உட்கருத்தை உள்வாங்கிப் படித்தால் வெற்றி நிச்சயம்!

3/5/2018 2:28:13 PM

உட்கருத்தை உள்வாங்கிப் படித்தால் வெற்றி நிச்சயம்!

பொதுத்தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் மாணவச் செல்வங்களே கொஞ்சம் இதையும் படித்துவிடுங்கள். நீங்கள் எவ்வளவு நன்றாகப் படித்துள்ளீர்கள் என்பதை உங்கள் விடைத்தாள்களே எடுத்துக்காட்டிவிடும். பள்ளிப் பருவம் முதல் கல்லூரி வரை, மாணவர்களுக்கு எழும் கேள்வி, எப்படி படிப்பது? எப்படி அதிக மார்க் எடுப்பது என்பதுதான். சில மாணவர்கள் கஷ்டப்பட்டு படிப்பர், அதிக மதிப்பெண்ணும் பெறுவர். சிலர் சுமாராகப் படிப்பர். ஆனாலும், தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்துவிடுவர். சிலர் என்னதான் கஷ்டப்பட்டு படித்தாலும், அதிக மதிப்பெண் பெற முடிவதில்லை. இதற்குக் காரணம், எப்படி படிக்க வேண்டும் என அவர்களுக்குத் தெரிவதில்லை. ஒவ்வொருவரும் வெவ்வேறு முறைகளில், தேர்வுக்குத் தயாராகின்றனர். எப்படி படிக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆர்வம்
எந்த ஒன்றில் வெற்றி பெறுவதாக இருந்தாலும் அதில் அதிக ஆர்வம் இருக்க வேண்டும். படிக்கும்போது ஆர்வத்துடன் படிக்க வேண்டும். படிக்கும்போது கடினமான பாடம் என நீங்கள் நினைப்பதுதான் உங்களுடைய ஆர்வத்தைக் குறைக்கின்றது, கடினமான பாடம்‘ என்று எதுவும் இல்லை, நீங்கள் கடினம் என நினைக்கும் பாடத்தில் ஆயிரக்கணக்கானோர் Centum (100%) எடுக்கின்றனர். விரும்பி படித்தால் எதுவும் கடினமில்லை.

மறதி
மாணவர்களுக்குப் பொதுவாக உள்ள குறை மறதி, நன்றாகப் படித்தேன் ஆனால் தேர்வறைக்குச் சென்றவுடன் எல்லாம் மறந்துவிட்டது என்று பல மாணவர்கள் கூறுவார்கள். இது மறதி என்று கூற முடியாது, நம்முடைய ஆர்வமின்மையைக்  காட்டுகின்றது.

மறதியைப் போக்க கவனமாகப் படியுங்கள், படிக்கும்போது யாரிடமும் பேசாதீர்கள், பாட்டு கேட்க்காதீர்கள், டிவி பார்க்காதீர்கள் இரவு படிப்பை (Night study) தவிர்த்துவிடுங்கள், அதிகாலையில் படியுங்கள், படித்ததை எழுதிப் பாருங்கள். மேலும் நன்றாகப் படிப்பதைவிடவும் தேர்வில் எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதே மிக முக்கியம். அது மிகச்சிறந்த கலை. அக்கலையை ஒருசில மாணவர்களே கற்றுவைத்துள்ளனர். நீங்களும் அக்கலையைக் கற்றுக்கொண்டால் தேர்வைச் சிறப்பாக எதிர்கொள்ளலாம்.

முதலில் நன்கு தெரிந்த வினாக்களுக்கு விடை எழுதுவதே சிறந்த முறை. தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் வினாக்களை பகுத்துக்கொண்டு விடை எழுதினால் பதற்றத்தைக் குறைக்கலாம். பத்து மதிப்பெண் வினாக்களை முதலில் எழுதி மதிப்பெண்களை ஈட்டி வைத்துக்கொண்டால் நம்மை அறியாமலேயே ஒரு தெம்பு வந்துவிடும். அதன் பிறகு ஐந்து மதிப்பெண் வினாக்கள். அடுத்து இரண்டு மதிப்பெண் வினாக்கள். கடைசியாக ஒரு மதிப்பெண் என்று மாற்றி எழுதுவதும் ஒரு யுக்திதான். சிலர் வினாத்தாளில் உள்ளபடி முதலில் ஒரு மதிப்பெண்ணிலிருந்து தொடங்குவார்கள். அது கடைசிநேரப் பதற்றத்திற்கு வித்திட்டுவிடும்.

