இளைஞர்களை ஈர்க்கும் மென்பொருள் துறை!

7/23/2018 2:38:46 PM

இளைஞர்களை ஈர்க்கும் மென்பொருள் துறை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

வழிகாட்டல்

படிப்புக்கேற்ற வேலையா?  வேலைக்கேற்ற  படிப்பா?

நம் சமூகத்தில் உள்ள பெரிய பிரச்னை என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட துறை பாடப்பிரிவுக்கு வேலைவாய்ப்பு கிடைத்ததென்றால் ஒட்டுமொத்தமாக அனைவரும் அதே துறைக்கு சென்றுவிடுவார்கள். கொஞ்சம் சிந்தித்து வெவ்வேறு பாடப் பிரிவுகளின் தேவை எதிர்கால நிலவரங்களையும் அறிந்து தேர்வு செய்ய வேண்டும். அந்த வகையில் எந்தவொரு நாகரிக சமுதாயத்திலும் ஆசிரியர் பணிக்கான தேவை நிரந்தரமாக இருந்துகொண்டேதானே இருக்கும். அதிலும் இந்தியா போன்ற மக்கள்தொகை மிகுந்த, எழுத்தறிவில் பொருளாதாரத்தில் வளர்ந்து வருகிற தேசத்தில் ஆசிரியர் பணியிடங்கள் பெருகுமா? குறையுமா?

எங்கேயோ… பல மைல் தூரம் சென்று படிக்கிற நாட்கள் எல்லாம் பெரும்பாலும் மலையேறிப் போய்விட்டன.இப்போதெல்லாம் அந்தந்த ஊரிலேயே  தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை வந்துவிட்டன. தனியார் ‘நர்சரி’ ‘மெட்ரிகுலேஷன்’ பள்ளிகளுக்கும் பஞ்சமில்லை. ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிகள் எப்படி நடைபெறும்…? 1 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள ஒரு பள்ளிக்கு 50 ஆசிரியர்களாவது குறைந்தபட்சம் தேவைப்படுவார்கள். இந்தப் பள்ளிகளில் ஆண்டுதோறும் ஓரிரு புதிய ஆசிரியர்களாவது வந்துகொண்டுதானே இருக்கிறார்கள்..?

கல்லூரிகளும் இப்படித்தான். பெருகிக்கொண்டே இருக்கின்றன. இது போகவும் பயிற்சி நிலையங்கள் வேறு. இன்றைய உலகில் கல்வியின் மூலம் மட்டுமே வாழ்க்கையில் உயரமுடியும் என்பதை எல்லாருமே நன்கு புரிந்து வைத்து இருக்கிறார்கள். இந்த நிலையில் விரிவடைந்து வருகிற துறைகளில் முதலிடத்தில் உள்ளது கல்வித் துறை. இது முழுக்க முழுக்க பொதுக் கல்வி படித்தவர்களை மட்டுமே வேலைக்குத் தேர்ந்தெடுக்கிறது. யார் என்ன சொன்னாலும் நமது சமுதாயம் ஆசிரியர் பணியை உயர்வாகத்தான் பார்க்கிறது. முன்பு போல் இல்லை; சம்பளமும் ‘கை நிறைய’ கிடைக்கிறது.

திறமையானவர்கள் வீட்டில் இருந்தபடி ‘டியூஷன்’ எடுத்துக் கூடச் சம்பாதிக்கலாம். அதிலும் ‘தமிழ் ஆசிரியர்’ ஒரு தனி வகை. மேடையில் பேசுகிற திறன் மட்டும் பெற்று இருந்தால், தொடர்ந்து இலக்கிய சமய நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வந்த வண்ணம் இருக்கும்.‘தமிழால் வாழ்கிறேன்’ என்று பெருமையாய் சொல்லலாம். சிறந்த தமிழ்ப்புலமை கொண்டவர்களுக்கு அயல்நாடுகளில் இருந்துகூட வாய்ப்புகள் வருகின்றன.மொழி அறிவு, மொழிப் புலமை, மொழி ஆராய்ச்சி.... வருவாய் ஈட்டக்கூடிய நல்ல துறைகளில் ஒன்று. சற்றும் தாமதிக்காமல்,மனம் வருந்தாமல் மகிழ்ச்சியாக தமிழ் எடுத்துப் படிக்கலாம்.

