குழந்தைகள் மீது கவனம் செலுத்துங்கள் பெற்றோர்களே!

8/6/2018 4:53:29 PM

குழந்தைகள் மீது கவனம் செலுத்துங்கள் பெற்றோர்களே!

நன்றி குங்குமம் கல்வி-வேலை வழிகாட்டி     

சமூகத்தில் அதிக வன்முறைகளுக்கு இலக்காவது குழந்தைகளே! குழந்தைகளின் குழந்தமையை பாதுகாக்க பல்வேறு பாதுகாப்புச் சட்டங்கள் கொண்டு வந்தாலும் புதிய புதிய வடிவங்களில் குழந்தைகள் மீதான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.சமீபத்தில் சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 13 வயது சிறுமிக்கு நடந்த கொடுமையைச் சொல்லலாம்.

அதிலும் அக்குழந்தை மாற்றுத்திறன் குழந்தை. பள்ளி செல்லும் சிறப்பு தேவையுடைய இக்குழந்தைக்கு நேர்ந்துவந்த இக்கொடுமையை ஏழு மாதங்களாக அவர்களின் பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்களால் கண்டுணர்ந்துகொள்ள முடியாத நிலையை என்னவென்று சொல்வது? இதுகுறித்து கடந்த பல வருடங்களாக குழந்தைகள் நலனில் அக்கறை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் மனித உரிமை கல்வியாளர் பெர்னாட்டிடம் பேசினோம். அவர் கூறும் கருத்துகளைப் பார்ப்போம்...  

‘‘குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் தொடுதல் மற்றும் தொடுதல் இல்லாமல் என இரு வழிகளிலும் நடக்கின்றன. பாலியல் செயல்களைப் பார்க்க, கேட்கச் செய்தல், மறைந்திருந்து பார்த்தல், ஆபாச புத்தகங்களைப் படிக்க, ஆபாச காட்சிகளைப் பார்க்க தூண்டுதல், ஆபாசமாக படமெடுத்தல், பாலியல் பேச்சுகள் மற்றும் கதைகள் கூறுதல் ஆகிய முறைகளில் தொடாமலேயே குழந்தைகள் மனதில் விதைக்கப்படுகின்றன.

இன்று ஒவ்வொருவர் கையிலும் அதிநவீன செல்பேசிகள் உள்ளன. இவைகளின் வாயிலாக தவறான நோக்கத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் ரீதியாக படமெடுத்தல் மற்றும் தவறாக சித்தரிக்கும் போக்கும் அதிகரித்துள்ளது. தொடுதல் மூலம் ஏற்படும் கொடுமைகளால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இவ்வன்முறைகள் பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை. பாலியல் வன்முறைகளால் தாய்மை அடையும் நிலை அல்லது கொடுங்காயம் அல்லது மரணத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் மட்டுமே ஊடகங்களில் வெளிவருகின்றன.

மற்றவை பல்வேறு நிலைகளில் தடுக்கப்படுகின்றன அல்லது மறைக்கப்படுகின்றன அல்லது அப்பிரச்னையின் கொடூர தாக்கத்தை உணர்ந்துகொள்ளா நிலையைத்தான் காட்டுகிறது. பொதுவாக இப்பிரச்னைகள் நகரம், கிராமம், வசதியற்றவர், வசதியுள்ளவர்கள், உயர்த்திக்கொண்ட சாதி, தாழ்த்தப்பட்ட சாதி என பாகுபாடு இல்லாமல் அனைத்து நிலைகளிலும் இக்கொடுமை நடைபெறும் என்பதை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.

2005-ம் ஆண்டில் துளிர் அமைப்பு சென்னையில் 24 பள்ளிகளில் நடத்திய ஆய்வில் 42 சதவீத குழந்தைகள் இக்கொடுமைக்கு இலக்காகியுள்ளதாக தெரியவந்துள்ளது’’ என்று பெற்றோரும் ஆசிரியர்களும் தெரிந்துகொள்ளவேண்டியது என்ன என்று விளக்கியவர், மேற்கொண்டு தொடர்ந்தார்.‘‘குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் முன்பின் தெரியாத நபர்களால் ஏற்படுகின்றன என்ற கூற்றும் தவறாகும். குழந்தைகளுக்கு மிக அருகில், அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களால்தான் அதிகளவில் நிகழ்கிறது என்பதை ஆசிரியர்களும் பெற்றோரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குறிப்பாக பெற்றோர், குடும்ப உறுப்பினர்கள், மிக நெருங்கிய உறவினர்கள், குடும்ப நண்பர்கள், ஆசிரியர்கள், விடுதி காப்பாளர்கள் மற்றும் பிற சேவை அளிப்பவர்களால்தான் அதிகம் நிகழ்த்தப்படுகிறது. அதுபோன்றே அவை வீடு, தெரு, உறவினர் வீடு, பள்ளி, விடுதி, இளம்சிறார்களுக்கான கண்காணிப்பு இல்லங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், விளையாட்டு மற்றும் கேளிக்கை மையங்கள், விழாக்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் பிற இடங்களில் இதுபோன்ற வன்முறைகள் நிகழ்கின்றன என்பதையும் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியமாகும்.

