தனியார் துறையில் சாதிக்க தனித்திறன் வேண்டும்!

10/22/2018 5:42:26 PM

 தனியார் துறையில் சாதிக்க தனித்திறன் வேண்டும்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

ஒவ்வொரு தாய்-தந்தைக்கும் இருக்கிற ஒரே ஆசை தமது வாரிசுகள் ‘நல்லபடியாக’ வாழ வேண்டும். அவ்வளவுதான். இன்றைய உலகில், தேவைக்கேற்ப வருமானம் ஈட்டினால் மட்டுமே பெற்றோர் எதிர்பார்க்கும் விதமான வாழ்க்கை அமையும். இதற்கான சாத்தியங்கள் தனியார் துறையில் நிறையவே இருக்கின்றன.

எந்தவொரு தனியார் நிறுவனத்திலும், எந்தவொரு வேலைக்கும், ஒரே ஓரு தகுதிதான் மிக முக்கியமாகத் தேவைப்படுகிறது. அதுதான் ‘தனித்துத் தெரிவது’.பன்னாட்டு நிறுவனம் ஒள்றில் ‘மின் பொறியாளர்’ பணிக்கு ஒருவர் தேவைப்படுகிறார். பத்திரிகைகளில் விளம்பரம் வருகிறது. தகுதியான நபர்கள், குறிப்பிட்ட நாளில் நேரடியாக  ‘வாக் - இன் இன்டர்வியூ’வில் கலந்துகொள்ளலாம் என்று செய்தி வந்தால் என்ன நடக்கும்…?

குறைந்தது நூறு பேராவது வருவார்களா இல்லையா..? இவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. அநேகமாக எல்லாருமே அதிக மதிப்பெண்களுடன்,  பல்கலைக்கழகத்தின் தங்க மெடல் வாங்கியவர்கள்கூட வந்திருப்பார்கள். அதில் யாரை விட்டுவிட்டு, யாரைத் தேர்வு செய்ய முடியும்..?    

ஆகவே,’உள்ளே நுழைவதற்கான’, விண்ணப்பம் அனுப்புவதற்கான குறைந்தபட்சத் தகுதியை மட்டுமே  பட்டப்படிப்பு வழங்க முடியும். அதற்கு மேல்..? தான் விண்ணப்பிக்கிற பணிக்கு கூடுதல் அறிவும் ஆர்வமும் அனுபவமும் இருக்கிற ஒருவர்தான் மற்றவர்களை முந்திச் செல்ல முடியும். கல்லூரிப் படிப்பை முடித்து வெளிவரும்போது ‘புதிதாக பட்டம் முடித்தவர்கள்’ (Fresh Graduate) என்றுதான் அழைக்கிறார்கள்.
அப்படியென்றால் கவனிக்க வேண்டியது ‘பணித்திறமை’. அதன் அடிப்படையில்தான் வேலையும் சம்பளமும் வழங்கப்படும். உதாரணத்துக்கு, ‘விற்பனை நிர்வாகி’ (Sales Executive)பதவியின் பெயர் வேண்டுமானால் பிரமாண்டமாக இருக்கலாம். பணியின் தன்மை (Nature of Job)அப்படி இருக்காது. எவ்வளவுக்கு விற்பனை காட்டுகிறோமோ, அவ்வளவுக்கே ஊதியம் கிடைக்கும்.  

அதாவது, நம்முடைய ‘ரிசல்ட்’டுக்கு ஏற்ப, ‘கமிஷன்’. இந்த வகையில் எத்தனை பேரை வேலைக்கு எடுத்தாலும், அந்த நிறுவனத்துக்கு செலவு/இழப்பு  ஏதும் இல்லை. இந்தப் பணிக்கு, பட்டதாரியாக இருக்க வேண்டும் என்பதேகூட அவசியம் இல்லை. பிறகு ஏன்      ‘புதுப் பட்டதாரி’ கேட்கிறார்கள்..? எல்லாம், ஒரு ‘பில்ட்-அப்’அவ்வளவுதான்.

எதிர்மறையாகவே சொல்கிறோமே என்று கருத வேண்டாம். இதில் மிகவும் நேர்மறையான, முற்றிலும்  ‘பாசிட்டிவ்’ செய்தி ஒன்று, ஒளிந்து கொண்டுள்ளது. கண்டுபிடிக்க முடிகிறதா..? யாருடைய எந்த பரிந்துரையும் தேவை இல்லை. வாருங்கள். உங்கள் திறமையை நிரூபியுங்கள் என்கிற வெளிப்படையான அழைப்பு, கருத்துக்குப் புலப்படுகிறதா..? அதுதான் தனியார் துறை வேலைவாய்ப்பில், ஆகச்சிறந்த நல்ல அம்சம்.

