கேக் தயாரித்து மாதம் ரூ. 15,000 சம்பாதிக்கலாம்!

1/2/2019 5:07:59 PM

கேக் தயாரித்து மாதம் ரூ. 15,000 சம்பாதிக்கலாம்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

சிறிய முதலீட்டில் தொடங்கி சிறப்பாக செய்யக்கூடிய சுயதொழில்கள் ஏராளமாக உள்ளன. அதுபோன்ற தொழில்களுக்கான தொழில்விவரம், திட்ட அறிக்கை மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றுடன் ஒவ்வொரு இதழிலும் கொடுத்து வருகிறோம். அந்த வகையில் வீட்டிலேயே கேக் செய்து விற்பனை செய்யும் தொழில்குறித்து இப்போது பார்ப்போம். சென்னை நாவலூர் சாமுண்டீஸ்வரி நகரில் அர்ச்சனா ஹோம்மேட் பேக்ஸ் என்ற பெயரில் சாக்லேட் தயாரிப்பு மற்றும் கேக் தயாரிப்பு தொழிலோடு பயிற்சியும் அளித்துவரும் அர்ச்சனா, கேக் தயாரித்து அதனை விற்பனை செய்து வருமானம் ஈட்டும் வழியை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

‘‘இயற்கை சார்ந்து ஆர்கானிக் சோப், ஆர்கானிக் சாக்லேட், மெழுகுவர்த்தி மற்றும் வீட்டில் சுத்தமாக தயாரிக்கக்கூடிய கேக் போன்றவை தயாரித்து கடந்த 2 ஆண்டுகளாக விற்பனை செய்து வருகிறேன். இந்த மாதம் கிறிஸ்துமஸ் என்பதால், அந்தப் பண்டிகையில் முக்கிய இடம் வகிப்பது கேக் தான். பொதுவாக   கிறிஸ்துமஸ் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது கேக் தான். பாரம்பரியமான கிறிஸ்துமஸ் கேக் செய்வது சற்று கடினம். ஏனெனில், ஒரு மாதத்திற்கு முன்பே அதற்கான மூலப்பொருட்களில் ஒரு சிலவற்றை ஊறவைக்க வேண்டும்.

நாம் எளிய முறையில் வீட்டிலேயே செய்யக்கூடிய கேக் பற்றி பார்ப்போம்.’’ என்று கூறும் அர்ச்சனா இரண்டு விதமான கேக் செய்முறை மற்றும் விற்பனை செய்வதற்கான வழிமுறையையும் விவரித்தார்.‘‘கிறிஸ்துமஸ் கேக் ½ கிலோ அளவில் செய்வதற்கு ரூ.100  மட்டுமே செலவாகும். தயாரான கேக்கை ரூ.300 முதல் 350 வரை விற்பனை செய்ய முடியும். கேக் தயாரிப்பு தொழிலை ஆண்டு முழுவதும் செய்ய ஏதேனும் உலர் பழங்கள் அல்லது பருப்பு வகைகள் சேர்த்து தயாரித்து பேப்பர் கப்களில் வைத்து கடைகளுக்கு அனுப்பலாம். அக்கம்பக்கத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் விற்பனை செய்யலாம்.

அரை கிலோ கேக் செய்ய தேவையான பொருட்கள்

1 மைதா - 150 கிராம்
2 சர்க்கரை - 150 கிராம்
3 முட்டை - 2
4 வெண்ணெய் - 50மி.லி. (உருக்கியது)
5 வெண்ணிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்
6 உப்பு - ¼ டீஸ்பூன்
7 பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
8 ஏலக்காய் - 4
9 பட்டை - 2 இன்ச் (நீளவாக்கில்)
10 கிராம்பு - 6
11 டூட்டி ஃபுரூட்டி- 4 டேபிள் ஸ்பூன்
12 உலர் திராட்சை - 4 டேபிள் ஸ்பூன்
13 முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
14 பேக்கிங் சோடா - ½ டீஸ்பூன்
15 பாதாம் - 1 டேபிள் ஸ்பூன்
16 ஆரஞ்சு ஜூஸ் - ½ கப் ( 60 மி.லி.)

கேராமல் செய்ய தேவையான பொருள்

1 சர்க்கரை - ¼ கப் ( 30 கிராம் )
2 தண்ணீர்  - 2 டேபிள் ஸ்பூன்
பாதாம், முந்திரி, உலர்திராட்சை ஆகியவற்றை 24 மணி நேரம் ஆரஞ்சு ஜூஸில் ஊறவைக்க வேண்டும்.

கேராமல் செய்முறை

அடுப்பில் அடி கனமான வாணலியை மிதமான தீயில் வைக்க வேண்டும். அதில் சர்க்கரையைக் கொட்டி பாகாக உருக்க வேண்டும். டார்க் பிரவுன் நிறத்திற்கு வரும்போது அடுப்பை நிறுத்திவிட்டு 2 டேபிள் ஸ்பூன் தண்ணீரை ஊற்ற வேண்டும் (குறிப்பு இந்த தண்ணீர் தெறிக்கும் என்பதால் தள்ளிநின்று ஊற்ற வேண்டும்) மறுபடியும் அடுப்பை பற்றவைத்து பாகு கரைந்து டார்க் பிரவுன் நிறம் தண்ணீர் போன்று வரும். இப்படி கேராமல் தயார் செய்து ஆறவைத்துவிட வேண்டும்.

