சணல் பை தயாரிப்பில் மாதம் ரூ.45,000 சம்பாதிக்கலாம்!

12/6/2018 5:20:56 PM

சணல் பை தயாரிப்பில் மாதம் ரூ.45,000 சம்பாதிக்கலாம்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நமது அன்றாட பயன்பாட்டில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது பிளாஸ்டிக். ஆனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதில் பிரதான இடத்தைப் பிடிப்பது பிளாஸ்டிக் எனும்போது அதைத் தவிர்த்தே ஆகவேண்டிய கட்டாய சூழலில் நாம் இருக்கின்றோம். பாலிதீன் எனப்படும் வேதிப்பொருளால் உருவாக்கப்படும் பிளாஸ்டிக் பைகளால்தான் அதிக அளவு சுற்றுச்சூழல் கேடு ஏற்பட்டு வருகிறது.

பிளாஸ்டிக் பைகளை எரிப்பதால் காற்று மண்டலம் மாசடைந்து சுவாசம் சம்பந்தப்பட்ட பல நோய்கள் ஏற்படுகின்றன. பிளாஸ்டிக் பைகள், எத்தனை காலமானாலும், மண்ணில் மட்குவதில்லை. மழைநீர் மண்ணுக்குள் செல்வதைத் தடுத்து, நிலத்தடி நீர்மட்டம் குறையக் காரணமாகிறது.

உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் பைகளுடன் சேர்த்து சாப்பிட்டு மாடு, ஆடு போன்ற விலங்கினங்கள் இறந்துபோகின்றன. மேலும் உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் தாள்களில் வைத்து சாப்பிடும்போது, அதில் கொஞ்சம் விஷத்தையும் சேர்த்தே சாப்பிடுகிறோம் என பிளாஸ்டிக்கின் பேராபத்துகளைப் பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம்.

‘‘கண்ணுக்குத் தெரியாமல் பிளாஸ்டிக் கேரி பேக்குகளால் உருவாகும் கேடுகளுக்கு என்னதான் மாற்று என யோசித்தால், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான பேப்பர் பை, துணிப்பை, சணல் பை என பலவற்றை சொல்லலாம்.

சணல் பைகள் தயாரிக்கக் கற்றுக்கொள்வதன் மூலம் சுற்றுச்சூழலை மட்டுமின்றி, நம் வாழ்க்கையையும் வளமாக்கலாம்’’ என்கிறார் கோவையில் எஸ்.பி.வி. ஜூட் ஜங்ஷன் என்ற பெயரில் சணல் பை தயாரிப்பு பயிற்சி தருவதோடு சணல் பை விற்பனையும் செய்துவரும் மஞ்சு. அவர் கூறும் சணல் பை தயாரிப்புக்கான தகவல்களைப் பார்ப்போம்...

‘‘இன்றைய காலகட்டத்தில் வேலை தேடி அலுவலக படிகளில் ஏறி இறங்காமல் ஒரு பெண்ணோ ஆணோ வீட்டில் வைத்தே குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய ஒரு சுயதொழில்தான் இந்த சணல் பை தயாரிப்பு. இந்தத் தொழில் முழுக்க முழுக்க சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான தொழில். அதனால் இதற்கு அரசாங்கமும் மானியம் வழங்கிவருகிறது. மேலும் 2019ம் ஆண்டு ஜனவரி முதல் பிளாஸ்டிக்குக்கு முழு தடை விதிக்கவிருப்பதால் பெரும்பாலானோர்  இப்போதிருந்தே சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காத பொருட்களுக்கு மாறத் தொடங்கிவிட்டனர். நம்பிக்கையோடு களத்தில் இறங்கி தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகளைப் பார்ப்போம்.

திட்ட மதிப்பீடு குறைந்த முதலீட்டுத் தொழில் என்பதால் இதன் திட்ட மதிப்பீடு 50 ஆயிரம் இருந்தால் போதுமானது. தனிநபர்களுக்கு 20 சதவிகிதமும், குழுவாக செயல்படும்போது 30 முதல் 35 சதவிகிதமும் இத்தொழிலுக்கு அரசாங்கம் மானியம் வழங்குகிறது.