மாணவர்கள் பதற்றமில்லாமல் தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக வினாத்தாள் படிப்பதற்கு எனக் கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பல மாணவர்கள் அந்த நேரத்தையும் தேர்வு எழுதுவதற்கே பயன்படுத்திக்கொண்டால் கூடுதல் மதிப்பெண் பெறலாம் என நினைக்கின்றனர். அது தவறான நினைப்பு. அப்படி செய்தால் மதிப்பெண்கள் கூடுவதற்கு பதிலாக குறைவதற்குத்தான் வாய்ப்பு உள்ளது. வினாக்களில் உள்ள லாஜிக்கை புரிந்து கொள்ள நிதானமாக வினாக்களை ஒருமுறை படிப்பது அவசியம். எனவே, அந்த நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தி நிதானமாக வினாத்தாளைப் படித்து கேட்கப்பட்டுள்ள வினாக்களை முதலில் புரிந்துகொள்ளுங்கள். பிறகு விடை எழுதத் தொடங்குங்கள்.

தேர்வைக் கண்டு பயம் வேண்டாம்
தேர்வைக் கண்டு பயப்படவோ, வெறுக்கவோ கூடாது. என்னால் நல்ல மதிப்பெண் பெற முடியும் என நீங்கள் உங்களை நம்பினால், கண்டிப்பாக அந்த எண்ணமே உங்களுக்கு வழிகாட்டியாக அமையும். பாடத்தை மனப்பாடமாகப் படிக்காமல் உட்கருத்தை உள்வாங்கிக்கொண்டு படித்தால் எளிதாகத் தேர்வை எழுதலாம். தேவை இல்லாத குறியீடுகளை எழுதக்கூடாது. விடைகளைச் சரியான முறையில் எழுதுங்கள். அப்போதுதான் விடைத்தாள் மீது மதிப்பு ஏற்பட்டு மதிப்பெண்ணைப் பெற்றுத் தரும். கேள்விக்கு எப்படி பதிலளிப்பது என்பது முக்கியம். ஒரு நாளில் 20க்கும் மேற்பட்ட விடைத்தாள்களை ஆசிரியர் மதிப்பீடு செய்வார். அப்படி இருக்கும்போது, உங்கள் விடைகள் குறுகியதாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். கையெழுத்து நன்றாக இருப்பதோடு அடித்தல் திருத்தல் இன்றி எழுதுவது அவசியம்.

தேர்வு எழுதும்போது
தேர்வு எழுத பள்ளிக்குச் சென்றவுடன் நேராக தேர்வறைக்குச் சென்றுவிடவும், நண்பர்களிடம் கலந்துரையாட வேண்டாம், நாம் படிக்காத கேள்விகளைப் பற்றி நம்மிடம் அவர்கள் விவாதித்தால் அது நம்மை பலவீனப்படுத்தக்கூடும். தேர்வு எழுத முக்கியமான தேவையே நமது நம்பிக்கையாகும் (Confident), நம்பிக்கை இழந்துவிட்டோம் என்றால் தெரிந்த கேள்வியாக இருந்தாலும் கோட்டைவிட்டுவிடுவோம். எனவே, நமது நம்பிக்கையை பலவீனப்படுத்தக்கூடிய எந்த விஷயத்திலும் ஈடுபட வேண்டாம்.

