அண்ணா பல்கலை வினாத்தாள் குழப்பங்களைத் தவிர்க்க சில ஆலோசனைகள்!

1/10/2019 2:42:03 PM

அண்ணா பல்கலை வினாத்தாள் குழப்பங்களைத் தவிர்க்க சில ஆலோசனைகள்!

நன்றி குங்குமச் சிமிழ் கல்வி-வேலை வழிகாட்டி


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடந்த பருவத்தேர்வு வினாத்தாள்களில் தரப்பட்ட வினாக்களில் பல  அப்படியே புதிய வினாத்தாளில் பயன்படுத்தப்பட்ட தவறு நடந்திருக்கிறது. இது வேறு பல பல்கலைக்கழகங்களிலும் நடைபெறக்கூடும். தமிழ்நாடு முழுவதையும் உள்ளடக்கியது என்பதால் அண்ணா பல்கலைத் தவறு பெரிய அளவில் விமர்சிக்கப்படுகிறது. இதுபோன்ற தவறுகளைத் தவிர்க்க அண்ணா பல்கலை. முன்னாள் பேராசிரியர் முனைவர் ப.வே.நவநீதகிருஷ்ணன் தரும் சில ஆலோசனைகள்...

1.வினாத்தாள் தயாரிப்புக்கு அண்ணா பல்கலையின்கீழ் வரும் கல்லூரிகள் மட்டுமின்றி, ஐஐடி, ஐஐஎஸ்ஸி முதலிய மைய, மற்றும் பிற மாநிலக் கல்லூரிகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதனால் தரமும் நம்பக/ரகசியத் தன்மையும் காக்கப்படும்.

2.வினாத்தாள் தயாரிக்கும் தேர்வாளர்களுக்கு விரிவான விதிமுறைகள் வழங்கப்படுவது வழக்கம். அவற்றுள், கடந்த குறிப்பிட்ட சில (எடுத்துக்காட்டாக, 3) ஆண்டுகளில் தரப்பட்ட கேள்விகளில் எவையும் அப்படியே திரும்பத் தரப்படக்கூடாது; தவிர்க்க முடியாது என்றால், ஒரு சில, வடிவம் மாற்றித் தரப்படலாம் என்ற கட்டுப்பாடும் இருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக, எண்தகவல் (numerical data) அடங்கிய கேள்விகளில் எண்களையாவது மாற்றித் தரவேண்டும்.(கடந்த ஆண்டுகளின் வினாத்தாள்களையும் அவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்). அப்படித் தரப்பட்ட வினாக்கள் எத்தனை, எவை என்ற விவரங்களைத் தேர்வாளர்கள் தனியே தரவேண்டும்.

3.வினாத்தாள் தேர்வாளர்களுக்கு வினாத்தாள் தயாரிக்கப் போதிய கால அவகாசம் தரப்படவேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு நான் பணியிலிருந்த காலத்திலேயே, அகால வேளையில், பல்கலைக்கழகப் பணியாளர் ஒருவர் தேர்வுக் கட்டுப்பாட்டாளரின் சீலிட்ட கடிதத்தைக் கொண்டுவந்து கொடுத்து, ‘சார், நான் காத்திருக்கிறேன்; வினாத்தாளை உடனே தயாரித்துக் கொடுங்கள், அச்சுக்கு அவசரம்’ என்று கேட்ட அனுபவம் எனக்கு உண்டு. இது தவிர்க்கப்பட வேண்டும்.

4.வினாத்தாள் அச்சிடப்படுவதற்கு முன் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மிகவும் நம்பத்தகுந்த, பதிவாளர் (Registrar), புல முதல்வர்கள் (Deans) ஆகியோர் அடங்கிய குழு தணிக்கை செய்யலாம்.

5.தேர்வுப்பணித் தவறுகளுக்குத் தண்டனைகள் கடுமையாக்கப்படவேண்டும். சரியான காரணம் இன்றித் தேர்வுப்பணிகளைத் தவிர்க்க முடியாதவாறும் விதிகள் உருவாக்கப்படவேண்டும்.

6.கேள்வி கேட்பது என்பது ஒரு கலை. இதை கி.மு. 5ஆம் நூற்றாண்டிலேயே சாக்ரடீஸ் உணர்த்தி இயிருக்கிறார். எல்லோருமே கேள்வி கேட்பதில் திறமைசாலிகள் என்று கொள்ளமுடியாது. அதற்கும் அடிக்கடி பயிற்சி வகுப்புகள் (Workshops) நடத்துவது விரும்பத்தக்கது.

X