மூலப் பொருட்கள்

தையல் இயந்திரம்     - ரூ.25,000
சணல் துணி         - ரூ.16,000
(கலர் சணல் துணி ஒரு மீட்டர் (12 வகையில் உள்ளன) - ரூ.85. சாதாரண சணல் துணி ஒரு மீட்டர் - ரூ.75. ஒரு மாதத்திற்கு ஒவ்வொன்றிலும் 100
மீட்டர் தேவைப்படும். ரூ.75 X 100 = 7,500
மற்றும் ரூ.85 X 100 = ரூ.8,500. மொத்தம் = ரூ.16,000)
இதரப் பொருட்கள் -   ரூ.9,000
(கத்திரிக்கோல், நூல், ஜிப், ரன்னர், வெல்க்ரோ (ஒட்டத் தேவைப்படுவது), காட்டன் டேப் மற்றும் ரோப் (கைப்பிடிக்கு சணல் துணியிலும் வைக்கலாம் அல்லது காட்டன் ரோப்பும் வைக்கலாம்) இடம் : 10X10 சதுர அடி. (வீட்டின் முன்பகுதியிலோ அல்லது ஏதாவது ஓர் அறையை ஒதுக்கிக்கொள்ளலாம்.)

தயாரிப்பு முறை

தையல் தெரிந்தவர்கள் சுலபமாக சணல் துணியை வெட்டி இயந்திரத்தில் என்னென்ன வடிவங்கள் தேவைப்படுகிறதோ அதற்கு தகுந்தாற்போல் தைத்துக்கொள்ளலாம். இதற்கு சணல் வாரியம் இலவச பயிற்சி அளிக்கிறது.தையல் தெரிந்தவர்கள் மற்றும் தெரியாதவர்களுக்கும் நாங்கள் பயிற்சி அளித்து அதை சந்தைப்படுத்தும் வழிமுறைகளையும் சொல்லிக்கொடுக்கிறோம்.

மாதிரிக்காகச் சொல்கிறேன், சாதாரண ஒரு பை தயாரிக்க வேண்டுமென்றால், 12 இஞ்சுக்கு 14 இஞ்ச் அளவில் சணல் துணியை வெட்டிக்கொள்ள வேண்டும். அதன் ஓரங்களை தைத்து, ஜிப்பும் வைத்து முடித்துவிட்டால் சணல் பை தயார். இதன் மீது பெயர் மற்றும் படங்கள் வேண்டுமானால் அதனையும் நாமே ஸ்கிரீன் பிரின்டிங் மூலம் செய்துகொள்ளலாம்.

இந்தப் பை தயாரிப்பில் 40 மாடல்கள் மற்றும் முறைகள் உள்ளன. அதனைக் கற்றுக்கொண்டு தங்களது கிரியேட்டிவிட்டி மூலம் பெயின்டிங் வேலை, எம்பிராய்டரிங் என செய்து 400 மாடல்களை உருவாக்குவது அவரவர் திறமையைப் பொறுத்தது.

உற்பத்தி திறன்

வீட்டில் வைத்து தொழில் செய்யும் ஒரு நபர் ஒரு நாளில் 30 முதல் 32 பைகளை சர்வ சாதாரணமாகத் தைக்கலாம். ஒரு மீட்டர் சணல் துணியில் 4 பைகள் தைக்க முடியும். ஒரு பை தயாரிப்புக்கான செலவு ரூ.50 ஆகும்.

இதனை ஒரு பை ரூ.70 முதல் ரூ.80 என விலை நிர்ணயித்து விற்பனை செய்யலாம். ஒரு நாளைக்கு 32 பைகள் என எடுத்துக்கொண்டால் ஒரு மாதத்திற்கு 25 வேலைநாட்களில் 800 பைகள் தயாரிக்க முடியும். ஒரு பையின் விலை 80 என எடுத்துக்கொண்டால் ரூ.80 X 800 = ரூ.64,000 ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

நிர்வாக செலவு

மின்சாரம்             -   ரூ.500
ஏற்று இறக்குக்கூலி         -  ரூ.1000
இதர செலவுகள்           -    ரூ.500
மொத்தம்               - ரூ.2,000

