உத்வேகம் கொண்டவர்கள் தோற்பதில்லை!

8/21/2018 5:42:26 PM

உத்வேகம் கொண்டவர்கள் தோற்பதில்லை!

நன்றி குங்குமம் கல்வி-வேலை வழிகாட்டி     

படிப்புக்கேற்ற வேலையா வேலைக்கேற்ற படிப்பா?

கல்வியின் தேவை  அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ளவும், வாழ்க்கைமுறையை புரிந்துகொள்ளவும் என்று இருந்த காலம் நம் முன்னோர்கள் காலம். ஆனால், இன்றைய நிலையே வேறு. பள்ளிக் கல்வி முடிந்து உயர்கல்வி என்றதும் நம் முன் நிற்கும் கேள்வி ‘என்ன படிச்சா உடனடியா வேலை கிடைக்கும்?’ என்பதுதான் எல்லா இளைஞர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும்.

நியாயமாகத் தோன்றுகிற கேள்விதான் இது. வேலை தருவோர், வேலை தேடுவோர் என்று இரண்டு கோணங்களில் இந்தக் கேள்வியை நாம் அணுகலாம். அதற்கு முன்னதாக ஒரு சின்ன திருத்தம். இனி நாம் ‘வேலை தேடுவோர்’ என்று குறிப்பிடப் போவதில்லை ‘வேலை நாடுவோர்’என்றே சொல்வோம். ஆங்கிலத்தில் ‘job seeking’என்றுதான் பரவலாகச் சொல்கிறார்கள். ‘job searching’ அல்ல.

ஆகவே, தமிழிலும் அப்படியே பின்பற்றுவோம். ‘நாடுதல்’என்றாலே ஒரு விருப்பம், ஆசை, நாட்டம் இருக்கிறது என்றுதானே பொருள்…? இதுதான், வேலைக்கான முயற்சியில் மிக முக்கிய அம்சம். முழு விருப்பத்துடன் களத்தில் இறங்கவேண்டும். யாரோ ‘தள்ளிவிட்டு’ முன்னுக்கு வரக்கூடாது. ‘aspiring youth’ அதாவது, முன்னேற வேண்டும் என்கிற உத்வேகம் கொண்ட இளைஞர் தோற்பதே இல்லை. காரணம், ஓர் இளைஞன்/இளைஞிக்கு உள்ளே இருக்கும் ஆற்றல், உத்வேகம்தான் எந்த ஒரு நிறுவனத்துக்கும் அசுர பலத்தைக் கொடுக்கும்.

வேலை கேட்டு வருகிற ஒருவரிடம் ‘ஸ்பார்க்’ ஒரு பொறி, இருப்பதாக, வேலை தருபவர் உணர்ந்துகொண்டுவிட்டால், அதன் பிறகு அவரே தானாகத் தேடிவந்து அவரை வேலையில் சேர்த்துக்கொள்வார். நன்றாக மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். யார் ‘தேடுதல்’ செய்கிறார்…? வேலை தருபவர்! ஆமாம். யோசித்துப் பார்ப்போம். இன்னின்ன வேலைக்கு இன்னின்ன தகுதிகளுடன் ஆட்கள் வேண்டும்’ என்று விளம்பரம் செய்வோர் யார்…? வேலை தருவோர்தானே…?

‘எனக்கு வேலை கொடுங்கள்’ என்று கேட்கும் விளம்பரம் மிக மிகக் குறைவு.‘விளம்பரம்’ செய்ய எங்கே பணம் இருக்கு…? கேள்வி சரியானதுதான். ஆனால், பல லட்சம் பேரில் சில நூறு பேராவது இப்படிச் செய்யலாமே..! ஏன் செய்வதில்லை…? அப்படிச் செய்வதால் எந்தப் பயனும் இல்லை. அதுதான் காரணம். வேலை தருவோர், தெரியப்படுத்துவார்கள்.

வேலை வேண்டுவோர் ‘நாடி’ செல்ல வேண்டும். சில நேரங்களில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் தமக்குத் தெரிந்த ந(ண்)பர்களை அறிமுகப்படுத்துவார்கள். நிறுவனமும் உடனே அவர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ளும். இந்த வழிமுறையை ஆங்கிலத்தில்,’job by reference’என்கிறார்கள். அதாவது, ஒருவரின் ‘அறிமுகம்’ அடிப்படையில் வேலை தருவது. இந்த நடைமுறையைத் தவறாகப் புரிந்துகொள்கிறவர்கள்தான் அதிகம்.

