மாதம் ரூ.20,000 வருமானம் தரும் ஆர்கானிக் காஸ்மெட்டிக்ஸ் தயாரிப்பு!

12/11/2018 3:30:48 PM

மாதம் ரூ.20,000 வருமானம் தரும் ஆர்கானிக் காஸ்மெட்டிக்ஸ் தயாரிப்பு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

அழகை ஆராதிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆண் - பெண் பேதமின்றி முக்கியத்துவம் கொடுப்பது அழகான தோற்றம், பொலிவான முகம், அடர்த்தியான முடி இருக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களுக்குத்தான் என்றால் அது மிகையாகாது. அழகைக் கூட்ட சந்தையில் விற்கும் பல பொருட்களை வாங்கி உபயோகிக்கிறோம்.

அதில் என்னென்ன வகையான ரசாயனங்கள் உள்ளன என நாம் யோசித்து பார்ப்பதுகூட இல்லை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, லோஷன், ஷாம்புகள் அனைத்திலும் பல்வேறு ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. அதனால் சருமம் பல சமயங்களில் அதிகமான பாதிப்புகளை சந்திக்கிறது. சில நேரங்களில் நோய்த் தொற்றுக்களை ஏற்படுத்திவிடுகிறது. இதிலிருந்து விடுபட ஒரே வழி இயற்கை முறையில் தயாராகும் அழகுசாதனப் பொருட்கள்தான்.

நம் சருமத்துக்கு ஏற்ற அழகுப் பொருட்களை இயற்கை வழியில் வீட்டில் நாமே தயாரிக்கலாமே என்ற கான்செப்ட்டுடன் 100 சதவிகிதம் ரசாயனம் கலக்காத அழகுப் பொருட்களை தயாரித்து விற்பதுடன் சிறியதாக தொழில் தொடங்க விரும்புவோருக்கு பயிற்சியும் அளித்துவருகிறார் சென்னை நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் நந்தினி கோபிநாத்.

இயற்கை முறையில் அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை வாய்ப்பு, சந்தைப்படுத்துதல் போன்றவை குறித்து அவர் பகிர்ந்துகொண்ட தகவல்களை நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்.“நாம் உண்ணும் உணவில் ஆரோக்கியத்தைப் பார்க்கிறோம். ஆனால் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்களில் நாம் அதை பெரும்பாலும் கவனிப்பதில்லை.

உணவை போலவே இதில் பயன்படுத்தும் ரசாயனமும் நம்மை அதிக அளவில் பாதிக்கும். அதுமட்டுமின்றி நம் தோலில் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் நமக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும். செயற்கை மற்றும் ரசாயனம் சேர்க்கப்பட்ட பொருட்களின் பாதிப்பிலிருந்து மக்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தையும் காக்க விரும்புகின்றனர் என்பதை தெரிந்துகொண்டேன்.

சுவாச பிரச்னை, புற்றுநோய் போன்ற நோய்களிலிருந்து நம்மை காக்க இயற்கைப் பொருட்கள் தேவைப்படுகிறது. இதைப் பற்றி மேலும் படிக்கப் படிக்க உண்ணும் உணவு மட்டுமில்லாமல் நாம் நம் மேனியில் பயன்படுத்தும் பொருட்களும் அதேபோன்ற பாதிப்பை நமக்குள் ஏற்படுத்தும் என தெரிந்துகொண்டதால், இதைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே ‘டிரஸ்சஸ் பியூட்டி புராடக்ட்ஸ்’ என்ற பெயரில் ஆர்கானிக் அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினேன்.’’ என்று சுயதொழில் தொடங்கப்பட்ட ஆரம்பப்புள்ளியை விவரித்தார்.

‘‘நம் முன்னோர்கள் முக அழகுக்கு மற்றும் அழகிய கூந்தலுக்கு பயன்படுத்திய இயற்கை அழகு சார்ந்த பொருட்கள் அனைத்தையும் தயாரித்துவருகிறேன். அதன்பின் வாடிக்கையாளர்களே அவர்களுக்கு தேவையான அழகு பொருளை தயாரிக்கலாம் என்னும் திட்டத்தை கொண்டுவந்தேன். எனக்குத் தெரிந்த அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பை மற்றவர்களுக்கு பயிற்சியாக அளித்துவருகிறேன்.