தேர்வறைக்குள் நுழைந்தவுடன் உங்கள் சட்டைப் பை, பேன்ட் பாக்கெட், ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்றவற்றை முழுவதுமாக பரிசோதித்துக் கொள்ளுங்கள், தேவையில்லாத பேப்பர்களைத் தூக்கி எறிந்துவிடுங்கள். தேர்வு எழுதும் நாற்காலியின் மீது ஏதாவது எழுதியிருந்தால் அழித்துவிடுங்கள், அழிக்க முடியவில்லை எனில் தேர்வு கண்காணிப்பாளரிடம் சொல்லிவிடுங்கள்.

கேள்வித்தாள் வந்ததும் கவனமாக படிக்கவும், தெரியாத கேள்விகள் முதலில் வந்தால் மனம் தளர்ந்துவிட வேண்டாம் (Don’t loose your confident). தொடர்ந்து கேள்வித்தாளைப் படிக்கவும். நன்றாக தெரிந்த கேள்விகளை முதலில் எழுதுங்கள், பிறகு ஓரளவிற்க்கு தெரிந்த கேள்விகளை எழுதுங்கள், இறுதியாக தெரியாத கேள்விகளுக்கு உங்களுக்குத் தெரிந்த பதிலை எழுதுங்கள், தவறாக இருக்குமோ என அச்சம் வேண்டாம்.

எந்த கேள்வியையும் விடாமல் எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதுங்கள். பக்கம் பக்கமாக பதில் எழுதாமல், குறிப்பு குறிப்பாக எழுதுங்கள் (Points points-ஆக எழுதுங்கள்), முக்கியமான வரிகளை அடிக்கோடிடுங்கள். சூத்திரங்களையும், சமன்பாடுகளையும் (Formulas and Equations) கட்டத்திற்குள் எழுதுங்கள். வரைபடத்தின் மூலமும், அட்டவணை மூலமும் பதிலை விளக்குங்கள். பொதுவாக முதலில் எழுதும் கேள்விகள் அதிக நேரம் பிடிக்கும். எனவே முதல் மூன்று கேள்விகளை நேரத்தை பார்த்து குறுகிய நேரத்தில் எழுத முயற்சி செய்யுங்கள்.

ஒவ்வொரு கேள்விக்கும் நேரம் ஒதுக்கி அதற்குள் என்ன எழுத முடியுமோ அதை எழுதுங்கள். ஒரு கேள்விக்கான நேரம் முடிந்ததும் உடனே அடுத்த கேள்விக்கு சென்றுவிடுங்கள். ஒரே கேள்வியை நீண்ட நேரம் எழுதிக்கொண்டு இருக்க வேண்டாம். விடைத்தாளை அளிக்கும் முன் கேள்வி எண்ணையும் பதில் எண்ணையும் சரிபார்த்துக்கொள்ளுங்கள். புதிய பேனாவை வைத்து எழுத வேண்டாம், வேகம் கிடைக்காது, நீங்கள் எழுதிப் பழகிய பேனாவின் மூலமே எழுதுங்கள். எல்லா கேள்வி களுக்கும் விடை எழுதிய பிறகு நேரம் இருந்தால் விடைத்தாளை அழகுபடுத்தும் வேலையைச் செய்யுங்கள்.

தேர்வு எழுதி முடித்தபிறகு
தேர்வு எழுதியவுடன் நேராக வீட்டிற்குச் செல்லவும் நண்பர்களுடன் வினா-விடை பற்றி விவாதிக்க வேண்டாம். நாம் தேர்வுகளில் செய்த சிறிய தவறுகளைச் சுட்டிகாட்டி நமக்கு மனஉளைச்சலை ஏற்படுத்திவிடுவார்கள். இது நம்மை கவலையில் ஆழ்த்திவிடும். இது நாம் அடுத்த தேர்வுக்கு ஆயத்தமாவதை பாதிக்கும். நாம் என்னதான் வருத்தப்பட்டாலும் கவலைப்பட்டாலும் மீண்டும் அந்தத் தேர்வை எழுதமுடியாது. நமக்குத் தெரிந்ததை எழுதிவிட்டோம். எனவே தேர்வு எழுதியவுடன் நேராக வீட்டிற்குச் சென்று அடுத்த தேர்விற்குப் படிக்க ஆரம்பியுங்கள்.

- இரத்தின புகழேந்தி

X