இதில்‘reference’வேறு ‘recommendation’ முற்றிலும் வேறு. முன்  உள்ளது தமக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட ஒருவர் மூலம் கிடைக்கிற அறிமுகம். பின் உள்ளது ஏதோ ஒரு வகையில் அதிகாரத்தைப் பயன்படுத்தி பரிந்துரைப்பது. இரண்டுக்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது. ஒரு நிறுவனத்தில் நன்றாகப் பணிபுரிந்து வருகிற, நற்பெயருடன் விளங்குகிற ஒருவர், தனக்கு தெரிந்த ஒருவருக்கு வேலை கேட்கிறார் என்றால், அவரைப் போலவே நன்றாகப் பணியாற்றுவார் என்கிற எதிர்பார்ப்பு தானாக ஏற்பட்டுவிடுவது இயல்புதானே..?

பணிபுரிகிற இடத்தில் தன் மீதுள்ள நம்பிக்கை குலைந்துபோகிற விதத்தில் ஒரு ‘நல்ல பணியாளர்’ நடந்துகொள்வாரா..? தனது நண்பர், உறவினர் அல்லது தெரிந்தவரை என்ன சொல்லி அழைத்துக் கொண்டு போவார்..? ‘பார்த்துப்பா… என் பேருக்கு பாதகம் வர்ற மாதிரி நடந்துக்காதே…’ என்றுதானே!  பணிக்கு வருபவரும் ஒருவித எச்சரிக்கை உணர்வோடுதானே பணி செய்வார்! இந்தப் பொறுப்புணர்வுதான் இவ்வகைப் பணி நியமனத்தில் மையப் புள்ளி. மேலும் ஒரு முக்கிய அம்சமும் இருக்கிறது. இந்தப் பணிக்கு இந்தத் தகுதி வேண்டும்.

இங்கே பணிச்சூழல் இப்படி இருக்கும்.  வேலை நேரம் இவ்வளவு. வேலைப் பளு எவ்வளவு… எல்லாம் சிபாரிசோடு அழைத்து வருகிற பணியாளருக்கே தெரியுமே! எல்லாம் சரியாக இருந்தால்தான் அவரே அந்த நிறுவனத்தின் அந்தக் குறிப்பிட்ட வேலைக்கு புதியவர்களை அழைத்து வருவார். ஆகவே ‘தேர்வு’ செய்வதில் சிக்கல் இருக்காது. மேலை நாடுகளில் இந்த முறை மிகவும் பிரபலமாக இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களில் இந்த முறைக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

வேலை தேடும் படலத்தின் முதல் ‘பாடம்’ விளங்கிவிட்டதா…?தம்முடைய நட்பு வட்டாரத்தில் யார் யார் நல்ல வேலையில் இருக்கிறார்கள் என்று கண்டறிந்து அவர்களுடன் நட்பை வலுப்படுத்திக்கொள்ளல் அல்லது புதுப்பித்துக்கொள்ளுதல் மிகவும் அவசியம்.

நம்மிடம் கல்வித் தகுதி, திறன் மற்றும் நன்னடத்தை இருந்தால், நமது நண்பர்கள் மூலம்,நல்ல வேலை நம்மைத் தேடி வரும். ஊர் சுற்றுதல், அரட்டை அடித்தல், அர்த்தமற்ற கேளிக்கைக் கூத்துகளில் மயங்கிக் கிடத்தல் ஆகிய வழக்கங்களுக்கு அடிமையாகாமல்,நல்ல நண்பர்களுடன் நல்ல பழக்கவழக்கங்களை மேற்கொண்டாலே,வாழ்க்கையில் முன்னேற முடியும்.

இந்த நிலைக்கு இளைஞர்கள் உயரவேண்டும்/உயர்த்த வேண்டும். இதுவே இந்தக் கட்டுரையின் உள்ளார்ந்த நோக்கம். சரி, அடுத்த கட்டத்துக்கு நகர்வோம். முதலில், வேலை தருவோர் யார்…யார்..?என்பதை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

1. அரசாங்கம்
2. பொதுத்துறை நிறுவனங்கள்
3. தனியார் துறை.

இந்த மூன்றும் இல்லாமல், சுய வேலைவாய்ப்பு, சுயதொழில் சாத்தியங்களும் தனியே உண்டு. நாம் அரசாங்கத்தில் இருந்து தொடங்குவோம்… அரசுப் பணி கிடைக்க என்ன வழி? அதைப்பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்…

- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

X