கற்றல் குறைபாட்டைப் புரிந்துகொள்ளுங்கள்!

4/27/2018 2:34:43 PM

கற்றல் குறைபாட்டைப் புரிந்துகொள்ளுங்கள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளைப் புரிந்துகொள்ளுங்கள். ‘ஸ்பெஷல் கிளாஸுக்கு அனுப்பியும், டியூஷன் அனுப்பியும் கூட ஒழுங்கா படிச்சி மார்க் வாங்கலியே என்று கவலைப்பட்டுக்கொண்டு இருக்காதீர்கள். அதற்கான காரணம் என்னவென்று யோசியுங்கள்.‘‘ஒரு வகுப்பறையில் 40 குழந்தைகள் படிக்கின்றனர் என்றால், அதில் 4 குழந்தைகள் கற்றல் குறைபாட்டுடன் உள்ளனர் என்கிறது ஓர் ஆய்வு.

அதாவது, படிப்பு மண்டையில் ஏறவில்லை, சோம்பேறி, முட்டாள் என ஆசிரியர்களாலும், பெற்றோர்களாலும் புறக்கணிக்கப்படும் குழந்தைகள்தான் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள். ஆனால், வகுப்பறையில் படிக்கும் மற்ற குழந்தைகளைவிட இவர்கள் புத்திசாலிகளாகவும், திறமைசாலிகளாகவும் இருப்பார்கள். முறையான பயிற்சி அளித்தால் மற்றவர்களைவிட சிறந்து விளங்குவார்கள்’’ என்கிறார் சிறப்புக் கல்வியாளர் ஷோபா அசோக்.

‘‘கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளைப் பெரும்பாலும் பள்ளியில் சேர்த்த பின்புதான் கண்டறிய முடியும். அதற்காகக் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள் அறிவுத்திறனில் சளைத்தவர்கள் ஆகிவிடமாட்டார்கள். படிப்பில் ஆர்வம் இல்லாமலோ குடும்பச் சூழலாலோ மற்றும் உணர்வுரீதியினாலோ கற்றல் குறைபாடு ஏற்படு வதில்லை. அது ஒருவித நரம்பியல் கோளாறு. இந்த நரம்பியல் கோளாறு தகவல்களைச் சேமித்தல், பாதுகாத்தல் மற்றும் செயல்படுத்துதல் போன்ற ஆற்றலைப் பாதிக்கிறது. அதனால் பெற்றோர்கள் தன் குழந்தைக்கு ஏழு வயது நெருங்கும்போது அவர்களது குணாதிசயங்கள் மற்றும் கற்கும்திறன் அந்த வயதிற்கேற்றபடி இருக்கிறதா எனக் கண்டறிவது அவசியம்’’ என்கிறார் ஷோபா.

மேலும் அவர் கூறும்போது, ‘‘கற்றல் குறைபாடு பற்றிய போதுமான விழிப்புணர்வு நம்மிடம் இல்லை. மூளை நரம்புகளை அதிர்வலைகள் மூலம் செயல்பட வைக்கும் செல்களான நியூரான்களின் செயல்திறன் குறைபாட்டால் ஏற்படும் கற்றல் குறைபாடு மூன்று வகை. அவை டிஸ்லெக்சியா, டிஸ்கிராஃபியா மற்றும் டிஸ்கேல்குலியா. இந்த மூன்று வகை குறைபாட்டில் உள்ள வேறுபாட்டை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு குழந்தை வளர்ச்சியடையும்போது சில அடிப்படையான அறிவாற்றல் மற்றும் இயந்திரவியல் திறன்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாமதமோ,  இடைவெளியோ இருந்தால் அது கற்றல் குறைபாட்டின் அறிகுறி. இதற்குப் பல பரிசோதனைகளும், மதிப்பீடுகளும் உள்ளன. கற்றல் குறைபாடு உள்ளதா இல்லையா என்பதை உளவியல் நிபுணர்கள் (Psychologists) சோதித்து அறிந்து உறுதிப்படுத்துவார்கள்’’ என்கிறார்.

கற்றல் குறைபாட்டின் வகைகளையும் அவற்றிலிருந்து மீள்வதற்கான வழிகளையும் விளக்கும்போது, ‘‘முன்பே குறிப்பிட்டது போலக் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். Dyslexia, Disgraphia மற்றும் Discalculia.Dyslexia: லத்தீன் மற்றும் கிரேக்க மொழியின் கலவையே Dyslexia. ‘டிஸ்’ என்றால் ‘சிரமம்’. ‘லெக்ஸியா’ என்றால் ‘மொழி’. `தெளிவற்ற பேச்சு’ என்பதன் வார்த்தைப் பிரயோகமே டிஸ்லெக்ஸியா என்று குறிப்பிடப்பட்டது.

Disgraphia: இந்தக் குறைபாடு உள்ளவர்களுக்கு எழுதுவதில் சிரமம் ஏற்படும். இவர்களால் தெளிவாக எழுத்துப் பிழையின்றி எழுத முடியாது. என்ன நினைக்கிறார்களோ அதைக் கிரகித்து, எழுத்து மூலம் ஒருசேர வெளிப்படுத்த மிகுந்த சிரமப்படுவார்கள்.Discalculia: கணக்கில் மிகவும் பலவீனமாக இருப்பார்கள். எண்களை வரிசைப்படுத்துதல், நினைவில் வைத்துக்கொள்ளுதல், எண்ணுதல், நேரம் பார்த்தல் போன்றவற்றில் சிரமப்படுவார்கள்.

