நீட் தேர்வுக்கு தயாராகுங்க!

4/27/2018 2:43:32 PM

நீட் தேர்வுக்கு தயாராகுங்க!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நுழைவுத் தேர்வு டிப்ஸ்

நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், அவற்றின் கல்லூரிகள் ஆகியவற்றில் உள்ள பொது மருத்துவம் (MBBS), பல்மருத்துவம் (BDS), சித்த மருத்துவம் (BSMS-Bachelor of Siddha Medicine and Surgery), ஆயுர்வேத மருத்துவம் (BAMS - Bachelor of Ayurvedic Medicine and Surgery), ஹோமியோபதி மருத்துவம் (BHMS - Bachelor of Homeopathy Medicine and Surgery), யுனானி மருத்துவம் (BUNS - Bachelor of Unani Medicine and Surgery), இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் (BNYS - Bachelor of Naturopathy and Yogic Sciences), இவற்றுடன் கால்நடை மருத்துவம் (BVSc - Bachelor of Veterinary Science) ஆகியவற்றிற்கான அரசு மற்றும் தனியார் ஒதுக்கீட்டு இடங்களுக்குத் தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்யும் அகில இந்திய நுழைவு மற்றும் தகுதித் தேர்வான (National Eligibility Entrance Test - NEET) 6.5.2018 அன்று ஆஃப் லைன் (Offline) முறையில் நடைபெற உள்ளது.

தேர்வின் அமைப்பு மூன்று மணி நேரம் நடைபெறும் 180 சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையிலான இத்தேர்வில் இயற்பியலில் 45 வினாக்களும், வேதியியலில் 45 வினாக்களும், தாவரவியலில் 45 வினாக்களும், உயிரியலில் 45 வினாக்களும் என மொத்தம் 180 வினாக்கள் இருக்கும்.

ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண்கள் என்று மொத்த மதிப்பெண்கள் 720 ஆகும். ஒவ்வொரு தவறான விடைக்கும் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். விடைகளை மாணவர்கள் நீலம் அல்லது கறுப்பு பால் பாயின்ட் பேனா கொண்டு விடைத்தாளில் குறிக்க வேண்டும்.

மத்திய கல்வி வாரியம், மாநிலக் கல்வி வாரியம் என்று அனைத்து வாரியங்களில் பாடத்திட்டங்களை உள்ளடக்கிய பாடத்திட்டமே நீட் தேர்விற்கு தரப்பட்டுள்ளது.எப்படி படிக்க வேண்டும்?நீட் என்பது அச்சம் தரக்கூடிய கடினமான ஒரு தேர்வு அல்ல என்பதையும், மொழி இத்தேர்விற்கு ஒரு தடை அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.நீட் ஒரு நுழைவுத் தகுதித் தேர்வு.

ஆகவே, எந்திர ரீதியாக வினா விடைகளை மனப்பாடம் செய்து, பழைய வினாத்தாள்களின் மூலம் தேர்வு செய்து, படித்து தேற வேண்டிய, பொதுவான தேர்வு இது அல்ல என்பதை உணர வேண்டும். அண்மையில், பாடங்களைப் புரிந்து படிக்காமல், வெறும் புளூ பிரின்ட் அடிப்படையில் முக்கிய வினாக்களை மட்டும் படித்தால் போதும் என்ற முறை இத்தேர்விற்குப் பொருந்தாது.

பொதுவாக நுழைவுத் தேர்வு என்பதை படிக்கின்ற பாடங்களை மாணவர்கள் நன்கு உள்வாங்கி, புரிந்து படித்திருக்கிறார்களா என்பதை சோதிப்பதாகும். எனவே, பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள பாடங்களை முற்றிலும் புரிந்து படிக்க வேண்டும். பாடங்களை நன்கு விரும்பி, புரிந்து படிக்கும்போது, கேட்கப்படுகின்ற வினாக்களுக்கு சரியான விடை எது என்று தெரியும். இதை விட இன்றியமையாதது, இவ்வாறு சிந்தித்து, புரிந்து படிக்கும்போது, தவறான விடையைத் தவிர்க்கும் யுக்தியையும் தெரிந்துகொள்வது அவசியம்.

இயற்பியல், வேதியியல் என்ற இரண்டு பாடங்களிலும், ஒவ்வொரு தலைப்பிலும் உள்ளே என்னென்ன உட்பிரிவுகள் உள்ளன என்பதைக் கண்டறிந்து அனைத்தையும் ஆழமாகப் படிக்க வேண்டும்.

*தேர்வு என்ற எண்ணத்தைப் புறந்தள்ளி, இந்தப் பாடத்தில் உள்ள கோட்பாடுகள் அத்தனையும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற முனைப்பில் கற்கின்றபோது, தேர்வு என்பது தானாகவே எளிதாகி விடும்.
*ஒவ்வொரு பாடத்திலும் உள்ள ‘ரீசனிங்’ (Reasoning) என்ற காரண காரியம் அறியவேண்டிய தலைப்புகளை முறையாகப் பயில வேண்டும்.
*‘உயர்நிலை சிந்தனை’ (High Order thinking) என்ற அளவில் பாடங்களை சிந்திக்க வேண்டும்.
ஒவ்வொரு பாடத்திலும் கீழே வரும், கணக்குகள் தீர்க்கப்பட வேண்டும். இதற்கு உழைப்பும், பயிற்சியும் மிக மிக முக்கியம்.
பாடங்களை திட்டமிட்டு படிக்க வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி பாடங்களைப் பிரித்து படியுங்கள்.

1.பொதுக்கோட்பாடுகள் (General Concepts)
2.வரையறைகள் (Definitions)
3.சூத்திரங்கள், தொடர்புகள், அதன் வருவிகள் (Formula, Relations, Defenitions)
4.தொடர்பான கோட்பாடுகள் (Related Concepts)
5.காரண காரியங்கள் (Reasoning)
6.திறனாய்வு (Analysis)
7.கணக்கீடுகள் (Problems)

என்று பிரித்து படித்தால் நன்றாக தெள்ளத்தெளிவாக மனதில் பதியும்.

எதில் கவனம் தேவை?

முழுமையாகப் பாடங்களைப் படித்து, தேவையானவற்றை தயார் செய்தல் அவசியம். தவறான விடைக்கு மதிப்பெண் குறைக்கப்படும். எனவே, சரியான விடைதானே என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.படிக்கின்றபோது, சிந்தனைச் சிதறல் இல்லாமல், பாடங்களை நன்கு உள்வாங்கி சிந்தித்துப் படிக்க வேண்டும்.

நீட் நுழைவுத் தேர்விற்கு பாடத்திட்டமாக தரப்பட்டுள்ள இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல், விலங்கியல்) பாடப்பிரிவுகளை முழுவதுமாக படிக்க வேண்டியதும், கோட்பாடுகள், ரீசனிங் தொடர்பாக கருத்துகள், திறனறி வினாக்கள் இவற்றை உள்வாங்கி தயாராவது அவசியம்.இங்கு கூறப்பட்டிருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி தேர்வை எதிர்கொள்ளும்பட்சத்தில் நீட் தேர்வு உங்களுக்கு சுமையானதாக இருக்காது. தேர்வில் வெற்றிபெற வாழ்த்துகள்!

மாடல்: கேத்தி

படம்: ஏ.டி.தமிழ்வாணன்

முனைவர் ஆர்.ராஜராஜன்

X