும், ‘இ’பகுதிக்கு விடையளிக்க 40 நிமிடமும் ‘ஈ’ பகுதிக்கு விடையளிக்க 80 நிமிடமும் எடுத்துக்கொள்ளலாம்.

வினாத்தாள் வடிவமைப்பை தெளிவாக புரிந்துகொள்ளுதல் வேண்டும். அதாவது, எந்தெந்த பாடத்திலிருந்து எத்தனை மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படுகிறது என்றும், அவை எவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும் அறிந்து அதனடிப்படையில் ஒவ்வொரு பாடத்திலிருந்தும் எந்தெந்த வினாக்கள் தொடர்ச்சியாக கேட்கப்படுகின்றன என்பதை அறிந்து அவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து படிக்க வேண்டும்.

வணிகவியல் பாடத்தில் வேறுபாடு சார்ந்த வினாக்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே பாடப்பகுதியில் உள்ளன. வேறுபாடு சார்ந்த வினாக்கள் அதிக மதிப்பெண்களுக்கு கேட்கப்படுகின்றன. எனவே, பாடப்பகுதியில் உள்ள அனைத்து  வினாக்களையும் படித்துவிட்டால் அதிக மதிப்பெண் பெற முடியும். ஏனெனில் வேறுபாடு சார்ந்த வினாக்களைப் படிப்பது எளிது. விரைவாகவும் எழுதிவிடலாம். இதன்மூலம் நேரத்தை சேமிக்க முடியும். இதுபோன்ற வேறுபாடு சார்ந்த வினாக்களை எழுதும்போது தெளிவாகக் கட்டமிட்டு எழுத வேண்டும்.

கையெழுத்து அழகாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். அதேபோல் எழுதுவதற்கு நீல மை பேனாவும், முக்கிய பகுதியை எழுதவும், அடிக்கோடிடவும் கறுப்பு மை பேனாவையும் பயன்படுத்த வேண்டும்.அடித்தல், திருத்தல் இல்லாமல் தெளிவாக எழுத வேண்டும். வினா எண்களை மறக்காமல் சரியாக எழுத வேண்டும். தேர்வு எழுதும்போதே ஒவ்வொரு பகுதியிலும் எத்தனை வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும் என்பதையும், அவ்வாறு நாம் விடையளித்துவிட்டோமா என்பதையும் அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

வினாத்தாள் வடிவமைப்புஇந்தப் பாடத்தில் ஒரு மதிப்பெண் வினாக்கள் மொத்தம் 40 வினாக்கள் கேட்கப்படும். இதில் 20 வினாக்கள் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க என்றும், 20 வினாக்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக என்றும் கேட்கப்படும். இதில் 90% வினாக்கள் புத்தகத்தில் ஒவ்வொரு பாடத்திற்கும் பின்னால் கொடுக்கப்பட்டிருக்கும் வினாக்களிலிருந்தும் 10% வினாக்கள் பாடத்தின் உள்ளேயிருந்தும் கேட்கப்படும்.

(பகுதி அ-வினா எண் 1-40)பாடத்தை பற்றிய முழுமையான புரிதல், கடந்தகால வினாத்தாள்கள் பயிற்சி ஆகியவற்றின் மூலம் இப்பகுதியில் முழு மதிப்பெண் பெற முடியும். 200/200 என்ற கனவை நனவாக்கும் மிக முக்கியமானது இது என்பதால் இந்தப் பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டும். பெரும்பாலும் புத்தகத்தின் உள்ளிருந்து கேட்கப்படும் 10% ஒரு மதிப்பெண் வினாக்கள் 2 மற்றும் 3 ஆகிய பாடங்களிலிருந்து கேட்கப்படுகிறது.

நான்கு மதிப்பெண் வினாக்கள் 15 வினாக்கள் கேட்கப்படும். இதில் 10 வினாக்களுக்கு விடையளித்தால் போதும். இதில் ஒவ்வொரு பாடத்திலிருந்தும் 2 வினாக்கள் வீதமும் 2-வது பாடத்திலிருந்து மட்டும் (தனியாள் வணிகம்) ஒரு வினா கேட்கப்படும். (பகுதி ஆ- வினா எண்: 41-55)
இந்தப் பகுதியில் திரும்பத் திரும்ப கேட்கப்படும் வினாக்கள்தான் அதிகம். இதற்காக புத்தகம் முழுவதையும் படிக்காமல் கடந்தகால வினாத்தாள்கள்களைப் பயிற்சி செய்தாலே இந்தப் பகுதியில் சுலபமாக முழுமதிப்பெண் பெறமுடியும்.

எட்டு மதிப்பெண் வினாக்கள் 8 வினாக்கள் கேட்கப்படும். இவற்றில் ஐந்தனுக்கு விடையளித்தால் போதும். இதில் 2-ஆம் பாடத்தை தவிர (தனியாள் வணிகம்) மீதமுள்ள 4-ஆம் பாடத்திலிருந்து மட்டும் (நிறுமங்கள்-I) 2 வினாக்கள் கேட்கப்படும். (பகுதி-இ  வினா எண்: 56-63)
பாடம் 1, 3, 4, 7 (அமைப்பு, கூட்டாண்மை, நிறுமங்கள் -I, கூட்டுறவு சங்கம் ஆகிய பாடங்களில் உள்ள 8 மதிப்பெண் வினாக்களை மட்டும் முழுமையாக படித்தால் இந்தப் பகுதியில் 5 வினாக்களுக்கு எளிமையாக விடையளித்துவிட முடியும்.

20 மதிப்பெண் வினாக்கள் ஒவ்வொரு பாடத்திலிருந்தும் ஒரு வினா கேட்கப்படும். இவை ‘அல்லது‘ என்ற அடிப்படையில் கேட்கப்படும் (பகுதி ஈ- வினா எண்: 64-67)முதல் மூன்று பாடங்களில் உள்ள வினாக்களைப் படித்தால் முதல் மூன்று 20 மதிப்பெண் வினாக்களுக்கு விடை எழுதிவிட முடியும். (வினா எண்: 64, 65, 66)பாடம் 4, 5, 7 ஆகிய பாடங்களின் 20 மதிப்பெண் வினாக்களை படித்தால் 67 ஆம் எண் வினாவிற்கு விடை அளிக்க முடியும்.

20 மதிப்பெண் வினாக்களில் குறைந்தபட்சம் ஒரு வினா வேறுபாடு சார்ந்த வினா கேட்கப்படும். ஏற்கனவே கூறியதுபோல் புத்தகத்தில் உள்ள வேறுபாட்டு வினாக்களுக்கான விடைகளை படித்துவிட்டால் விரைவாக விடை எழுதி முழு மதிப்பெண்களை பெறமுடியும்.

பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் ‘நான் நன்றாக படித்திருக்கிறேன். நான் நன்றாக எழுதுவேன்‘ என்ற நம்பிக்கையில் என்னால் முடியும் என்ற நேர்மறையான எண்ணத்தோடு இயல்பாக தேர்வை எதிர்கொள்ளுங்கள் 200/200 நிச்சயம் பெறலாம். வாழ்த்துகள்.

X