வணிகவியல் பட்டப்படிப்பிற்கு அதிக வரவேற்பு ஏன்?

6/25/2018 2:42:18 PM

வணிகவியல் பட்டப்படிப்பிற்கு அதிக வரவேற்பு ஏன்?

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி,கல்வியாளர் - வருமானவரி அதிகாரி

பொறியியல் பட்டப்படிப்புகள், மருத்துவப் படிப்பு என ஓடிக்கொண்டிருந்த மாணவ மாணவிகள்  கடந்த சில ஆண்டுகளாகவே அதிகளவு கலைக் கல்லூரிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்து போட்டித்தேர்வு எழுதி அரசு வேலைக்குச் சென்றுவிடலாம், அப்படியே அரசு வேலைக்கு போக முடியாவிட்டாலும் தனியார் கம்பெனிகளில் ஏதாவது வேலைக்குச் சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் பெரும்பாலான மாணவர்கள் பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி. போன்ற படிப்புகளைத் தேர்வு செய்கிறார்கள்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களிடையே பி.ஏ. ஆங்கிலம், பி.காம் (பொது) பட்டப்படிப்பிற்கு அதிக மவுசு கூடியுள்ளது. அதிலும் குறிப்பாக பிளஸ் 2 தேர்வில் 1000 மதிப்பெண்ணுக்குமேல் எடுத்த மாணவ-மாணவிகள்கூட கலைக்கல்லூரிகளில் பி.காம். படிக்கவே விரும்புகிறார்கள்.

‘பி.காம். பட்டப்படிப்பில் அப்படி என்னதான் இருக்கிறது?‘ என்றுதானே கேட்கிறீர்கள். என்ன படிச்சா ‘ஈசியா வேலை கிடைக்கும்...?’  என்பதுதான் கல்லூரிக்குள் நுழைய இருக்கும், ஒவ்வொரு மாணவருக்கும், அவரின் பெற்றோருக்கும் எழுகிற நியாயமான கேள்வியாய் உள்ளது.

‘படிப்புன்னாலே... வேலை, சம்பளம்... இதுதானா...? அறிவு வளர்ச்சிக்குத்தான் படிப்பு’ என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். இவர்களை, வாழ்க்கையின் யதார்த்தம் புரியாமல் பேசுகிறவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், அறிவை வளர்க்கவே கல்வி என்ற காலம் கடந்து விட்டது. அறிவோடு சேர்ந்து வேலைவாய்ப்பையும் பெறுவதற்கே கல்வி என்ற காலம் இது.

எதிர்காலத்தை நிர்ணயிக்கும் காரணியாகிவிட்டது கல்வி. 15 ஆண்டுகள் படிப்பை நிறைவு செய்துவிட்டு, சுமார் 20 வயதில், வாலிபத்தின் தலைவாசலில் நிற்போர், ‘சொந்தக் காலில்’ நின்றால்தானே அழகு....? அதாவது, பட்டம் முடித்தவுடனே, வேலைக்குப் போய்விட வேண்டும். இதற்கு மிகவும் ‘தோதான’ படிப்பு  சந்தேகத்துக்கு இடமில்லாமல்  ‘பி.காம்.’ மட்டுமே.

உயர் கல்வியைப் பொதுவாக இரண்டாகப் பிரிக்கலாம்.  தொழிற்படிப்பு (Professional Course), தொழில்சாராப் படிப்பு (Non- Professional course). முதலாவது, படிப்புக்குப் பிறகான வேலைக்கு, ‘இப்போதே’ தயார் செய்கிறது. இரண்டாவதாக உள்ள, பொதுப்படிப்பு, முழுக்கவும் பாடப் புத்தகங்கள் சார்ந்தே இருக்கும்.  இன்னமும் தெளிவாக  சொல்வதென்றால், முன்னது ‘செய்’முறை; பின்னது வெறுமனே ‘வாய்’முறை. இந்த இரண்டு பிரிவுகளுக்கும் பொதுவான ஒரு படிப்புதான் பி.காம். ‘பி.காம்’ பட்டம் மட்டும், தொழிற்படிப்புக்கான தகுதிகளைக் கொண்ட, பொதுப்படிப்பாக இருக்கிறது. இது ஒரு ‘அகாடமிக் கோர்ஸ்’. ஆனால், ஒரு ‘ப்ரொஃபஷனல் கோர்ஸ்’க்கான தன்மை இப்படிப்பில் அடங்கி உள்ளது.

