கலவரத்தை கட்டுப்படுத்த புதுரக துப்பாக்கி!

1/22/2019 2:39:19 PM

கலவரத்தை கட்டுப்படுத்த புதுரக துப்பாக்கி!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

கண்டுபிடிப்பு

விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் எல்லாமே மனிதனின் வாழ்க்கை ேமம்படவே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அவ்விஞ்ஞானம் சில ேநரங்களில் வேண்டத்தகாத பல விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. அதற்கு விஞ்ஞானமும் கண்டுபிடிப்புகளும் பொறுப்பாகாது, மாறாக அதைத் தவறாகப் பிரயோகிப்போரே பொறுப்பாளர்கள். உயிர்களைக் கொல்வதற்காக விஞ்ஞானம் வளர்ச்சி அடையவில்லை, தொழிற்புரட்சி நடைபெறவில்லை. அந்தவகையில் சமீபத்தில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டை கருத்தில் கொண்டு உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தாத ஒரு துப்பாக்கியைக் கண்டுபிடித்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று ஒரு துப்பாக்கியைக் கண்டுபிடித்துள்ளார் கும்பகோணத்தைச் சேர்ந்த இளைஞர் சரவணன். எப்படி இதுபோன்ற எண்ணம் தோன்றியது என்பதை விவரித்துக் கூறினார்.  ‘‘தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் தாக்கத்தில்தான் இந்த ஆபத்தை விளைவிக்காத துப்பாக்கியை வடிவமைத்தேன். இதில், உருளைக் கிழங்கு, களிமண் உருண்டை ஆகியவற்றை பயன்படுத்தி சுடும்போது மிகுந்த சத்தத்துடன் கலவரக்காரர்களுக்கு காயத்துடன் மிகுந்த வலியை ஏற்படுத்தும். இதன்மூலம் உயிரிழப்பு நேராமல் கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

இதனைத் தயாரிக்க ரூ.15 ஆயிரம் செலவானது. இதனைக்கொண்டு அதிகப்பட்சம் 200 மீட்டர் தூரம் சுட முடியும். அதேநேரத்தில் 3 கிலோ மீட்டர் தூரம் வரை சுடும் அளவுக்குக்கூட மாற்றி வடிவமைக்க முடியும். நான் வடிவமைத்துள்ள இந்தத் துப்பாக்கி, ஆயுத வகையில் வருவதால், காவல்துறை மூலமாக இதனை அரசிடம் சமர்ப்பிக்க உள்ளேன்.எனக்கு சிறுவயதிலிருந்தே அறிவியல் துறையில் ஆர்வம் அதிகம். கும்பகோணத்தில்தான் எனது ஆரம்பக் கல்வியை படித்தேன். பின்னர், ஈரோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் டிப்ளமோ கோர்ஸான DECE படித்தேன். அப்போதே நிறைய புராஜெக்ட் ஒர்க்குகள் செய்ய ஆரம்பித்தேன். கல்லூரியில் இது சம்பந்தமாக பேப்பர் சமர்ப்பித்தேன். அந்த புராஜெக்ட்டுக்கு முதலிடம் கிடைத்தது. சோலார் எனர்ஜி மற்றும் விண்ட் எனர்ஜி என்ற கான்செப்ட்டில் ஒரு வீட்டிற்குத் தேவையான மின்சாரம் பெறுவதற்கான திட்ட அறிக்கையை அதில் தெரிவித்திருந்தேன். அதில் முதலிடமும் பரிசும் பெற்றேன்’’ என்று பெருமிதத்தோடு தெரிவித்தார்.

    ‘‘கல்லூரியில் நடக்கும் பிராக்டிக்கல் வகுப்புகளில் சக மாணவர்களுக்கு உதவுவதோடு, அறிவியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக ஆர்வமிருந்ததால் கற்றுத்தெரிந்ததை பிற மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்தும் வந்தேன். இந்தநிலையில், ரஷ்யாவில் உள்ள உக்ரைனில் நேஷனல் ஏரோஸ்பேஸ் யுனிவர்சிட்டியில் ஏவியேஷன் பல்கலைக்கழகத்தில் ஏவியானிக்ஸ் எஞ்சினியரிங் படிக்க சேர்ந்தேன். இந்தியாவில் இருந்தபோதே ஒரு யோசனை தோன்றியது, சாட்டிலைட் அனுப்பிக்கொண்டிருந்த வழிமுறைகள் குறித்து ஓர் ஐடியா கிடைத்தது. மிகப்பெரிய ஐடியாவை வைத்து ஒரு கான்செப்ட் தயார் செய்தேன். அந்த ஐடியாவை முழுமையாக இம்பிளிமென்ட் பண்ண வேண்டும், ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்பதால்தான் ஏவியானிக்ஸ் எஞ்சினியரிங்கைத் தேர்ந்தெடுத்து ரஷ்யா சென்றேன்.