ஒரு நிறுவனத்தில்,ஒரே நாளில் ஒரே பணிக்கு பத்து பேர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.நாளடைவில் இந்த பத்து பேரும் நல்ல நண்பர்கள் ஆகிவிடுகிறார்கள். ஆனாலும், பணி உயர்வு, ஊதிய உயர்வு, யாருக்கு முதலில் வரும்..? அந்தப் பத்து பேருக்குமே தெரியும் - யார் சிறந்த ‘ரிசல்ட்’ தருகிறாரோ, அவருக்கே முன்னுரிமை. இந்த ‘ரிசல்ட்’தருகிற திறமை இருக்கிறதே… இதுதான் ஒருவரின் தனித்துவம்.

பல இளைஞர்கள் சொல்லக் கேட்டிருப்போம் ‘மொக்கை ப்ராடக்ட் என்றாலும் குடு… சேல் பண்ணிக்காட்டறேனா இல்லையான்னு பாரு…’ என்று. இந்த அணுகுமுறை இருக்கிற இளைஞன்,  விற்பனைத் துறையில், ‘கிடு கிடு’வென உயர்வதை யாராலும் தடுத்து நிறுத்தவே முடியாது. அப்படி என்ன மற்றவர்களிடம் இல்லாத தனித்திறன், இந்த இளைஞனிடம் இருக்கமுடியும்..? ஒன்று - பேச்சுத் திறமை.

நன்றாகப் பேசியே ஒருவரை சம்மதிக்க வைக்க முடியும் என்கிற நம்பிக்கை. அடுத்தது எங்கே யாருடன் எதைப்பற்றிப் பேசினாலும் தன்னுடைய ‘விற்பனை இலக்கு’ பற்றிய சிந்தனையுடனே இருப்பது. அதாவது, முழு நேர விற்பனையாளன். வேடிக்கையாகச் சொல்வதுண்டு - ‘எல்.ஐ.சி. ஏஜண்ட் கிட்ட மட்டும் மாட்டிக்கக்கூடாது’.

உண்மையில் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய, வாழ்க்கைக்கு மிகவும் உபயோகமான ஒரு நல்லம்சம் உண்டு. எப்போதும், குறிக்கோள் நோக்கியே பயணிப்பது. விற்பனைப் பணிக்கு இப்படி என்றால், உற்பத்தித் துறையில் இருப்பவர்கள், புதிய புதிய தொழில்நுட்பத்துக்குத் தங்களை எப்போதும் புதுப்பித்துக்கொண்டே, ‘அப்டேட்’ செய்துகொண்டே இருப்பதைப் பார்க்கலாம்.

இதுதான் அவர்களைத் தனித்துக் காட்டும். இவர்களுக்கான தேவை (Demand)உற்பத்தித் துறையில் நிரந்தரமாக இருக்கும். கவலையே இல்லை. கணினித் துறையில் வேலைவாய்ப்புகள் குறைந்துவிட்டதாகப் பலரும் புலம்புவதைக் கேட்கிறோம். இது ஓரளவுக்குத்தான் உண்மை. இப்போதும் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

ஆனால் என்ன..? சந்தையின் தேவை என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப தம்மை வடிவமைத்துக்கொள்கிற கல்வி நிறுவனங்கள், அங்கிருந்து படித்துவிட்டு வெளியே வரும் மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள். மற்றவர்கள் பின்தங்கிவிடுகின்றனர். இதற்கு என்ன செய்ய வேண்டுமென்றால், தற்போது உலக அளவில் என்னென்ன மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன என்பதைத் தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும்.

அதற்குத் தம்மைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். தொழில்நுட்பத் துறையைப் பொறுத்தமட்டில், அன்றாட மாற்றங்களுக்குத் தம்மைத் தகவமைத்துக் கொண்டால் மட் டுமே நல்ல வேலை கிடைக்கும். ஒவ்வொரு நபரும் தனிப்பட்ட முறையில் காட்டுகிற அக்கறை, எடுத்துக்கொள்கிற முயற்சி, வளர்த்துக்கொள்கிற திறமை… இதன் மூலம் தனித்து நிற்கிற ஆற்றல் இருந்தால், தனியார் துறையில் முன்னேறுவதற்குத் தடையேதும் இல்லை.

உயர உயர வளர்ந்து கொண்டே செல்லலாம். அதற்கு அடித்தளமாக இருப்பது ‘தனி நபர் தேடல்’தான். அந்த தேடல் எது? தொடர்ந்து பார்ப்போம் அடுத்த இதழில்…
 
(வளரும்)

X