ஆயுஷ் படிப்புக்கும் நீட் தேர்வா....

8/6/2018 4:51:33 PM

ஆயுஷ் படிப்புக்கும் நீட் தேர்வா....

நன்றி குங்குமம் கல்வி-வேலை வழிகாட்டி     

அலைக்கழிக்கப்படும் தமிழக மாணவர்கள்!

இளநிலை மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நீட் என்ற நுழைவுத் தேர்வை மத்திய அரசு புகுத்தியது. எய்ம்ஸ், ஜிப்மர் தவிர நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த நீட் நுழைவுத் தேர்வால் கிராமப்புற மாணவர்கள், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
 
கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் சி.பி.எஸ்.இ. மூலம் படித்த மாணவர்கள் தமிழக அரசின் ஒதுக்கீட்டின் கீழ் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேரும் விகிதம் பல மடங்கு அதிகரித்துள்ளது. மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் விகிதம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்ற ஆண்டு அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் இருவர் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிந்தது. இந்த ஆண்டு வெறும் 4 மாணவர்கள் மட்டும்தான் சேர்ந்துள்ளனர்.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களில் கூட கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் விகிதமும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட மாநகரங்களைச் சேர்ந்த மாணவர்கள்தான் அதிக அளவில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

இதற்கு காரணம் கிராமப்புறங்களில் தரம் வாய்ந்த நீட் பயிற்சி மையங்கள் இல்லாததே. மாநகரங்களில் தரமான நீட் பயிற்சி மையங்கள் இருப்பதால் மாநகர மாணவர்கள் அதிக அளவில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். எனவே, நீட் நுழைவுத் தேர்வு அரசுப் பள்ளி மாணவர்கள், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் ஆகியோருக்கு எதிராக உள்ளது என்பது உறுதியாகியுள்ளது.

சி.பி.எஸ்.இ. நகர்ப்புற மாணவர்களுக்கும் நீட் சாதகமாக உள்ளது. எனவேதான் தமிழகம் தொடர்ந்து நீட் தேர்விலிருந்து தமிழக அரசின் ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கு விலக்கு வேண்டும் என கோரி வருகிறது. நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவதற்காக தமிழக சட்டமன்றத்தில் சென்ற ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி இரண்டு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஒரு மசோதா இளநிலை மருத்துவக் கல்விக்கும், மற்றொரு மசோதா முதுநிலை மருத்துவக் கல்விக்குமாக நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு மாநில ஆளுநர் அனுமதி வழங்கிவிட்டார். குடியரசுத் தலைவருடைய ஒப்புதலுக்கு நிறைவேற்றப்பட்ட இந்த சட்ட மசோதாக்கள் அனுப்பப்பட்டது.

மத்திய அரசு இந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை இன்றுவரை பெற்றுக்கொடுக்கவில்லை. தமிழக அரசும் மத்திய அரசுக்கு போதிய அழுத்தத்தைக் கொடுக்கவில்லை. இதன் காரணமாக நீட் தேர்வு மூலம் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேரும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இது தமிழக மாணவர்களின் உரிமையைப் பறிக்கிறது. நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக தமிழகம் கடும் போராட்டங்களை நடத்துவதின் காரணமாக இத்தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.இ. தமிழக மாணவர்களை பழிவாங்கும்போக்கில் செயல்படுகிறது.

சென்ற ஆண்டு நடந்த நீட் நுழைவுத் தேர்வில் தமிழ்மொழியில் வழங்கப்பட்ட வினாத்தாளில் வினாக்களே மாறிவிட்டன. வெறும் மொழியாக்கம் மட்டுமே செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வினாக்களே மாற்றப்பட்டுவிட்டன. இதுபோன்று வேறு சில மொழிகளிலும் பிரச்னை எழுந்தது. வினாக்கள் மாறியதால் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என தடைவிதித்தது.

