+2 வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?

4/20/2018 11:04:04 AM

+2 வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

உயர்கல்வி வாய்ப்புகளும்... நுழைவுத் தேர்வுகளும்!

பள்ளிப் படிப்பின் இறுதி வகுப்பான +2வுக்கு தேர்வுகள் முடிந்துவிட்டன. பத்தாம் வகுப்புக்கும் ஏப்ரல் 20ல் பொதுத் தேர்வு முடிந்துவிடும். அடுத்தது என்ன? தேர்வு முடிவை எதிர்பார்த்திருப்பது மட்டுமில்லாமல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனதில் பல எண்ணங்களும் கேள்விகளும் எழும்.

அவை, என்ன படிக்க வேண்டும்? எங்கு படிக்க வேண்டும்? இப்படிப்பிற்கு என்ன செலவாகும்? இப்படிப்பைப் படித்தால் வேலை கிடைக்குமா? என்பனவாகத்தான் இருக்கும். அந்தக் கேள்வி களுக்கு அவர்களே விடைகாணும் விதமாகச் சில ஆலோசனைகளை இனி பார்ப்போம்…  

எப்படி படிப்பைத் தேர்வு செய்வது?

பத்தாம் வகுப்பிற்குப் பின் எந்த குழுவை எடுத்து படிக்க வேண்டும்? பன்னிரண்டாம் வகுப்பிற்குப் பின் என்ன படிப்பை தேர்வு செய்ய வேண்டும்? இந்த இரண்டு முடிவுகளுமே ஒரு மாணவனின் முழு வாழ்க்கையையும் நிர்ணயிக்கும் காரணிகள் என்றால் மிகையாகாது. விரும்பிய பாடப்பிரிவைத் தேர்வு செய்து, படித்து, பின் விரும்பிய வேலையைப் பெற்று அல்லது விரும்பிய தொழிலை மேற்கொள்வது என்பது ஒருவனுக்கு முழுவதும் மனநிறைவையும், மகிழ்வையும் தருகின்ற ஒன்றாகும். இதற்கு நாடு முழுமையும் உள்ள படிப்புகளையும், அவற்றிற்கான வாய்ப்புகளையும் முழுவதுமாக அறிந்துகொள்வது அவசியமாகும். இதற்கு ‘தேடல்’ மிக மிகத் தேவை.

குறிப்பிட்டப் படிப்பைத் தேர்வு செய்வது என்பது அவரவர் விருப்பத்தையும், நோக்கத்தையும், எதிர்காலத் திட்டங்களையும், குடும்பச் சூழல்களையும் பொறுத்ததேயன்றி, நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ பொறுத்தது அல்ல.பொறியியல், மருத்துவம், விவசாயம், கட்டடக்கலை, உயிர்தொழில்நுட்பம், விண்ணியல், வானியல் என்ற தொழில் படிப்புகள், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் உள்ளிட்ட இளநிலை அறிவியல் படிப்புகளை நாடுபவர்கள் பத்தாம் வகுப்பிற்குப் பின் ‘கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல்’குழுவைத் தேர்வு செய்துகொள்ளலாம். இதில் நான்காவது பாடமாக, உயிர்வேதியல், உயிர்தொழில்நுட்பம் என்ற பாடத்தைத் தேர்வு செய்வதும் தவறில்லை. உயிரியல் சார்ந்த படிப்புகளைத் தவிர்க்க விரும்புபவர்கள், நான்காவது பாடமாக புள்ளியியல் அல்லது கணினியியல் பாடங்களைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

கணக்கியல், மேலாண்மை, சட்டம், வணிகம், பொருளாதாரம் உள்ளிட்ட படிப்புகளை நாடுவோர் பத்தாம் வகுப்பிற்குப் பின் கணிதம், பொருளியல், வணிகவியல், கணக்கியல் உள்ள குழுவைத் தேர்வு செய்துகொள்ளலாம். கணிதத்தைத் தவிர்க்க விரும்புபவர்கள், கணிதத்திற்குப் பதிலாக கணினி, மொழி போன்ற பாடங்களை எடுத்துக்கொள்ளலாம்.