ஒருசில நாடுகளை ஒப்பிடுகையில் நம் கல்வி முறையில் அறிவியல் துறை பின்தங்கியே உள்ளது. இதில் விழிப்புணர்வை கொண்டு வரவேண்டும், செயலாக்கக் கல்வித்துறை அதை செய்ய வேண்டும். மாணவர்களிடம் அறிவியலில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். அந்த மாதிரி ஓர் உந்துதல் ஏற்படுத்தினால்தான் மாணவர்கள் மனதில் ‘நாமும் ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும்’ என்ற எண்ணம் ஏற்படும்.இதை மனதில் கொண்டே பள்ளி கல்லூரிகளில் அறிவியல் செயலாக்க கல்வி என்ற தலைப்பில் ‘DREAM SCIENCE EDUCATION’ என்ற அறிவியல் நிகழ்ச்சிகள் நடத்திவருகிறோம் மற்றும் ‘DREAM INNOVATION’ அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றியும் சொல்லித் தருகிறோம். இதுதான் என் வாழ்க்கைப் பயணம். என்னுடைய கண்டுபிடிப்புகள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நம் நாட்டை அறிவியல் துறையில் முதலிடம் வரவைக்கவேண்டும். இதுவே என்னுடைய குறிக்கோள்’’ என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.

‘‘இதுவரையில் கிட்டத்தட்ட 30 கண்டுபிடிப்புகளை செய்திருக்கிறேன். இவற்றையெல்லாம் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும், சாத்தியப்பட வைக்கவேண்டும் என்றால், அதற்குத் தேவையான பணபலம் என்னிடம் இல்லை. அதுதான் பின்னடைவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு பயன்படும்படியான கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து செய்ய மத்திய அரசோ அல்லது மாநில அரசோ உதவும்பட்சத்தில், அறிவியல் துறையில் நிச்சயம் பல சாதனைகளைப் படைப்பேன்.

என்னுடைய கண்டுபிடிப்புகளில் சிலவற்றைச் சொல்ல வேண்டுமானால் DRONE AGRICULTURE, PERMENANT SPEED BRAKER VISIBILITY, HUMAN DRONE என்று சீனாவில் இஹாங் என்று ஒரு குட்டி விமானம் உள்ளது, இது தயாரிக்க சுமார் 150 கோடி ரூபாய் ஆகும். ஆனால், இதை நான் 20 லட்சம் ரூபாயில் செய்து முடிப்பேன். அதற்கு உண்டான வடிவம் நான் வைத்துள்ளேன். இந்த விமானத்தில் பறந்துவிட்டு நம் வீட்டு மாடியிலேயே அதை நிறுத்திக்கொள்ளலாம். வாகனங்களின் பெருக்கத்தால் இன்னும் சில ஆண்டுகளில் மக்கள் தனியாக வானில் பறந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகலாம் என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.

எனது வாழ்க்கை இந்தியாவுக்கே. இந்தியாவை தேடி வெளிநாட்டவர் வரவேண்டும். உலகளவில் இந்தியா முதலிடம் வரவேண்டும். அதற்காக விவேகத்துடனும் வேகத்துடனும் எனது வாழ்க்கைப் பயணம் இருக்கும். “DREAM - MAKE IT POSSIBLE “ இதுவே என் முழக்கம். ஒரு சயின்ஸ் லேப் அமைக்கவேண்டும் அதற்கு உதவி கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்’’ என்றார்.சரவணன் சிறு வயது முதலே அதிக ஆர்வத்தோடு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்ததால், அவரது தந்தை வங்கியில் கடன் வாங்கி தனது மகனை ரஷ்யாவில் படிக்க வைத்துள்ளார். வெளிநாட்டு வேலைகளைத் தேர்வு செய்யும் இளைஞர்களுக்கு மத்தியில் உள்நாட்டுக்காக கற்ற கல்வியைப் பயன்படுத்த வேண்டும் என்ற சரவணன் இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். அவருக்கு ஒரு ராயல் சல்யூட்!

  - தோ.திருத்துவராஜ்

X