நாடு முழுவதும் ஒரே வினாக்கள் வழங்கப்படாத நிலையில் ஒரே தரவரிசைப் பட்டியலை எவ்வாறு வெளியிட முடியும்? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. நாடு முழுவதும் பல்வேறு பாடத்திட்டங்கள் உள்ள நிலையில் சி.பி.எஸ்.இ-ன் இந்த நுழைவுத் தேர்வை எவ்வாறு நடத்தலாம்? எனவும் கேள்வி எழுப்பியது. மேலும் சி.பி.எஸ்.இ, மாணவர்களுக்காக சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திலிருந்தே அதிக வினாக்களைக் கேட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கூறியது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றமோ நீட் தொடர்பான எந்த வழக்கையும் எந்த மாநில உயர் நீதிமன்றங்களும் விசாரிக்கக்கூடாது என உத்தரவிட்டது. நீட் தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றமே விசாரிக்கும் எனக் கூறியது. இதனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரை கிளை தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என்ற தீர்ப்பு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கையும் உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

நீட் வினாத்தாளில் வினாக்களே மாறிவிட்டதைக்கூட கணக்கில் கொள்ளாமல் மாணவர் நலன் பற்றி கவலைப்படாமல் நீட் தேர்வு முடிவை வெளியிடலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் சென்ற ஆண்டு தமிழ்மொழியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளானார்கள். தமிழக மாணவர்களுக்கு எதிரான சி.பி.எஸ்.இ-ன் பழிவாங்கும் நடவடிக்கை வென்றது.

இந்த ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்விலும் தமிழக மாணவர்களை பழிவாங்கும் நோக்கோடு சி.பி.எஸ்.இ. செயல்பட்டது. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் வெளிமாநிலங்களுக்குச் சென்று நீட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சிக்கிம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்குக்கூட நீட் தேர்வு எழுதுவதற்காக தமிழக மாணவர்கள் செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.

இதனால் சில பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரிழந்தனர். மாணவர்கள் உடல், உள ரீதியான பாதிப்புக்கு உள்ளாயினர். தமிழக அரசு இந்தப் பிரச்னையில் மாணவர் நலனைக் காக்கவில்லை. தமிழக மாணவர்களுக்கு துரோகம் இழைத்தது.

இந்த ஆண்டு தமிழ் வினாத்தாளில் 49 வினாக்களில் மொழியாக்கத் தவறுகள் இருந்தன. இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பாதிக்கப்பட்ட 24,700 மாணவர்களுக்கும் கருணை அடிப்படையில் 196 மதிப்பெண் வழங்கிட உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கும் உச்ச நீதிமன்றம் தடைவிதித்துவிட்டது. இதனால், தமிழ்வழியில் தேர்வெழுதிய மாணவர்கள் வஞ்சிக்கப்பட்டனர். இந்தப் பிரச்னையிலும் தமிழக அரசு வாய்மூடி மவுனியாக இருந்தது.

நீட் நுழைவுத் தேர்வால் தமிழகம் மிக மோசமாக தொடர்ந்து வஞ்சிக்கப்படும் நிலையில் ஆயுர்வேதா, யுனானி, சித்தா, ஹோமியோபதி போன்ற ஆயுஷ் படிப்பு களுக்கும் நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. ஆயுஷ் படிப்பவர்களுக்கு நீட்டில் இருந்து விலக்குபெற தமிழக அரசு எந்த சட்டத்தையும் இயற்றவில்லை.

தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் மட்டுமே எழுதியுள்ளார். தமிழக முதல்வர் விடும் அறிக்கை மட்டுமே நீட் நுழைவுத் தேர்வு விலக்களிக்க உத்தரவாதமாகிடாது. இதனால் ஆயுஷ் படிப்பவர்களுக்கும் இந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும், தமிழ்வழியில் நீட் எழுதிய மாணவர்களும் இந்தப் படிப்புகளில்கூட அதிக அளவில் சேரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக மாணவர்களுக்கு எதிரான மத்திய அரசின் தாக்குதலை தடுத்து நிறுத்த தமிழக அரசு தயங்குகிறது. மத்திய அரசைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது.

இந்தநிலையில், அடுத்த ஆண்டு முதல் நீட் நுழைவுத் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. இது வெந்தபுண்ணில் வேலைப்பாய்ச்சுவதுபோல் உள்ளது. நீட் தேர்வுக்கே பயிற்சி பெற முடியாத கிராமப்புற மாணவர்கள் ஆன்லைன் மூலமாக எவ்வாறு தேர்வு எழுத முடியும்? இந்தப் பிரச்னையில் தமிழக அரசு என்ன செய்யப்போகிறது? பொறுத்திருந்துதான் பார்ப்போமே!                                    =

- டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்,
பொதுச்செயலாளர், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம்.

X