பிளஸ்2 கணக்குப் பதிவியலில் முழு மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்

1/23/2019 3:44:26 PM

பிளஸ்2 கணக்குப் பதிவியலில் முழு மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்

நன்றி குங்குமம் கல்வி-வேலை வழிகாட்டி

‘‘ஒரு பாடத்தில் எளிமையாக 100/100 மதிப்பெண் பெறலாம் என்றால் அது கணக்குப் பதிவியல் பாடத்தை கூறலாம். கணக்கியலின் விதிகளை தெளிவாக நன்றாகப் புரிந்து படிப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றை சரியாக ஏடுகளில் எவ்வாறு பதிவது என்பதையும் தெரிந்துகொண்டு ஆர்வத்துடன் படித்தால் கட்டாயமாக +2 பொதுத்தேர்வில் 100/100-ம் உயர்கல்வியில் நல்ல மதிப்பெண் பெற்று நல்ல வேலை வாய்ப்பையும் பெற முடியும் என்பதை மனதில் கொண்டு படிக்க வேண்டும்’’ என்கிறார் விழுப்புரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை வணிகவியல் ஆசிரியர் வ.எழிலன். அதிக மதிப்பெண் பெற அவர் தரும் டிப்ஸ்ஸைப் பார்ப்போம்…    

தற்போது கணக்குப் பதிவியல் பாடத்தில் வினாக்கள் எளிமையாக கேட்கப்பட்டாலும் மாணவர்கள் அந்த வினாக்களைப் புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. அதற்குக் காரணம் மாணவர்கள் வினாக்களை ஒரு வழியில் மட்டுமே பார்ப்பதால்தான் இந்த சிரமம் ஏற்படுகிறது. மாணவர்கள் வினாக்களைப் படித்து பல வழிகளில் விடையளிப்பதற்குச் சிந்திக்க வேண்டும். எனவே, மாணவர்கள் சற்றே சிந்தித்து வினாக்களைப் புரிந்துகொண்டால் எளிமையாக விடையளிக்க முடியும்.

வினாக்களை ஒருமுறைக்கு பலமுறை படித்து என்ன கேட்கப்பட்டிருக்கிறது  என்பதை மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்றாற்போல் விடையளிக்க வேண்டும். இதற்கு பல மாதிரி வினாத் தாள்களைப் பயிற்சி செய்யவேண்டும். இதன்மூலமே வினாக்கள் எவ்வாறு Creative முறையில் கேட்கப்படுகின்றன என்பதை புரிந்துகொள்ள முடியும். கணக்குப் பதிவியல் பாடத்தை பொறுத்த வரையில் தொடர்ந்து பயிற்சி செய்துகொண்டேயிருத்தல் வேண்டும்.

அப்போதுதான் அவற்றை நாம் மனதில் இருத்திக்கொள்ள முடியும். அவ்வாறு இல்லையெனில் கணக்குகளின் வழிமுறைகள் மறந்துபோக வாய்ப்புண்டு. எனவே, தினமும் கணக்குப் பதிவியல் பாடத்தை பயிற்சி செய்துவந்தால் பொதுத்தேர்வில் 100/100 உறுதி. முழு மதிப்பெண் பெற மிகப்பெரிய சவாலாக இருப்பது ஒரு மதிப்பெண் வினாக்கள்தான். ஆனால், கணக்குப் பதிவியல் பாடத்தில் புத்தகத்தின் பின்னால் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் அனைத்துப் பாடங்களிலும் உள்ள கணக்குகளை தெளிவாக புரிந்துகொண்டால் இந்த ஒரு மதிப்பெண் பகுதிக்கு எளிமையாக விடையளிக்க முடியும்.

2, 3, 5 மதிப்பெண் வினாக்களை பொறுத்தவரையில் புத்தகத்தில் பாடத்தின் பின்னால் உள்ள வினாக்கள் முழுவதையும் பயிற்சி செய்து வந்தாலே அந்தப் பகுதிகளில் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க முடியும். கையெழுத்து தெளிவாகவும், அழகாகவும் இருக்க வேண்டும். எழுதுவதற்கு நீல மை பேனா ஒன்றை மட்டும் முழுத்தேர்வு எழுதுவதற்குப் பயன்படுத்த வேண்டும்.

பகுதி - 1

ஒரு மதிப்பெண் வினாக்கள் மொத்தம் 20 வினாக்கள் கேட்கப்படுகின்றன. 100/100 மதிப்பெண் பெற வேண்டும் என்று நினைத்து படிப்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவதே இந்த ஒரு மதிப்பெண் வினாக்கள்தான். இவை அனைத்தும் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுகின்ற அடிப்படையில் கேட்கப்படுகின்றன. இதில் பாடத்தின் பின்னால் உள்ள வினாக்களோடு பாடத்தின் உள்ளிருந்தும் வினாக்கள் கேட்கப்படுகின்றன. ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடையை மட்டும் எழுதாமல் விடைக்கான குறியீட்டையும் (அ, ஆ, இ, ஈ) கட்டாயம் எழுத வேண்டும். அப்போதுதான் மதிப்பெண் வழங்கப்படும். ஏதாவது ஒன்றை மட்டும் எழுதினால் மதிப்பெண் வழங்கப்படாது என்பதை கவனத்தில் வைக்க வேண்டும்.

பகுதி - 2

2 மதிப்பெண் வினாக்கள் 10 வினாக்கள் கேட்கப்படும். இவற்றில் ஏழு வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். இதில் 21-ம் எண் வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும். 2 மதிப்பெண் வினாக்களுக்கு 2 points எழுதினால் போதுமானது. இதில் பெரும்பாலும் பாடத்தின் பின்னால் உள்ள வினாக்களே கேட்கப்படுகின்றன. எனவே, புத்தகத்தின் பின்னால் உள்ள வினாக்களை முழுமையாக படித்தால் இந்தப் பகுதியில் முழு மதிப்பெண் பெற்றுவிட முடியும் (வினா எண்: 21-30)

பகுதி - 3

3 மதிப்பெண் வினாக்கள் 10 கேட்கப் படும். இவற்றில் ஏழு வினாக்களுக்கு மட்டும் விடையளித்தல் வேண்டும். இதில் 31-ம் எண் வினாவிற்கு கட்டாயம் விடையளிக்கவும். இந்தப் பிரிவிலும் பாடத்தின் பின்னால் உள்ள வினாக்களே கேட்கப்படுகின்றன. அவற்றை மட்டும் படித்தால் இந்தப் பிரிவிலும் முழு மதிப்பெண் பெற முடியும். (வினா எண்:31-40)

பகுதி - 4

5 மதிப்பெண் வினாக்கள் 7 கேட்கப்படும். இதில் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும். இவை அனைத்தும் ‘அல்லது’ என்ற அடிப்படையில் கேட்கப்படும். (வினா எண்: 41-47) சரியான முயற்சியும், தொடர் பயிற்சியும் இருந்தால் 100/100 உறுதி. முயற்சியும் பயிற்சியும் முழு மதிப்பெண்களைப் பெற்றுத் தர வாழ்த்துகள்!

X