பன்னிரண்டாம் வகுப்பிற்குப் பின், என்ன படிக்க வேண்டும், என்ன வேலைக்குச் செல்ல வேண்டும், என்ன தொழில் செய்ய வேண்டும் என்பவற்றிற்கான திட்டம் பத்தாவது முடிந்தவுடனே செயல்படுத்தப்பட வேண்டும்.பல்வேறு மாற்றங்களையும், புதுமைகளையும் பெற்று இந்தியாவின் கல்வி, மிகக் குறிப்பாகத் தமிழ்நாட்டின் கல்வி சென்றுகொண்டுள்ள இந்நாளில், இந்த மாற்றங்களைப் பற்றிய விழிப்புணர்வு பெற்றோர்களும், மாணவர்களும் அவசியம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியவை.

+2ல் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் போதும், ஏதேனும் ஒரு கல்லூரியில் இடம் கிடைத்துவிடும், பின் பார்த்துக்கொள்ளலாம் என்ற நிலை மாறி, அனைத்து உயர்படிப்பிற்கான இடங்களுக்கும் ‘நுழைவுத் தேர்வுகளில்’தேர்ச்சி தேவை என்ற நிலை உருவாகிவிட்டது. இவற்றைப் பற்றிய விழிப்புணர்வு இன்னும் அவசியமாகிவிட்டது. இதை இன்னமும் புரிந்து கொள்ளாமல், எந்திரகதியான படிப்பை, புரிதல் இல்லாத படிப்பை, சிந்தனை சக்தி இல்லாத ஆக்கப்பூர்வமற்ற கல்வியைத் தருவது பயனற்றது.

அகில இந்தியப் போட்டித் தேர்வுகள்தமிழ்நாட்டில் உள்ள பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட அனைத்துத் தொழில் படிப்புகளுக்கும் +2 பொதுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள், அதுவும் குறிப்பிட்ட பாடங்களில் எடுத்த மதிப்பெண்கள் போதும் என்ற நிலை பல ஆண்டுகளாக இருந்த காரணத்தால், மதிப்பெண்ணை நோக்கி மட்டுமே மாணவர்கள் படிப்பு இருந்தது.

இதற்காக மட்டுமே பயிற்சி கொடுப்பது என்ற நிலையை பள்ளிகள், குறிப்பாகத் தனியார் பள்ளிகள் கையிலெடுத்த காரணத்தால் மாணவர்களின் கல்வித்தரம் குறைந்துவிட்டது. இந்த நிலையிலும் அகில இந்திய அளவில் 15% தொழில் படிப்பு இடங்களுக்கு முயற்சி செய்து வெற்றி பெற்ற மாணவர்கள் இல்லாமலில்லை. ஆனால், தற்போது அகில இந்திய இடங்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள இடங்களுக்கும் பொது நுழைவுத் தேர்வு தேவை என்ற நிலை உள்ளது.

இனி என்னென்ன படிப்புகளுக்கு என்னென்ன அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் உள்ளன என்பதைப்பற்றிப் பார்ப்போம்.பொறியியல் படிப்புகளைப் பொறுத்தமட்டில், மாணவர்களின் கனவு இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களை (Indian Institute of Technology) நோக்கியே உள்ளது.

அரசின் பொறியியல் கல்வி நிறுவனங்களில் சேர, மாணவர்கள் Central Board of Secondary Education (CBSE) நடத்தும் Joint Entrance Examination (JEE) Main தேர்வையும், இதைத் தொடர்ந்து இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி நடத்தும் JEE Advanced தேர்வையும் எழுதி தேர்ச்சி பெற்று அகில இந்திய தரவரிசை பட்டியலில் இடம்பெற வேண்டும்.

JEE Main தேர்ச்சி பெற்றவர்கள்தான் JEE Advanced தேர்வை எழுத இயலும். JEE Main மட்டும் தேர்ச்சி பெற்றவர்கள், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (NIT), மத்திய அரசின் நிதி உதவி பெறும் நிறுவனங்கள் (Centrally Funded Institute) மற்றும் JEE நுழைவுத் தேர்வு வழியாக மாணவர்களைத் தேர்வு செய்ய இசைந்திருக்கும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றில் சேரலாம்.

இதைத் தவிர, இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் எஜுகேசன் அண்ட் ரிசர்ச், இண்டியன் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, உணவு அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (Food Science Technology), பயிர் தொழில்நுட்ப நிறுவனங்கள் (Crop Technology) போன்றவை JEE தரவரிசைப் பட்டியலிலிருந்து மாணவர்களைத் தேர்வு செய்துகொள்கின்றன. இவற்றிற்கெல்லாம் +2ல் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. குறிப்பிட்ட குறைந்தபட்ச தேர்ச்சி இருந்தாலே போதும்.

