பரிட்சை நேரத்திற்கான உணவுமுறை..!

3/5/2018 2:34:43 PM

பரிட்சை நேரத்திற்கான உணவுமுறை..!

பரிட்சை போன்ற நேரங்களில் மாணவர்கள் உணவையும் உடல்நலத்தையும் மறந்து படிப்பது வழக்கம். இதனால், உடல் சோர்வடைவதுடன் பரிட்சையும் சரியாக எழுத முடியாமல் போய்விடும். இது மாதிரியான நேரங்களில் என்ன மாதிரியான உணவுமுறைகளை பின்பற்ற வேண்டும் என உணவியல் ஆலோசகர் யசோதரை கருணாகரன் கூறும் ஆலோசனைகள்...

‘‘ஊட்டச்சத்துக்கள்தான் ஆரோக்கியமான உடலின் உருவாக்கம் மற்றும் பராமரிப்புக்கு அடித்தளமாகும். முக்கியமாகப் பரிட்சை நேரத்தில் மாணவர்களுக்குத் தேவைப்படும் கவனிப்புச் சக்தி, மனப்பாடத்திறன், அறிவுத்திறன் போன்றவற்றினால் செயல்திறன் படிப்பில் மேம்பெற ‘‘சரிவிகித உணவு’’ மிகவும் துணை செய்யும். சிறுவயதினர் மிகவும் ஈர்க்கப்படுவது எண்ணெயில் பொரித்த மற்றும் துரித உணவுகளில்தான். இதனால் சரிவிகித உணவில் சுணக்கம் ஏற்படும். ஆனால் அவர்களின் விருப்ப உணவு அதிக சக்தியைத் தருமேயொழிய புரதம், வைட்டமின் மற்றும் தாது உப்புக்களை தராது. ஆகவே இவர்களின் உடல்நலன், தேர்ந்தெடுக்கப்படும் உணவு மற்றும் ஆரோக்கிய உணவினை உண்ணும் அளவினைப் பொறுத்து உள்ளது. உண்ணும் உணவின் அளவு, உடல் மற்றும் மனதைத் திருப்தி அடையச் செய்ய வேண்டும்.

காலை உணவில் புரதம் அதிகம் இருப்பது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு நான்கு மணி நேரம் உயர்நிலையில் வைத்திருக்க உதவும். ஆனால் மாவுச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து இரண்டு மணி நேரம்தான் இருக்கச் செய்யும். பசியுடன் சோர்வு ஏற்பட்டால் ரத்தத்தின் சர்க்கரையின் அளவு குறைந்துவிடும். இட்லி சாம்பார், எண்ணெய் இல்லாத தோசை, கோதுமை பிரெட், பொங்கல், பச்சை வகைச் சட்னி போன்றவை நல்லதொரு காலை உணவாகும்.

மதிய நேரத்தில் பாஸ்ட் ஃபுட் போன்ற குப்பை வகையான உணவுகளைத் தவிர்த்து வைட்டமின் மற்றும் தாது உப்புக்கள் அதிகம் அடங்கிய காய், சூப், மோர், இளநீர் ஆகியவைகளை உண்பது நல்லது. மாலைநேர உணவாக நொறுக்குத் தீனிக்குப் பதிலாகப் புதிய பழங்கள் நல்லது.  இரவில் அதிகளவு மாவுச்சத்து, மிதமான புரதம், குறைந்தளவு கொழுப்புச் சத்து நிறைந்த சப்பாத்தி, முளைவிட்ட பயறு, கிரேவி குறைந்தளவு மசாலாக்களுடன், தயிர்ப் பச்சடி போன்றவற்றை உண்பது உகந்தது. அவசரமாய் தயாரிக்கப்பட்ட இரவு உணவில் ஊட்டச்சத்துக்கள் மிகவும் குறைவாக இருக்கும்.

Threonine என்ற அமினோ அமிலம் உடல் மற்றும் மனரீதியான வளர்ச்சியை ஏற்படுத்தும். கோதுமை, கிழங்கு வகைகள், தானியங் களில் அதிகம் உள்ளது. மனஅழுத்தம் ஊட்டச்சத்துக்களை நிலைநிறுத்துவதில் பாதக விளைவுகளை ஏற்படுத்தும். இது பரிட்சை சமயங்களில் பொதுவாக ஏற்படும் பிரச்னையாகும். இதனால் வைட்டமின்-B குறைபாடு ஏற்படும். வைட்டமின்-B அதிகமாக இருப்பது தானியங்கள், oily fish, முளைப்பயிர்கள், தயிர் மற்றும் பாலாகும். மேலும், மன அழுத்தம் குடலின் இயக்கத்திலும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தி வயிற்றுப்போக்கு, மந்தமான நிலை, சக்தியற்ற நிலை போன்றவற்றினால் நடக்கப்போகும் பரிட்சையின் போக்கு எப்படியாகுமோ என்ற பயந்தசூழ்நிலையில் மோசமாக்கிவிடும். இதனைத் தவிர்க்க காலையில் வெறும் வயிற்றில் இரண்டு தேக்கரண்டி தயிர் உண்பது இன்றியமையாததாகும்.

வாழைப்பழம் நல்ல ஞாபகசக்தியை தருவதுடன், பரிட்சை பதற்றத்தினால் வயிற்றில் அதிகளவு அமிலச் சுரப்பை தடுத்து நிறுத்தும். இப்பழம் எதிர்ப்பு மனத்தளர்ச்சி கடத்தியாகவும் செயல்படும். முட்டை சிறுவயதினருக்கு இச்சமயங்களில் நன்மைகளைச் சேர்த்தாலும் பால், இறைச்சி, பழங்கள், பனீர், மீன், வாழைப்பழம் ஆகியவற்றுடன் உண்ணக்கூடாது.

வைட்டமின் B6 மாணவர்களின் மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. முட்டை, மீன், சோயா, வாழைப்பழம் முதலியன சிறந்த வைட்டமின் B6 உணவாகும். வைட்டமின் C-யில் பற்றாக்குறை சோர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தும். ஆகையால் அவை அதிகம் உள்ள கொய்யா, புளிப்புப் பழங்கள் முளைப்பயிறு வகைகள் நல்லது. இரண்டு வாழைப்பழம், மீன், குடைமிளகாய் போன்றவை போதுமான நுண்ணூட்டச் சத்துக்களை கொடுப்பதுடன் கவனிப்புத்திறன் மற்றும் ஞாபகச் சக்தியையும் தரும். சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீரைத் தவிர்த்து வெதுவெதுப்பான நீரை அருந்துங்கள்.

- திருவரசு

X