எஞ்சினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங்... சில ஆலோசனைகள்!

7/4/2018 2:08:58 PM

எஞ்சினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங்... சில ஆலோசனைகள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

வழிகாட்டல்

பள்ளிக் கல்வியில் பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ள பாடக்குழு அல்லது இதற்கான வொக்கேஷனல் பாடங்களை எடுத்து அடிப்படை தேர்ச்சி தகுதியைப் பெற்ற மாணவர்களுக்கு, இன்றளவும் நல்ல வாய்ப்புகளை அளித்து வரும் படிப்பு ‘பொறியியல்’ படிப்புகள்தான். எஞ்சினியரிங் மீதான ஈர்ப்பு முற்றிலுமாக மறக்கடிக்கப்படவில்லை என்பது மறுப்பதற்கில்லை.

இம்முறை அண்ணா பல்கலைக்கழகத்தால் அறிவிக்கப்பட்ட விதிமுறைகளின்படி, மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனிலும், இவ்வசதி இல்லாதவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் அமைத்த 42 உதவி மையங்களின் வழியாக பழைய முறையிலும் பொறியியல் விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளனர்.

எஞ்சினியரிங் துறையைத் தேர்வுசெய்து, கலந்தாய்வுக்காக காத்திருப்பவர்கள், தங்கள் சான்றிதழ்களை சரிபார்த்து அடுத்த கட்டத்திற்கு தம்மை தயார் படுத்திக்கொள்ளும் நேரம் இது. ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகத்தில் இணையதளம் வழியே விண்ணப்பம் சமர்ப்பித்து இருப்பீர்கள். இப்போது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டுவருகின்றன.

தற்போது இதன் அடுத்த நிலையாக, மாணவர்கள் ஒரு பொறியியல் பாடத்தையும் தங்களுக்கேற்ற கல்லூரியையும் தேர்வு செய்யவேண்டிய தருணமாகும். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நேரடியாக மாணவர்களும், பெற்றோர்களும் வருகை தந்து, கலந்தாய்வில் கலந்துகொள்கின்ற முறை மாற்றப்பட்டு தற்போது ‘ஆன்லைன்’ கவுன்சலிங் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆன்லைன் கலந்தாய்வு முறையை எவ்வாறு செய்ய வேண்டும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் சரிவர அறிந்துகொண்டால், இந்த முறை எளிதானதாக இருக்கும். மிகக் குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு இம்முறையில் சரியான தெளிவு வேண்டும்.இன்றளவில், மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக ஒரிஜினல் ஆவணங்களை சரிபார்த்து முடித்த நிலையில் உள்ளனர்.

கவுன்சிலிங் தி்னத்தன்று, கல்லூரிகளி்ன் பெயர்கள், முகவரி, தொடர்பு விவரங்கள், அங்குள்ள பாடங்கள், உறைவிட வசதிகள், உணவு வசதிகள் அங்கீகாரம் தொடர்பான விவரங்கள்  NAAL(.........................), NBA (..........................) போன்ற விவரங்கள் உள்ள விவர பட்டியல் நூல் வடிவில் தரப்பட்டிருக்கும்.

இவற்றைப் படித்து, கல்லூரிகளின் விவரங்களை முழுமையாகத் தெரிந்துகொள்ள இயலும். அன்றே, ஆன்லைன் கவுன்சலிங் பற்றிய ஒளி-ஒலி காட்சி திரையிடப்பட்டிருக்கும். இதைத் தவறவிட்டவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளங்களான www.annaunic.ed/www.tnea.ac.in ஆகியவற்றிலோ யு-டியூபிலோ பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

மிக முக்கியமாக எஞ்சினியரிங் பாடங்களான மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ், சிவில், இன்னும் கம்ப்யூட்டர், இன்ஸ்ட்ரூமென்டேஷன் போன்ற பாடங்களை எடுக்கப் போகிறோமா அல்லது பிரத்தியேக சிறப்புப் பிரிவுகளான மெரைன், மைனிங், ஜியோ-இன்ஃபர்மேட்டிக்ஸ், பயோடெக்னாலஜி, பிரின்டிங் டெக்ஸ்டைல், மெட்டீரியல் சயின்ஸ் இவற்றையோ அல்லது பயோமெடிக்கல் எஞ்சினியரிங் பிரிவையோ எடுக்கிறோமா அப்படியென்றால் அவை எந்தக் கல்லூரிகளில் உள்ளன என்பதையெல்லாம் தெளிவாக அறிதல் நலம்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் போர்ட்டலில் வெளியாகும் தரவரிசை பட்டியல்படி  இதைப்பார்த்து, தங்கள் கட்-ஆஃப் மதிப்பெண்படி, கடந்த ஆண்டின் கட் ஆஃப் நிலையை உற்று நோக்கி, தாங்கள் உத்தேசமாக எந்தக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்பதை ஓரளவிற்கு முடிவு செய்துகொள்ளலாம்.