இயற்கை அழகுசாதனப் பொருட்கள்

ஆர்கானிக் சோப். இந்த சோப் நம் வீட்டிற்கு அருகில் கிடைக்கும் குப்பைமேனி இலையில் தயாரிக்கலாம். இந்த இலையுடன் தேங்காய் எண்ணெய், வெட்டிவேர், சந்தனத்தூள், அலோவேரா ஜெல் ஆகியவற்றைக் கொண்டு சோப் தயார் செய்யலாம். ஹேர்டை உபயோகிக்காதவர்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு உள்ளது. இதனை அவுரி இலை, செம்பருத்தி பவுடர், அக்ரூட் பவுடர் ஆகியவற்றைக்கொண்டு தயார் செய்யலாம். அடுத்து ஷாம்பூ. முட்டையைக் கொண்டும் ஷாம்பூ தயாரிக்கலாம்.

மற்றபடி கெமிக்கல்ஸ் இல்லாத ஷாம்பூ வேண்டுமென்றால் அலோவேரா ஜெல்லைக்கொண்டு தயாரிக்கலாம். சுத்தமான நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றைக்கொண்டு சோப்பு மற்றும் ஷாம்பூ தயாரிக்கலாம். பெண்கள் பயன்படுத்தக்கூடிய லிப்ஸ்டிக்கில் ஏராளமான காரீயம் என்கிற சப்ஸ்டென்ஸ் இருக்கிறது. இது புற்றுநோயை உருவாக்கக்கூடியது. இந்த உதட்டுச்சாயத்தை காரீயம் மற்றும் வேறு சில கெமிக்கல் கலக்காமல் பீட்ரூட் ஜூஸிலிருந்து தயாரிக்கலாம். தேன்கூட்டின் மெழுகைக் கொண்டும் தயார் செய்யலாம். முக்கியமாக கொடம்புளியிலிருந்து ஒருவகையான வெண்ணெய் கிடைக்கிறது. அது நம் சருமத்திற்கு மிகவும் நல்லது.

நம் தலைமுடி பராமரிப்புக்கும் நல்லது. சிலருக்கு உடலில் வெள்ளைத் திட்டுக்கள், முகத்தில் பருக்கள் வருகிறது. இதற்கு முருங்கைக்கீரையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயைக் கொண்டு ஃபேஸ் மசாஜ் செய்தால் மாசு, மரு காணாமல் போய்விடும். உதாரணமாக இயற்கையான பொருட்களில் லிப் பாம் செய்வது குறித்து சொல்கிறேன்’’ என்று சொன்ன நந்தினி தயாரிப்புக் குறிப்புகளை விவரித்தார்.‘‘லிப் பாம் என்றதும் தலைவலி தைலம் என்று நினைத்துவிட வேண்டாம். லிப்ஸ்டிக்தான் லிப் பாம். அதை இயற்கையாக தயாரிக்கும் விதத்தைப் பார்ப்போம்...

தேவையான பொருட்கள்

ஒரு டீஸ்பூன் பீ வேக்ஸ்  (Bee Wax), அதாவது தேன் மெழுகு, 2 டீஸ்பூன் ஷீ பட்டர் ( Shea Butter), அல்லது கோகோ பட்டர் (C0c0-butter), இது இல்லையென்றால் கொடம்புளியில் (Kokum butter) இருந்து எடுக்கக்கூடிய வெண்ணெய்.

3 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் (Coconut Oil), தேங்காய் எண்ணெய் இல்லையென்றால் பாதாம் (Almond) எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் (Olive oil). ஒரு டீஸ்பூன் பிக்மென்ட் (Pigment Plain) அல்லது இதற்கு பதிலாக பீட்ருட்டை துருவி அதன் சாற்றை யூஸ் பண்ணலாம். இதனால் நல்ல சிவப்பு கலர் கிடைக்கும்.

இந்த பீட்ரூட் நமது சருமத்திற்கும் நல்லது. அரை டீஸ்பூன் கர்னவ்பா வேக்ஸ் (Carnauba wax), இது ஒருவகையான மூலிகைக் செடியிலிருந்து எடுக்கப்படும் மெழுகு. அரை டீஸ்பூன் கேன்டலிலா வேக்ஸ், இதுவும் ஒரு தாவரத்திலிருந்து எடுக்கப்படும் மெழுகு.

3 டீஸ்பூன் விளக்கெண்ணெய் (Castor oil), அரை டீஸ்பூன் எசன்சியல் ஆயில் (Essential Oil) (வாசனைக்காக வெண்ணிலா, ஸ்டாபெர்ரி போன்றவை நல்லது). இந்தப் பொருட்கள் அனைத்தையும் டபுள் பாயிலிங்கில் மெல்ட் பண்ண வேண்டும். பிறகு நன்கு சுத்தமான கன்டெய்னரில் ஊற்றிவைக்க வேண்டும். பிறகு லிப்ஸ்டிக்கில் அடைத்து யூஸ் பண்ண வேண்டியதுதான்.

