தொழில் முனைவோர்களுக்கான கடன் திட்டங்கள்!

1/29/2019 4:56:06 PM

தொழில் முனைவோர்களுக்கான கடன் திட்டங்கள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

படித்துவிட்டு வேலை தேடுபவர்களுக்கும், சுயதொழில் செய்ய முயல்பவர்களுக்கும் தொழிலுக்கான திட்ட அறிக்கை,சந்தை வாய்ப்பு மற்றும் நிதி வழிகாட்டல்களை இப்பகுதியில் தொடர்ந்து வழங்கி வருகிறோம்.இதில் மத்திய, மாநில அரசின் மானியக் கடன் திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கிவருகிறோம்.இந்தச் சூழலில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சார்பில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 23 மற்றும் 24ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது.

இந்த முதலீட்டாளர் மாநாட்டில் தொழில்முனைவோர்களுக்கு கருத்துரைகள் மற்றும் வழிகாட்டல்கள் இடம்பெறவுள்ள நிலையில் தொழில்முனைவோர்களுக்கு வழங்கப்படும் மானியக் கடன் திட்டங்கள் உள்ளிட்ட பல தகவல்களைத் தொழில் வணிகத் துறையின் சென்னை மாவட்டத்திற்கான மண்டல இணை இயக்குநர் எஸ்.எம்.கியாஸ் விவரித்தார்.

அவர் தந்த விவரங்களில் சிலவற்றை கடந்த  இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இனி பார்ப்போம்… தொழில்வணிக ஆணையரகம் தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவித்துவருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மாவட்டத் தொழில் மையங்கள் தொழில் வணிக ஆணையரகத்தின் கண்காணிப்பில் இயங்கிவருகின்றன.

வருங்காலத்தொழில் முனைவோர்கள் தங்கள் தொழில் நிறுவனங்களை அமைப்பதற்கும் அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்டத் தொழில் மையங்கள் செய்து வருகின்றன. மாவட்டத் தொழில் மையங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களில் இன்னும் உள்ள சில திட்டங்கள் குறித்துப் பார்ப்போம்.

திட்டம் - V  ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு  ஊக்குவிக்கும் திட்டம்

திட்டத்தின் நோக்கம்: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஆற்றல் சேமிப்பிற்கான புதிய தொழில்நுட்பங்களைப்பற்றிய விழிப்புணர்வையும், அறிவுறுத்தலையும் உருவாக்குதல்.

ஆற்றல்தணிக்கைகளை மேற்கொண்டு ஆற்றல் திறனை அதிகரிக்கவும், எரிபொருள் மாற்றவும், மேலும் ஆற்றல்தணிக்கை அறிக்கையின் பரிந்துரைகளை செயல்படுத்தி அவற்றை கண்காணித்தல்.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்

* ஆற்றல் தணிக்கைக்கு ஆகும் செலவில் 50 விழுக்காடு, ரூ.75,000-க்கு மிகாமல் மானியமாக வழங்குதல்.
*  ஆற்றல் தணிக்கையை நடைமுறைப்படுத்த தேவைப்படும் இயந்திரங்கள் மற்றும் கூறுகளின் மதிப்பில் (Components) 25 விழுக்காடு, அதிகபட்சம் ரூ.2 லட்சம் மானியமாக வழங்குதல்.

திட்டம்- VI

அம்மா திறன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புத் திட்டம்

அம்மா திறன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புத் திட்டமானது, வேலையில்லாத இளைஞர்களுக்கு அவர்களின்திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதற்கு தேவையான பயிற்சியினை அளிக்கும்வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்,

* குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களால்இந்தப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அந்நிறுவனங்கள் மாதம்ரூ.5000 வீதம் உதவித்தொகையாக 6 மாதங்களுக்கு வழங்கப்படும். அதில் ஒரு பயிற்சியாளருக்கு மாதம் ரூ.2000 வீதம் தமிழ்நாடு அரசால் அந்நிறுவனங்களுக்கு பயிற்சியின் முடிவில் மானியமாக திரும்ப அளிக்கப்படும். பயிற்சி அளிக்கப் பட்டவர்களுக்குத் தமிழ்நாடு திறன்மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனம் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்படும் (TNSDC).

திட்டம் - VII

குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான ஒற்றைச் சாளரத் தகவு தமிழ்நாடுஅரசு தொழில் தொடங்க முன்வரும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்களுக்கு அனைத்து விதமான வசதிகளும் ஆதரவும் அளித்து வருகிறது.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்    

தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்க தேவையான பல்வேறு வகையான உரிமங்கள் மற்றும் அனுமதிகளை ஒற்றைச் சாளர தகவின் மூலம் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

* உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில்முனைவோர்களுக்குஉகந்த மற்றும் முதலீட்டாளர்களுக்கு இயைந்த சூழலை உருவாக்குவதில் மாநிலத்திற்கு உள்ள விருப்பத்தினை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசானது, 11 துறைகளின் மூலம் வழங்கப்பட வேண்டிய உரிமங்கள் மற்றும் அனுமதிகளைக் குறித்த காலத்திற்குள் வெளிப்படையான வகையில் இணையதளம் வழியாக  முதலீட்டாளர்களுக்கு பெற்று வழங்கிட இணையதள ஒற்றைச் சாளர தகவினை உருவாக்கியுள்ளது.

* குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்களை https://www.easybusiness.tn.gov.in/msme என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு வணிக எளிதாக்கும் சட்டம் 2018

* தொழில் நிறுவனங்கள் பெற வேண்டிய உரிமங்கள்/அனுமதிகள் தொழில் தொடங்கும் முன்பும்/நடக்கும்போதும்புதுப்பித்தல்கள் உட்பட அனைத்து விண்ணப்பங்களும் ஒற்றைச் சாளர முறையில் பெறப்பட்டு பரிசீலிக்கப்படுவதையும், திறன்மிக்க குறை தீர்ப்பு அமைப்பை உருவாக்குவதையும் உரிய முறையில் செயல்பட தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபராதம் விதிப்பதையும் இச்சட்டம்உறுதி செய்கிறது.

இச்சட்டத்தின்கீழ்பல்வேறு துறைகள் சார்ந்த உரிமங்கள்/அனுமதிகள், புதுப்பித்தல்கள் மற்றும் மானியங்கள் உள்ளிட்ட 54 வகையான இனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஒற்றைச் சாளர அமைப்பினை நிர்வகிக்கமாவட்ட தொழில் மையங்கள், தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம் முறையே குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் பெருந்தொழில் நிறு வனங்களுக்கு உரிய அமைப்புகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் வசதியாக்கக் குழுக்கள்

*  குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் தாம் விற்பனை செய்த பொருட்களுக்கு பெருந்தொழில் நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டிய நிலுவைத் தொகையினை விரைந்து பெற்றுத் தருவது. குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுச் சட்டம் 2006-ன் முக்கிய குறிக்கோள் ஆகும். அதன்படி குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் வசதிக்காக குழுக்களை சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நான்கு மண்டலங்களில் அரசு அமைத்துள்ளது.விண்ணப்பதாரர்கள்http:/samadhaan.msme.gov.in. என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

தொகுப்பு: திருவரசு

X