கேக் செய்முறை

கேக் பான் (6-8 இன்ச்) அல்லது அலுமினிய பாத்திரத்தின் உள்ளே வெண்ணெய் அல்லது சூரியகாந்தி எண்ணெய் தடவ வேண்டும். இதில், ஒரு டேபிள் ஸ்பூன் மைதா மாவு தூவி பான் முழுவதும் ஒட்டும் வகையில் தூவ வேண்டும். ஏலக்காய், பட்டை மற்றும் கிராம்பை கொஞ்சம் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். ஊறிய பருப்பு வகைகளை (உலர்திராட்சை, டூட்டி ஃபுருட்டி அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து ஒன்றாக கலந்து வைத்துக்கொள்வும். 2 டேபிள் ஸ்பூன் மைதா மாவு பிசைந்து வைத்துக்கொள்ளவும். மீதம் இருக்கும் ஆரஞ்சு ஜூஸை தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் உருக்கிய வெண்ணெய், சர்க்கரை, முட்டை ஆகியவற்றை சேர்த்து நுரை பொங்கும் வரை அடித்துக் கலக்கவும். இதனுடன் ஆறிய கேராமல் தண்ணீர், வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலந்துகொள்ளவும். ஒரு சல்லடையை எடுத்து அதில் மைதா மாவு, உப்பு, பொடித்த ஏலக்காய், பட்டை, கிராம்பு பொடி மற்றும் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து 2 முறை சலித்து வைத்துக்கொள்ளவும்.

இந்த மாவுக் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக முட்டைக் கலவையில் கொட்டி மெதுவாகக் கலக்கவும். இதன் பதம் இட்லி மாவைவிட கெட்டியாக இருக்க வேண்டும். இதில், மைதா மாவில் பிசைந்து வைத்துள்ள உலர்திராட்சை, டூட்டி ஃபுரூட்டி மற்றும் பருப்பு வகைகளை சேர்க்கவும். மீதமுள்ள ஆரஞ்சு ஜூஸையும் சேர்க்கவும். அனைத்தையும் ஒன்றுசேர கிளறிக்கொள்ளவும். இக்கலவையை எண்ணெய் தடவி வைத்துள்ள பாத்திரத்தில் ஊற்றி சமன்படுத்தவும். இதனை குக்கர் அல்லது பேக்கிங் ஓவனில் வைத்து வேக வைக்கவும்.

குக்கரில் கேக் செய்யும் முறை

குக்கரில் பாதிக்கும் குறைவாக தூள் உப்பை கொட்டவும். அதன் மீது குக்கர் தட்டு அல்லது பாத்திரம் வைக்கும் ஸ்டாண்ட் வைக்க வேண்டும். குக்கர் மூடியை தலைகீழாக மூடவும். 10 நிமிடம் சூடேற்ற வேண்டும். கேக் தயாரிக்க தயார் செய்து வைத்துள்ள பாத்திரத்தை எடுத்து குக்கரின் உள்ளே வைத்து குக்கரை சரியானபடி மூடவும். குக்கர் வெயிட்டை கழற்றிவிட வேண்டும். மிதமான தீயில் 45 நிமிடம் வேகவிடவும். பிறகு மூடியைத் திறந்து டூத் பிக் குச்சி அல்லது ஒரு மரக்குச்சியால் வெந்துவிட்டதா என குத்திப் பார்க்கவும். மரக்குச்சியில் மாவு ஒட்டினால் கூடுதலாக 10 நிமிடம் வேக வைக்கவும். வெந்ததும் எடுத்து ஆறவிடவும். பின்னர் 30 நிமிடம் கழித்து கேக்கை துண்டுகள் போடவும். சுவையான கேக் ரெடி.

ஓவனில் கேக் செய்யும் முறை

பேக்கிங் ஓவனை 10 நிமிடம் சூடேற்றவும். 189 டிகிரி செல்சியஸில் டெம்பரேச்சர் செட் செய்யவும். அதில், தயார் செய்து வைத்துள்ள கேக் பாத்திரத்தை வைத்து 40 முதல் 50 நிமிடங்கள் வேக வைக்கவும். பிறகு டூத் பிக் குச்சி அல்லது ஒரு மரக்குச்சியால் வெந்துவிட்டதா என குத்திப் பார்க்கவும். மரக்குச்சியில் மாவு ஒட்டினால் கூடுதலாக 10 நிமிடம் வேக வைக்கவும். வெந்ததும் எடுத்து ஆறவிடவும். பின்னர் 30 நிமிடம் கழித்து கேக்கை துண்டுகள் போடவும். சுவையான கேக் ரெடி. சுத்தமான, தரமான பொருட்களை உபயோகப்படுத்தி சுவையாக செய்து கொடுத்தால், வாடிக்கையாளர்கள் உங்களைத் தேடி வருவார்கள்.

இத்தொழிலை ரூ.500 முதல் ரூ.10,000 முதலீட்டில் தொடங்கலாம். வீட்டில் கிடைக்கும் நேரத்தைப் பயன்படுத்தி ஒரு நபர் ஒரு நாளைக்கு 3 முதல் 5 கிலோ வரை கேக் தயாரிக்க முடியும். இதற்கான பயிற்சியும் நாங்கள் தருகிறோம். முழு ஈடுபாட்டுடன் செய்தால் மாதம் குறைந்தபட்ச நிரந்தர வருமானமாக ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். முயற்சியும் விற்பனை திறனும் இருந்தால் நம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை பெருக்கிக் கொள்ளலாம். உதவிக்கு ஆட்கள் இருக்கும்பட்சத்தில் ஆன்லைனில் கூட விற்பனையைத் தொடங்கி டோர் டெலிவரி கூட கொடுக்கலாம்’’ என்கிறார் அர்ச்சனா.

-  தோ.திருத்துவராஜ்  
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்

X