இந்த நரம்பியல்சார் பிரச்னை மருந்து மாத்திரைகளால் குணப்படுத்த வேண்டியது இல்லை. ஆனால், நல்ல செய்தி என்னவென்றால், இந்தக்  குழந்தைகள் பொதுவாகவே புத்திசாலிகளாகவும் திறமைசாலிகளாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு மாற்று முறையில் சிறப்புக் கல்வியாளர் மூலம் பயிற்சிகளை வழங்கினால் பள்ளியிலும் வாழ்க்கையிலும் வெற்றி பெறச் செய்யும் திறன்களை வளர்க்க முடியும்.

பெற்றோர்களும் ஆசிரியர்களும் எவ்வளவு சீக்கிரமாக இந்தக் குறைபாட்டைச் கண்டுபிடித்து சிகிச்சை மேற்கொள்கிறார்களோ அவ்வளவு சீக்கிரம்  இந்தக் குறைபாட்டால் பள்ளியிலும் மற்றும் வாழ்க்கையிலும் ஏற்படும் சிரமங்களை எளிதாகத் தீர்க்க முடியும்’’ என்கிறார் ஷோபா. ‘‘அமெரிக்காவைச் சேர்ந்த ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூராலஜிக்கல் டிசீஸ்’-ன் ஆய்வறிக்கைபடி, இன்றளவில் உலக மக்களின் 17% பேர், இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு அதற்கான சிறப்புப் பயிற்சி வழங்கும் இடங்களும் உள்ளன. இவர்களுக்கு சிறப்புச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

இந்தச் சான்றிதழ் இருக்கும்பட்சத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நேரத்தில் ஒரு மணி நேரம் கூடுதலாகப் பெறமுடியும். கணிதக் குறைபாடு உள்ளவர்கள் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். மொழிக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மதிப்பிடும்போது எழுத்து வடிவத்தில் உள்ள குறைபாடுகள் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படாது. இதுபோன்ற சலுகைகள் பெறக் கற்றல் குறைப்பாட்டுக்கான சான்றிதழ் பெற வேண்டியது அவசியம். அதே சமயம் கற்றல் குறைபாடு மாற்றுத்திறன்போல மதிப்பெண் சான்றிதழில் அடையாளப்படுத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவருக்கு கற்றல் குறைபாடு எனக் கண்டறிவதன் நோக்கம், அவரை முத்திரைக் குத்தி, சமுதாயத்திலிருந்து பிரித்து காயப்படுத்த அல்ல.  பிரச்னையைக் கண்டுபிடித்து அதற்குச் சரியான சிகிச்சையெடுக்கத்தான் என்பதைப் புரிந்துகொண்டு, மாணவர்களுக்கு ஆதரவளிக்கத்தான்.

மதிப்பெண் பட்டியலில் மட்டுமே அவர்களது திறைமையைத் தேடிக்கொண்டிருக்காமல், அவர்களது பலம் எது, விருப்பமான துறை எது என்பதைத் தெரிந்து அந்தத் துறையில் அவர்களை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகளை அமைத்துக் கொடுங்கள்.

கற்றல் குறைபாடு குடும்பத்தின் மீது எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால், உடன்பிறந்தவர்களுடன் போட்டிபோடும் நிலை உருவாகும். கல்வியில் நன்றாக முன்னேறும் உடன்பிறந்தவர்களுடன் எதிர்மறையாக இந்தக் குழந்தைகள் நடந்துகொள்ளும். எனவே, அக்குழந்தைகளை அவர்களது சகோதரருடனோ சகோதரியுடனோ ஒப்பிடாதீர்கள்.

கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள் பெரும்பாலும் படைப்பாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். அதை செயல்வடிவம் கொடுக்க பல வழிகள் உள்ளன. உதாரணத்திற்கு, இசை, நடிப்பு, வடிவமைப்பு, தொழில்நுட்பம், கலை அல்லது விளையாட்டு ஆகிய நல்ல விஷயங்களைக் கவனத்தில்கொண்டு சிறிய சாதனைகளைப் பாராட்டுவது அவர்களின் சுயமரியாதையைப் பராமரிக்கப் பெரிதும் உதவும்.

உலக அளவில் பெரும் சாதனைகளை நிகழ்த்திய லியோனார்டோ டாவின்சி மற்றும் ஓவியர்கள் பாப்லோபிக்காசோ, அறிவியலாளர்கள் அலெக்சாண்டர் கிரகாம்பெல், ஆல்பர்ட்ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன், குத்துச்சண்டை வீரர் முகமதுஅலி, ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன்ஸ்பீல்பெர்க், எழுத்தாளர் அகதா கிரிஸ்டி, ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனர் ஹென்றி ஃபோர்டு, ஹாலிவுட்  நடிகர் டாம் க்ரூஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் குழந்தைப் பருவத்தில் டிஸ்லக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்கள்தான் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்’’ என சாதனை படைத்தவர்களின் உதாரணங்களோடு தன்னம்பிக்கையை விதைக்கிறார் ஷோபா.    

- தோ.திருத்துவராஜ்

X