தரவரிசை பட்டியல் வெளியான தினத்திலிருந்து ஒரு வாரத்தில் மாணவர்கள் தாங்கள் சமர்ப்பித்து, சரிபார்த்த ஆவணங்களில் ஏதேனும் விடுபட்டிருந்தாலோ, குறைகள் இருந்தாலோ அதை சரிசெய்துகொள்ள வாய்ப்பு உண்டு.தரவரிசை அடிப்படையில் மாணவர் சேர்க்கை 5 சுற்றுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. எந்த சுற்று தங்களுடையது என்பதை இணையத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

இதில் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். விளையாட்டுப் பிரிவு, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், வொக்கேஷனல் பிரிவினர் இவர்களுக்கு, கடந்த ஆண்டைப்போல, நேரடியான கவுன்சலிங்தான் நடைபெறும். ஒருவேளை, சிறப்புப் பிரிவு இடங்கள் நிரம்பிவிட்டால் இந்த இடங்கள் பொதுப் பிரிவிற்கு மாற்றுதல் செய்யப்பட்டு, ஆன்லைன் கவுன்சலிங் நடைபெறும்.

இந்நேரத்தில், மாணவர்கள் தங்களை தயார் செய்தல் வேண்டும். அதாவது, அவர்கள் பெற்றோர்களுடனும், கல்வியாளர்களுடன், நலம் நாடும் நபர்களுடன் அமர்ந்து, தாங்கள் விரும்புகின்ற கல்லூரிகள் பாடங்கள் இவற்றை தெளிவாக தங்கள் கட் ஆஃப் படி குறித்து வைத்து திட்டமிட்டுக் கொண்டால், ஆன்லைன் கவுன்சலிங் எளிதாகும்.

ஆன்லைன் கவின்சலிங்கிற்கு, ஐந்து நாட்களுக்கு நேரம் உண்டு. இக்காலத்திற்குள், மாணவர்கள் எத்தனை கல்லூரிகளை வேண்டுமானாலும், எத்தனை பாடங்கள் வேண்டுமானாலும் தங்கள் கட் ஆஃப் படி தேர்வு செய்யலாம்.

இவை முடிந்தவுடன், ஐந்து நாட்களுக்குள், ஆரம்பத்தில் கட்ட வேண்டிய கட்டணம் பொதுப் பிரிவினர் என்றால் ரூ.5000, தாழ்த்தப்பட்ட பழங்குடி, ஆதிதிராவிட, பழங்குடியினர் ரூ.1000, நெட்பேங்கிங்கில் டெபிட் /கிரெடிட் கார்டு வழியாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் கல்லூரியில் கல்விக் கட்டணம் செலுத்தும்போது, அதில் குறைத்துக்கொள்ளப்படும்.

இணையம் வழியாக பணம் கட்ட வசதியில்லாத நிலையில், இத்தொகைக்கான டிமாண்ட் டிராஃப்ட் எடுத்து, உதவி மையங்களில் நேரடியாக செலுத்த வேண்டும். அடுத்தது இந்த வேலைகள் முற்றிலும் முடிந்தபின்தான், அதாவது 5 நாட்களுக்கு பின்புதான் ஒவ்வொருவருக்கான ஆன்லைன் விண்டோ திறக்கப்படும்.

பதிவு எண், பாஸ்போர்ட் இவற்றை கொடுத்து கல்லூரி, பாடங்கள் இவற்றை வரிசையாக கொடுத்துவிட வேண்டும். இதில் முக்கிய செய்தி என்னவென்றால், இதற்கும் மூன்று நாட்கள் உண்டு. இந்த மூன்று நாட்களில் எத்தனை முறை வேண்டுமானாலும் தரவரிசையை மாற்றலாம்.

மாணவர்கள், தங்கள் User ID, E-Mail ID, Passward, DTP இவற்றை மிக மிக ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏதேனும் இதில் தவறு செய்து தங்கள் வாய்ப்பை நழுவ விட்டுவிடக் கூடாது. மூன்றாம் நாள் பிற்பகல் 5 மணி அளவில் ஆன்லைன் விண்டோ  மூடப்பட்டுவிடும்.

இதன்பின், நான்காம் நாள் மாணவர்கள், தங்கள் வாய்ப்புகளை தற்காலிக ஆணை வழியாக அறியலாம். இதற்குப்பின், இன்னும் இரண்டு நாட்கள் நேரம் உண்டு. இந்த இரண்டு நாட்களுக்குள் ஏதேனும் விரும்புவதை மாற்ற விரும்பினால் மாற்றி, தாங்கள் விரும்பிய கல்லூரியையும், பாடத்தையும் லாக் செய்துவிட வேண்டும்.

இதன் முடிவு இனி அவரவர் SMS-ல் பிடிஎஃப் (PDF) வடிவில் அண்ணா பல்கலைக்கழகம் அனுப்பும். எனவே, தற்காலிக ஒதுக்கீடு இப்பொழுது முடிந்தாயிற்று. இனி என்ன செய்ய வேண்டும்? இதனை பிரின்ட் எடுத்து, தேவையான நகல்களை கையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஏழு நாட்களுக்குள், கல்லூரிக்குச் சென்று மாணவர்கள் சேர்ந்து விடலாம். இவ்வாறாக, 5 சுற்றுகள் முடிய 25 நாட்கள் ஆகும்.  இதன் பின்னால் இடங்கள் நிரம்பாமல் இருந்தால், இரண்டாம் கட்ட கவுன்சலிங் உண்டு. ஆனால், இது பழைய முறையில் நேரடியாக நடைபெறும்.புரிந்ததா மாணவர்களே! பெற்றோர்களே!

- வாழ்த்துகள்!

X