வணிகப் படிப்பாகிய ‘பி.காம்.’ முக்கியமாக, ‘கணக்கியல்’ (அக்கவுன்ட்ஸ்) பகுதியில், மாணவர்களைப் படிக்கிறபோதே வேலைக்கு முழுவதுமாகத் தயார் செய்துவிடுகிறது. ஆகவேதான், எந்த ஒரு நிறுவனத்திலும், ‘அக்கவுன்ட்ஸ்’ பிரிவில், தொடக்க நிலைப் பதவிக்கு, ‘பணி அனுபவம்’ கேட்பது இல்லை. பி.காம். முடித்த வணிகவியல் பட்டதாரி, பணியில் சேர்ந்த முதல் நாளே, நேரடியாகத் தனது அலுவலக வேலையைத் தொடங்கிவிடலாம்.

‘பி.காம்.’ பட்டப்படிப்பில், பிரதான பாடங்கள் (Core Subjects) என்று சில உண்டு. ‘அக்கவுன்ட்ஸ்’, பொருளாதாரம், கணக்குத் தணிக்கை (ஆடிட்டிங்), நிர்வாக மேலாண்மையியல் (மேனேஜ்மென்ட்) ஆகிய பாடப் பிரிவுகள், எல்லாக் கல்லூரிகளிலும் பொதுவாக இருக்கும். இத்துடன் சில, துணைப் பாடங்கள் இருக்கும். இதுதான் வேறுபட்டு இருக்கும். ‘சி.எஸ்.’ எனப்படும் ‘கம்பெனி செக்ரடரிஷிப்’, புள்ளியியல் (ஸ்டேடிஸ்டிக்ஸ்) வணிகக் கணிதம் (பிசினஸ் மேத்ஸ்), காஸ்ட் அக்கவுன்ட்ஸ் என்று பல்வேறு துணைப் பாடங்கள் கிடைக்கின்றன.

மாணவர்கள் மற்றும் பெற்றோர் தேர்வு செய்யும் விதத்தை வைத்துப்பார்க்கும்போது, ‘பி.காம்.’ துணைப் பாடங்களில் ‘கம்பெனி செக்ரடரிஷிப்’, தற்போது முதல் இடத்தில் உள்ளது. இதற்குக் காரணம், இப்பாடம் ஒரு நிறுவனத்தின் முக்கிய அங்கமாகிய செயலாளர் பணிக்கு வேண்டிய சில ‘தகவல்கள்’ தருகிற பாடமாக இருப்பதுதான்.

நன்றாக நினைவில்கொள்ள வேண்டும். ‘செக்ரடரி’ பணிக்கான பயிற்சியை, ‘பி.காம்.’ தருவதில்லை. ஓரிரு பாடங்கள், ‘தியரி’ வடிவில் இருக்கும். தகவல் பரிமாற்றத் திறன்கள் (கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ்) அறிக்கை தயாரித்தல் (ரிப்போர்ட்டிங்) ஆகிய பகுதிகளில் வகுப்புகள், சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கலாம்; மொழிப் புலமை மேம்பட உதவலாம். அவ்வளவுதான். அதற்குமேல் எதுவும் இல்லை.

இதேபோல, ‘காஸ்ட் அக்கவுன்ட்ஸ்’  சிறந்த துணைப் பாடம். உண்மையில் இதுதான் முதல் இடத்தில் இருக்க வேண்டும். கடிதம் எழுதுதல், அறிக்கை தயாரித்தல் ஆகியனவற்றில் நாமாகவே சொந்தமாக, திறனை வளர்த்துக் கொள்ள முடியும். ஆனால், ‘காஸ்ட் அக்கவுன்ட்ஸ்’  முற்றிலும் புதிய, சிறப்புப் பிரிவு.

வகுப்புக்குச் சென்று, கேட்டு, படித்துப் புரிந்துகொள்ள வேண்டிய கடினமான பகுதி. ‘காஸ்ட் அக்கவுன்ட்ஸ்’ படித்திருந்தால், உற்பத்தி நிறுவனங்களில் (Manufacturing units) வேலைக்குச் செல்கிற போது, முன்னுரிமை கிடைக்க வாய்ப்புகள் அதிகம். அதுமட்டுமல்ல; ‘காஸ்ட் அக்கவுன்ட்ஸ்’ பிரிவில், தற்போது ‘சி.எம்.ஏ.’ என்று அழைக்கப்படும் ‘ஐ.சி.டபிள்யூ.’ படிப்பதற்குப் பெரிதும் பயன்படும். சி.ஏ-வுக்கு இணையான இந்தப் படிப்புக்கு, உலகம் முழுவதும் நல்ல மதிப்பும் தேவையும் இருக்கிறது.

