தேர்வுக்குத் தேவை நேர மேலாண்மை!

3/5/2018 2:30:12 PM

தேர்வுக்குத் தேவை நேர மேலாண்மை!

தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் கையாள வேண்டிய முதல் விஷயம் நேர மேலாண்மை. ஆனால் ஒருசில மாணவர்களிடம் கேட்டால், ‘நிறைய பாடங்கள் இருக்கின்றன. ஆனால், அத்தனையையும் படிப்பதற்கு நேரம் இல்லை!’ என்பார்கள். இதன் பொருள், தேர்வு அழுத்தத்தைச் சரிசெய்ய ஒரு சிறந்த வழி, நேர மேலாண்மை. பல மாணவர்கள் தேர்வின்போது தங்களுக்குக்கிடைக்கும் நேரத்தை வீணடித்துவிடுகிறார்கள். சிலர் படிக்க விரும்புவதே இல்லை, இன்னும் சிலர் ‘அப்புறம் படித்துக்கொள்ளலாம்’ என்று இருந்துவிடுகிறார்கள். தேர்வுக்குப் படிக்க ஆகும் நேரத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிடுகிறார்கள். ஒருவர் தன்னுடைய நேரத்தைத் திட்டமிடுகிறார் என்றால், அவர் அதைப்பற்றி தொலைநோக்குடன் சிந்திக்கிறார்.

இப்படி உருவாக்கிய திட்டத்தை அவர் பின்னர் மாற்றவேண்டியிருக்கலாம். ஆனால், தொடக்கத்தில் தன்னுடைய வேலைகளை ஒழுங்காக வரையறுத்ததால், அவர் பலன் பெறுவார். பல நேரங்களில், ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்ய எவ்வளவு நேரம் தேவைப்படும் என்பதை மாணவர்கள் உணர்வதில்லை. ஒன்று, அதனை அதிகமாக மதிப்பிட்டுவிடுகிறார்கள், அல்லது, குறைத்து மதிப்பிட்டுவிடுகிறார்கள்.

இதனால், ஒருவர் தன்னுடைய வழக்கமான வேலைகளுக்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறார் என்பதைக் கருத்தில் கொள்வது நல்லது. அப்படி திட்டமிட்டால்தான் தேர்வு அறையில் வினாத்தாளை வாங்கியது முதல் தாளை கட்டிக் கொடுக்கும் வரை ஒவ்வொரு வினாவுக்கும் எவ்வளவு நேரம் போதுமானது என திட்டமிட முடியும். அப்படி திட்டமிட்டு வினாக்களுக்கு விடையளிக்கும்போது பதற்றமில்லாமல் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க முடியும்.

பாடங்களைப் படிப்பதற்கு மட்டுமல்ல தேர்வின்போது ஒவ்வொரு வினாவிற்கும் விடையளிக்கும் நேரத்தையும் திட்டமிட்டே செலவழிக்க வேண்டும். அப்போதுதான் கொடுக்கப்படும் நேரத்துக்குள் வினாத்தாளின் அனைத்துப் பகுதி வினாக்களுக்கும் நாம் விடையளிக்க முடியும் என்பதை மாணவர்கள் மறந்துவிடக்கூடாது. தேர்வு மட்டுமல்ல எந்த ஒரு செயலுக்குமே திட்டமிடல் என்று சொல்லும்போது அதற்கு அடிப்படையாக அமைவது நேர மேலாண்மைதான். ஆகவே மாணவர்களே சரியாக திட்டமிடுங்கள். வெற்றி பெறுங்கள்!

- முத்து

X