இந்தப் பொருட்கள் அனைத்தும் 100 சதவிகிதம் ஆர்கானிக் பொருட்கள். இதைக்கொண்டு தயாரிக்கும் லிப் பாமை உபயோகிப்பதால் உதடு வெடிப்பு, உதடுகளில் ரத்தம் கசிவது போன்ற அனைத்தும் சரியாகும்.  

பொதுவாக கடைகளில் வாங்கும் அழகுசாதனப் பொருட்கள் நீண்டநாட்கள் (2 முதல் 3 ஆண்டுகள்) கெட்டுப்போகாமல் இருக்க பிரிஸர்வேட்டிவ்ஸ் என்பதைத்தான் அதிகமாக சேர்க்கிறார்கள்.

இதனால்தான் ஏராளமான சரும உபாதைகள் வருகின்றன. இந்த பிரிஸர்வேட்டிவ்ஸ் சேர்க்காமலேயே அழகுசாதனப் பொருட்களை நாம் தயாரிக்கலாம். கஸ்தூரி மஞ்சள் மற்றும் வேப்பெண்ணெய் ஆகியவற்றுக்கு அதிகமான மருத்துவக் குணநலன்கள் உள்ளன.

அதேபோல புற்றுநோயாளிகளுக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் பிரத்யேகமாக ஒரு ஹேர்டை தயார் செய்கிறோம். ஏனெனில், நம் உடல் பிரச்னைகளுக்கு மூலாதாரமே இந்த கெமிக்கல் கலந்த ஹேர்டைதான். அமோனியா, பிபிஓடி போன்ற கெமிக்கல்கள் கலந்துள்ளன. நாம் செய்யும் ஆர்கானிக் ஹேர்டை இயற்கையாக நிறம் கொடுக்கக்கூடிய பீட்ருட் தோல், செம்பருத்தி, வெங்காயத்தோல் உள்ளிட்டவற்றை காயவைத்து தயார் செய்கிறோம்.

தொழிலில் முதலீடு

இத்தொழிலுக்கு முதலீடு என பெரிய தொகையை ஒதுக்கவேண்டிய அவசியமில்லை. ரூ.10 ஆயிரம் முதலீட்டில் இத்தொழிலைத் தொடங்கிவிடலாம்.

விற்பனை வாய்ப்பு

முதலில் நம் குடும்பத்தினரிடம் இயற்கை பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி இவற்றைப் பயன்படுத்திப் பார்க்கச் சொல்ல வேண்டும். அதன்பிறகு அக்கம்பக்கத்தினர், நாம் வசிக்கும் பகுதியிலுள்ள கடைகள், சூப்பர் மார்க்கெட் போன்றவற்றில் கொடுத்து விற்பனை செய்யலாம்.
லாப விவரம்

ஒரு நாளைக்கு ஒரு பொருள் என தயாரிக்க வேண்டும். எந்தெந்த பொருட்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளதோ அந்தப் பொருட்களை அதிகமாக தயாரிக்க வேண்டும். 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தயாரிக்கும் பொருட்களை முழு ஈடுபாட்டுடன் மார்க்கெட்டிங் செய்தால் மாதம் 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் வரை வருமானம் பார்க்கலாம். மார்க்கெட்டிங் என்பது அவரவர் திறமையைப் பொறுத்தது. திறமைக்கேற்ப மாத வருமானத்தை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.

இயற்கையான மூலிகைப் பொருட்களைப் பெறுவதிலிருந்து பேக் செய்து விநியோகம் செய்யும் வரை அனைத்துமே ஆரம்பத்தில் சற்று சவாலாகத்தான் இருந்தது. ஆனால், இவையெல்லாம் ஆரம்பக்கட்ட பிரச்னைதான் அதை நாளடைவில் சரி செய்துவிடலாம் என தொடர்ந்து பாடுபட்டேன், இன்று பயிற்சி மற்றும் தயாரிப்பு ஆகியவற்றின் மூலம் மாதம் ரூ.30 ஆயிரத்திற்கும் மேல் வீட்டிலிருந்தே சம்பாதித்து வருகிறேன்.

தற்போது சந்தையில் சுய பராமரிப்பு பொருட்களுக்கு அதிக தேவை இருக்கிறது. கூடிய விரைவில் நம் நாட்டில் நல்லதொரு வருமானம் தரக்கூடிய தொழிலாக இது உயரும். இணையதளம் மற்றும் ஆன்லைன் மார்க்கெட்டிங் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலாகவும் மாற வாய்ப்புள்ளது.’’ என்று நம்பிக்கையை விதைக்கிறார் நந்தினி.என்ன அன்பர்களே நீங்களும் அழகுசாதனப் பொருட்களை தயாரித்து விற்பனையில் சாதனை படைக்க தயாராகுங்கள்! வாழ்த்துகள்!
 
- தோ.திருத்துவராஜ்

X