‘பிசினஸ் மேத்ஸ்’ எனப்படும், ‘வர்த்தகக் கணிதம்’ மற்றொரு சிறப்புப் பாடம். ‘பிளஸ் 2’ நிலையில் கணிதம் படித்தவர்களுக்கு, எளிமையாக இருக்கும். ஒருவேளை, கணிதம் சார்ந்த ‘குரூப்’ படிக்கவில்லை என்றாலும், அச்சப்படத் தேவை இல்லை. வகுப்புகளைச் சரியாக கவனித்து வந்தாலே போதும். எளிதில் புரிந்துகொண்டு, நல்ல மதிப்பெண்கள் பெற முடியும்.

‘புள்ளியியல்’ எனும் ‘ஸ்டேடிஸ்டிக்ஸ்’ மிகவும் எளிமையான பாடங்களைக் கொண்டது. மதிப்பெண்களை அள்ளி வழங்குகிற பாடப் பிரிவு இது. பணிச் சந்தையில் இதற்கான அங்கீகாரம் தரப்படுவதில்லை என்பதுதான் வருத்தமான செய்தி.

‘பி.காம்.’ படிக்க நினைக்கிற பெரும்பாலான மாணவர்கள், ‘எந்தத் துணைப் பாடத்தை எடுத்தால் நல்லது..?’ என்கிற கேள்வியைப் பரவலாக முன்வைக்கின்றனர். இந்தக் கேள்வியில் ஆர்வம் இருக்கிற அளவுக்கு, அர்த்தம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், ‘பி.காம்.’ படிப்பில் சுமார் 15 தாள்கள் (பேப்பர்ஸ்) உள்ளன. இவற்றில் இரண்டு தாள்கள் மட்டுமே, துணைப் பாடங்களுக்கு ஆனது. மற்ற அனைத்தும், ‘பி.காம்.’ படிக்கிற அனைவருக்கும் பொதுவானது.

பலருக்கும் இருக்கிற மற்றொரு ஐயம்  ‘இந்தத் துணைப் பாடம் எடுத்தால், கூடுதல் வேலைவாய்ப்பு இருக்குமா...?’ நிச்சயமாக அப்படி எதுவும் இல்லை. இது ஒரு மாயை. பணிச் சந்தையில் ‘பி.காம்.’ படிப்புக்கு இருக்கிற செல்வாக்கு, அதன் பிரதான பாடங்களான, ‘அக்கவுன்ட்ஸ்’, ‘ஆடிட்டிங்’ மற்றும் ‘மேனேஜ்மென்ட்’ மூலம் வருவது.

துணைப் பாடம் எதுவாக இருந்தாலும், பரவாயில்லை. இதேபோல, ‘பி.காம்.’ படிக்கும்போதும், பிரதானப் பாடங்களுக்குத்தான் முக்கியத்துவம் தந்து படிக்க வேண்டும்.இவற்றில் பெறுகிற மதிப்பெண்கள்தான் மிக முக்கியம். இவை பொதுவாக இரண்டாம், மூன்றாம் ஆண்டில்தான் இடம் பிடிக்கும்.

ஆகவே, துணைப் பாடம் குறித்த கவலை வேண்டவே வேண்டாம்.  ‘பி.காம்.’ கிடைத்தால், உடனே சேருங்கள். பிரதான பாடங்களை ஆழ்ந்து படியுங்கள். பணிச் சந்தையில் உங்களுக்கான இடம் காத்துக்கிடக்கிறது. இந்தச் சிறப்பு, வேறு எந்தப் படிப்புக்கும் இல்லை. ‘பி.காம்’ பட்டத்துக்கு மட்டும் ஏன் ஆலாய்ப் பறக்கிறார்கள் என்று, இப்போது புரிகிறதா...? வணிகவியல் படியுங்கள். வாழ்க்கையில் உயருங்கள்.

வாழ்த்துகள்

X