பொது மருத்துவம் (MBBS), பல் மருத்துவம் (Dental), கால்நடை மருத்துவம் (Veterinary Science), தமிழ்நாட்டில் சித்த மருத்துவம் (BSMS - Bachelor of Siddha Medicine and Surgery), இந்திய மருத்துவமான ஆயுர்வேதம் (BAMS - Bachelor of Ayurvedic Medicine on Surgery), அரேபிய மருத்துவமான யுனானி (BUMS- Bachelor of Unani Medical Science), இயற்கை மருத்துவம் மற்றும் யோகா (BNYS - Bachelor of Naturally and Yogic Science) போன்ற படிப்புகளுக்கும், CBSE  நீட் (NEET - National Eligibility Entrance Test) என்ற தேர்வை நடத்துகிறது. இதற்கான விதிமுறைகளை மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இண்டியா தயார் செய்கிறது. இந்தத் தேர்வுகளும் +2ல் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணைத் தவிர வேறு எந்த மதிப்பெண்களும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

பாதுகாப்புத்துறை நடத்தும் புனேவில் உள்ள ஆர்ம்டு ஃபோர்ஸ் ஆஃப் மெடிக்கல் காலேஜில் (AFMC - Armed Force of Medical College) சேர விரும்புபவர்களும் நீட் தேர்வின் தரவரிசை வழியாகத்தான் இடம்பெற இயலும். ஆனால், AFMC க்கு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

இவற்றைத் தவிர, ஆல் இண்டியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் (AIIMS - All India Institute of Medical Sciences) மருத்துவக் கல்வி நிறுவனமும், பாண்டிச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் உள்ள தங்கள் மருத்துவக் கல்லூரிகளுக்கும் ஜிப்மர் (JIPMER - Jawaharlal Institute of Post Graduation Medical Education and Research) தனித்தனியே அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன.

இந்தியா முழுமையும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இவற்றிற்கு நீட் வழியாகத்தான் இடம் கிடைக்கும்.பொறியியல், அண்ணா பொறியியல் பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகள், அதன் துறைகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லூரிகள் அனைத்தும் +2ல் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களின் கட் ஆஃப் அடிப்படையில் மாணவர்களைச் சேர்க்கின்றன.

கட்டடக்கலை எனப்படும் ஆர்க்கிடெக்சர் (Arch) படிப்புகளான பி.ஆர்க் (B.Arch) படிக்க இரண்டு வழிகள் உள்ளன. JEE தேர்வின் இரண்டாம் தாளை எழுதி தேர்ச்சி பெற்று இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி நிறுவனங்களில் சேரலாம் மற்றும் இந்தியாவில் உள்ள அரசு, தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அனைத்துக்கும் National Aptitude Test in Architecture - NATA என்ற நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று தரவரிசையில் இடம்பெற வேண்டும்.

தரவரிசைக்கு நேட்டா மதிப்பெண்கள் மற்றும் +2 மொத்த மதிப்பெண் இவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.விவசாயம், விவசாயம் சார்ந்த, விலங்கு சார்ந்த படிப்புகளை அகில இந்திய விவசாய நிறுவனங்களில் படிக்க இண்டியன் கவுன்சில் ஆஃப் அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச் (ICAR - Indian Council of Agricultural Research) நடத்தும் தேர்வை எழுத வேண்டும். ICAR வழியாக நுழைவுத் தேர்வின் அடிப்படையில்தான் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். +2 மதிப்பெண்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் உள்ள விவசாயப் பல்கலைக்கழகங்களில் உள்ள இளநிலை விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு மாணவர்கள் +2 தேர்வின் கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இதேபோல்தான், தமிழ்நாட்டில் மீன்வளப் பல்கலைக்கழகத்தின் மீன்வள படிப்புகள், நாட்டிக்கல் சயின்ஸ் படிப்புகளுக்கும்.  கடல்சார் படிப்புகளுக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வைச் சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (Indian Marine University) நடத்துகிறது.

தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகம், இப்பல்கலைக்கழகத்தின் கீழே இயங்கும் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் உள்ள துணை மருத்துவப் படிப்புகளில் BPT - Bachelor of Physiotherapy, BOT - Bachelor of  Occupational Therapy, BASLP - Bachelor of Audiology Speech Language ஆகிய படிப்புகளுக்கு +2ல் கட் ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ராணுவக் கல்லூரிகள் சேர்ந்து இலவசமாகப் படித்து, இதைத் தொடர்ந்து முப்படைகளில் அதிகாரிகளாகச் சேர நேஷனல் டிஃபன்ஸ் அகாடமி நடத்தும் தேர்வின் வழியாக வாய்ப்பை பாதுகாப்புப் படை தருகிறது. இதற்கான தேர்வை +2 முடிந்த மாணவர்களுக்காக பாதுகாப்புத் துறை இருமுறை நடத்துகிறது.

இந்த எழுத்துத் தேர்விலும், இதைத் தொடர்ந்த சர்வீஸ் செலக்சன் போர்டு தேர்விலும் தேர்ச்சி பெறுபவர்கள் டேராடூன் தரைப்படைக் கல்லூரி, எழில்மலா கப்பற்படைக் கல்லூரி, ஐதராபாத் விமானப்படைக் கல்லூரி இவற்றில் சேர்ந்து இளநிலை அறிவியல் அல்லது தொழில்நுட்பப் பட்டம் பெற்றும் ராணுவப் பயிற்சியைப் பெற்று தொடர்ந்து ஜூனியர் கமிஷன் ஆபிசர், பைலட் போன்ற பதவிகளைப் பெறலாம்.

+2வுக்குப் பின் விமான ஓட்டுநர் (பைலட்) பதவிகளும், பெண்களுக்கு ஏர்ஹோஸ்டர் படிப்பிற்கு தேர்வுகளும் நடைபெறுகின்றன.சட்டப்படிப்பு படிக்க விரும்புவர்கள் தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் சேர, காமன் லா அட்மிஷன் டெஸ்ட் (CLAT) என்ற தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர +2  மதிப்பெண் அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.

நவநாகரிக இந்தியா முழுமையும் உள்ள ஆடை, ஆபரண, துணி, தோல் வடிவமைப்பு படிப்புகளில் சேர்ந்து பட்டம் பெற, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை நடத்துகிறது.உணவக மேலாண்மை, உணவு தயாரித்தல் உள்ளிட்ட உணவகப் படிப்புகளில் (Catering) சேர நேஷனல் கவுன்சில் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி (NHMCT) தேர்வு நடத்தப்படுகிறது.

நேரடியாக சார்ட்டர்டு அக்கவுண்டன்சி (Charted Accountancy - CA) படிக்க, காமன் புரொபிசியன்சி டெஸ்ட் நடத்தப்படுகிறது. இவை தவிர கணக்கியல் பிரிவை எடுத்து படித்தவர்களும், மற்ற துறையில் படித்தவர்களும் பி.காம்., பி.பி.ஏ., பி.ஏ. கார்ப்பரேட் போன்ற படிப்புகளை +2 மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்ந்து படிப்பதுடன் ICWAI (Institute of Cost Works Accounts of India) படிப்புகள் அல்லது ACS (Associate Company Secretary) படிப்புகளையும் படிக்கலாம்.

ஆய்வை நோக்கிச் செல்லும் ஒருங்கிணைந்த அறிவியல் படிப்புகளில் சேர, நேஷனல் எலிஜிபிலிட்டி ஸ்கிரீனிங் டெஸ்ட் (NEST) நடத்தப்படுகிறது. இதே போல் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான நுழைவுத் தேர்வு பெங்களூரில் உள்ள ஆசிரியர் பல்கலைக்கழகம் நடத்துகிறது.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களிலும், அவற்றின் துறைகளிலும், உறுப்புக் கல்லூரிகளிலும், இவற்றின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளிலும் சேர்ந்து இயற்பியல், வேதியியல், கணிதம், புள்ளியியல், சுற்றுப்புறச் சூழ்நிலையியல், மின்னியல், மண்ணியல், உளவியல், வரலாறு, பொருளாதாரம் உள்ளிட்ட இன்னபிற படிப்புகளுக்கு கட் ஆஃப் மற்றும் நேர்முகத் தேர்வின் வழியாக மாணவ்ரகள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இப்படியாகக் கொட்டிக் கிடக்கும் படிப்புகளும் ஏராளமான வாய்ப்புகளும் காத்திருக்கின்றன. இவற்றிற்கான தேடலும் இவற்றில் வெற்றி பெற உந்துதலும், முனைப்புமே மாணவர்களுக்கு தேவையானவை!

X