இன்றைய சூழ்நிலையில் குடும்பத்தின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்கே பெற்றோர் அதிக நேரம் செலவிடுவதால் குழந்தைகள் மீதான கவனிப்பு குறைந்துவிடுவதும், பிறர் கண்காணிப்பில் குழந்தைகளை விடுவதும் இக்கொடுமைகள் நிகழ சாதகமான சூழலை ஏற்படுத்திவிடுகின்றன. மேலும் குடும்பத்தின் சமூக சூழல், தனித்திருக்கும் பெற்றோர், மாற்றுத்திறன் மற்றும் பிற காரணங்களும் குற்றவாளிகளுக்கு சாதகமாக உள்ளன. எந்த சூழலானாலும் குழந்தைகள் மீது கவனம் செலுத்துவதில் குறைவைக்காதீர்கள்’’ என்றார் பெர்னாட்.

‘‘பெரும்பாலும் குழந்தைகள் ஏன் வெளியே சொல்வதில்லை என்பதை பெற்றோரும் ஆசிரியர்களும் யோசித்து பார்க்க வேண்டும். தனக்கு நேர்ந்த இக்கொடுமையை வெளியே சொன்னால் தன்மீதே குற்றம் சுமத்தப்படுவோமா என்ற பயம், பாலியல் கொடுமை பற்றிய புரிதல் இல்லாத வயது, குற்றவாளி மிரட்டி பயமுறுத்தி வைத்திருத்தல் அதாவது பெற்றோரை, உடன்பிறந்தவர்களை கொலை செய்துவிடுவேன் என்று பயமுறுத்தி வைத்தல், புகைப்படம் எடுத்துள்ளதாக கூறி மிரட்டுவது போன்ற காரணங்களால் சொல்வதில்லை.

இந்தக் காரணங்கள் மட்டுமில்லாமல் அன்பு, பாசம், பரிசு, விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றை குடும்பத்தில் இழந்து ஏங்கும் குழந்தைகளுக்கு வெளியே சொல்வதால் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் மற்றும் இக்கொடுமையை சொல்ல முழுமையான மொழிப் புரிதல் இல்லாதது, இதை வெளியே சொன்னால் அசிங்கமான குழந்தை என்று தன் மீதே குற்றம் சுமத்தப்படுமோ என்ற பயம் ஆகியவையே பெரும்பாலும் குழந்தைகள் தங்களுக்கு நிகழும் கொடுமைகளை வெளியே சொல்வதில்லை என்பதை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்’’ என்று உளவியல் ரீதியான சிக்கல்களைப் பட்டியலிடுகிறார்.

‘‘இக்கொடிய பிரச்னையை நாம் அடையாளம் கண்டு தீர்க்காவிட்டால் அது அக்குழந்தையின் எதிர்காலத்தையே அழித்துவிடும். குறிப்பாக உடல், உளவியல், பாலியல், நடத்தை சார்ந்த குறுகிய மற்றும் நீண்ட கால பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. குடும்பங்களில் அதிகம் கவனிக்கப்படாத குழந்தைகளைக் கண்காணித்து இத்தகைய வன்முறைகளிலிருந்து பாதுகாக்க ஆசிரியர்களால் மட்டும் இயலும். இம்மாதிரியான கொடுமையிலிருந்து தங்களையே தற்காத்துக் கொள்வதற்கான யுக்திகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

உடல் பற்றிய புரிதலையும் அதன் ரகசியங்களையும் வயதிற்கு ஏற்ற வகையில் சொல்லிக் கொடுக்க வேண்டும். எது நல்ல தொடுதல் எது தவறான தொடுதல் என்பன பற்றியும் சொல்லிக்கொடுக்க வேண்டும். பெற்றோர் குழந்தைகளின் அன்றாட செயல்களை உற்று நோக்கி அவர்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய வேண்டும் அல்லது முயற்சிக்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் தருணங்களில் முழுமையாக உங்கள் நேரத்தை குழந்தைகளுடன் செலவிடுங்கள்’’ என்று எச்சரிக்கை கலந்த ஆலோசனையைக் கூறுகிறார் பெர்னாட்.

- திருவரசு

X