தமிழ் தராத உயர்வை எது தந்துவிடும்…? என்றும் வற்றாத ஜீவநதியாக, எந்நாளும் வேலைவாய்ப்புகளை அள்ளி வழங்குகிற படிப்பாக இருப்பதால்தான் ‘பி.ஏ.’ படிப்பு இந்தியக் கல்வி முறையில் ஒரு ‘எவர்க்ரீன்’ படிப்பாக இருந்துவருகிறது. இப்போதைக்கு அவசரமாக நாம் எதிர்கொள்ள வேண்டிய கேள்வி என்னவென்றால் ‘இன்னைக்கு உள்ள நிலவரத்துக்கு என்ன படிச்சா உடனடியா வேலை கிடைக்கும்..?’ என்பதுதான். எல்லா இளைஞர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் நியாயமாகத் தோன்றுகிற கேள்விதான் இது. இந்தியா விரைவில் வல்லரசாகிவிடும்’, ‘உலகில் மிக வளர்ந்த நாடாக இந்தியா முதலிடத்தில் இருக்கும்’,‘எதிர்காலத்தில், இந்தியா சொல்கிறபடிதான் உலக நாடுகள் நடந்துகொள்ளும்’

இப்படி பல ஆரூடங்கள் வெகு நாட்களாக சொல்லப்படுகின்றன. உண்மையும் பொய்யும் கலந்த இந்தக் கணக்குகளைத் தாண்டி சில கேள்விகள் நம்மைத் தொடர்ந்து மிரட்டிக்கொண்டு வருகின்றன.அவற்றில் தலையாயது ‘வேலையில்லாத் திண்டாட்டம் எப்போது தீரும்..?’ கடந்த பல ஆண்டுகளாக இந்திய இளைஞர்களுக்கு உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் வேலை வாய்ப்புகள் பெருகித்தான் வருகின்றன. சந்தேகம் இல்லை. ஆனால், வேலைக்கான தேவைகள் பெருகுவதற்கு ஏற்ப வேலை வாய்ப்புகளும் பெருகி இருக்கின்றனவா..?

அநேகமாக இல்லை என்பதுதான் உண்மை. தேவை… வாய்ப்பு… இரண்டுக்குமான இடைவெளி எல்லா நாடுகளிலும் எல்லாத் துறைகளிலும் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. இது தீர்க்க முடியாததாகவே இருக்கிறது. மிக வளர்ந்த நாடுகளில்கூட வேலை வாய்ப்பின்மை பெரிய பிரச்னையாகத்தான் இருந்து வருகிறது.‘நமது நாட்டு வளங்களை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை; அதற்கான திட்டங்கள் தீட்டப்படுவதில்லை; செயல்படுத்தப்படுவதில்லை‘ என்ற புகார்கள் உலகமெங்கும் எழுந்துகொண்டுதான் இருக்கின்றன.

திறமையின்மை காரணமாகத்தான் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி வருவதாக நாம் கருதிக்கொண்டு இருக்கிறோம். இல்லை. இது முற்றிலும் தவறான கருத்து.ஒவ்வொருவரிடத்திலும் ஒருவித திறமை இருக்கத்தான் செய்யும். அதற்குரிய வாய்ப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் எத்தனை லட்சம் பேர் படிப்பு முடித்து அல்லது முடிக்காமல் வேலை தேடி ‘களத்துக்கு’ வருகின்றனர்? இதற்கு ஏற்றாற்போல் அதே எண்ணிக்கையில் புதிய வேலைகள் உருவாக முடியுமா? என்றால்  அது சாத்தியம் இல்லை.இடைவெளி இருக்கத்தான் செய்யும்.

வேலை கிடைக்காதவர்கள் பொதுவாக சுமார் 5% வரை அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட, எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். எந்த வேலையுமே கிடைக்கவில்லை அல்லது தமது கல்வித் திறமைக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்று இரு பிரிவுகளில் இருப்பவர்களும் இதில் அடங்குவர். வேலையின்மையின் சதவீதம் என்றைக்குமே இரட்டை இலக்கத்தை எட்டுவது இல்லை. ஆனாலும், ஒரு சதவீதத்துக்கும் ஒன்பது சதவீதத்துக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி இருக்கிறதுதானே? இதுதான் கவலையை அதிர்ச்சியை உண்டாக்குவது.

கடந்த நூற்றாண்டின் நிறைவுப் பகுதியில் எழுந்த மென்பொருள் துறையின் தோற்றமும் வளர்ச்சியும் ஏராளமான புதிய வேலை வாய்ப்புகளை அள்ளி வழங்கியது. வேலை வாய்ப்புகளை வழங்கியதோடு மட்டுமல்ல பொருளாதார நிலைமையை உச்சத்துக்கு கொண்டுசென்றது. இன்றும் அதுதான் இளைஞர்களை ஈர்க்கும் முக்கிய துறையாக விளங்கி வருகிறது.இதுபோன்று புதிய புதிய துறைகள் மேலும் மேலும் உருவானால் ஒட்டுமொத்த பிரச்னைக்கும் ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்கலாம்.ஆனால், புதிய துறையும் புதிய தொழில்நுட்பமும் அத்தனை எளிதில் முளைத்து விடுமா? ஏன் கூடாது? அல்லது முடியாது? விரிவாகப் பிறகு பார்ப்போம்.

( தொடரும்...)

X