சந்தை வாய்ப்பு

எங்கெங்கே கைவினைப்பொருள் கண்காட்சி நடைபெறுகிறதோ அங்கே இதனை சந்தைப்படுத்தலாம். அதன் மூலம் இதற்கான விற்பனை வாய்ப்பு கிடைக்கும். அடுத்து அவரவர் பகுதியில் உள்ள கடைகள், ஃபேன்ஸி ஸ்டோர், சூப்பர் மார்க்கெட் மற்றும் பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் என மார்க்கெட்டிங் செய்யலாம். அவரவர் மார்க்கெட்டிங்திறமையைப் பொறுத்து விற்பனை வாய்ப்பு இருக்கும்.

லாப விவரம்

மொத்த செலவு             - ரூ.18,000
மொத்த வரவு                  - ரூ.64,000
நிகர லாபம்                 - ரூ.46,000

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுவரும் இந்த வேளையில் சணல் பை தயாரிப்பு என்பது சரியான தொழில். சணல் பைகளுக்கான தேவை நாளுக்குநாள் பெருகிக்கொண்டு வருகிறது.

குடும்பத்தையும் நிர்வாகம் செய்துகொண்டு மாதம் ஒரு கணிசமான தொகையை சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு சணல் பை தயாரிப்பு தொழில் சிறந்தது’’ என தன்னம்பிக்கை தருகிறார் மஞ்சு.

சணல் பை தயாரிப்பு தொழில் குறித்து தேசிய சணல் வாரிய துணை இயக்குநர் ஐயப்பன் கூறுகையில், ‘‘மத்திய அரசு, ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது இந்திய அரசின் சணல் வாரியம். சணல் பைகள் மற்றும் பொருட்கள் தயாரிப்பதில் பயிற்சி, கடன் உதவி, தொழில் தொடங்கவும், சந்தைப்படுத்தவும் ஆலோசனைகள், விழிப்புணர்வு முகாம்கள், கண்காட்சிகள் எனப் பல விஷயங்கள் மூலம் இத்தொழிலை ஊக்கப்படுத்தி வருகிறோம். வெளிநாடுகளில் நடக்கும் கண்காட்சியில் கலந்துகொள்ள அழைத்துச் செல்கிறோம். அதில் பாதி செலவை அரசு ஏற்றுக்கொள்கிறது. மேலும், ஒருவர் சொந்த தொழில் தொடங்குவதற்கே 50 சதவிகித செலவை அரசு வழங்குகிறது.

சணல் பொருட்கள் தயாரிப்பு முறை குறித்த பயிற்சியை முடித்ததும், மாவட்டத் தொழில் மையத்தில் பதிவு பண்ண வேண்டும். முன்னால் நேரடியாக செல்ல வேண்டி இருந்தது. தற்போது ஆன்லைனில்கூட பதிவு செய்துகொள்ளலாம். அதற்கான ஆதாரத்தோடு எங்களை அணுகினால், அவர்களுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் நடக்கும் சணல் தயாரிப்பு கண்காட்சிகளில் பங்கெடுக்கவும், பொருட்களை விற்கவும் உதவிகள் செய்கிறோம்.

தொழிலை பதிவு செய்வதனால் சிறு தொழிலாளர்களுக்கு ஏராளமான நன்மைகள் உள்ளன. குறிப்பிட்ட வருமானம் வரையில் அவர்களுக்கு வரி கிடையாது. கூடுதல் வருமானம் வரும்போது இதைக்கொண்டு ஜிஎஸ்டி எடுத்துக்கொள்ளலாம். அதிலும் ஏராளமான நன்மைகள் உண்டு’’ என்று சணல் பை தயாரிப்பில் கிடைக்கும் மத்திய அரசின் உதவிகளை பட்டியலிட்டார் ஐயப்பன்.

ஆகமொத்தம் குறைந்த முதலீட்டில் கணிசமான மாத வருவாய் ஈட்ட சணல் பை தயாரிப்பு நிச்சயம் கைகொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. நீங்களும் தைரியமாக தொழில் தொடங்கலாம்!

-தோ.திருத்துவராஜ்

X