வேஸ்ட் பேப்பரில் அலங்காரப் பொருட்கள் செய்யலாம்

1/29/2019 4:57:33 PM

வேஸ்ட் பேப்பரில் அலங்காரப் பொருட்கள் செய்யலாம்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

சுற்றுச்சூழலை மாசுப்படுத்துவதோடு உயிர்க்கொல்லியாக மாறி வரும் பிளாஸ்டிக் பொருட்களைப் பட்டியலிட்டு தமிழக அரசு கட்டாயமாக தடை விதித்துள்ளது. பெரும்பாலானவர்களால் இது வரவேற்புக்குரியதாகவே பார்க்கப்படுகிறது. நாமும் தொடர்ந்து இயற்கை சார்ந்த உற்பத்திப் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நம் எதிர்காலச் சந்ததிகளின் ஆரோக்கியத்துக்கு ஆதாரமாக அமையும்.

அந்த வகையில், நாம் படித்துமுடித்த நியூஸ் பேப்பர் மற்றும் வேஸ்ட் பேப்பர்களைக்கொண்டு பல்வேறு உபயோகமான பொருட்களை செய்யலாம், அதைக்கொண்டு வீட்டிலிருந்தபடியே நல்லதொரு வருமானத்தையும் பார்க்கலாம் என்கிறார் சென்னை ராமாபுரத்தில் கைவினைப் பொருட்கள் பயிற்சி அளித்துவரும் மீனலோச்சனி.

‘‘நான் பி.காம்., டிப்ளமோ இன் ஃபேஷன் டிசைனிங் ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட ஆசிரியர் பயிற்சியை முடித்திருக்கிறேன். கல்லூரியில் ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். பி.காம் படித்துவிட்டு குறு - சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி நிலையத்தில் (எம்.எஸ்.எம்.இ-டிஐ) பயிற்சிக்காகச் சென்றேன்.

அங்கு எனக்கு Waste Craft, ஒவியம் மற்றும் வண்ணம் தீட்டுதல் போன்றவற்றில் அதிக ஆர்வம் இருந்ததால் வேறு துறையில் சேர விருப்பம் இல்லை. படித்து முடித்ததும் விருப்பப்பட்ட துறையில் சேர வாய்ப்பு தேடி அலைந்தேன். வேலை கிடைக்கவில்லை. அதனால் வீட்டில் இருந்தபடியே சுயமாக கைவினைப்பொருட்கள் தயாரிப்பு தொழிலைத் தொடங்கினேன்’’ என்று தன்னம்பிக்கையோடு பேசிய மீனலோச்சனி தனது அடுத்தகட்ட முன்னேற்றத்தை முன்வைத்தார்.

‘‘வீட்டில் இருந்தபடியே முதலில் துணிகள் தைக்க ஆரம்பித்தேன். சில மாதங்களில் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை கிடைத்தது. இதனையடுத்து மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதோடு, சுயதொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு வீட்டிலும் கைவினைப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி அளித்துவருகிறேன்.

தொடக்கத்தில் பழைய தாள்களைக்கொண்டு அலங்காரப் பொருட்களை மட்டுமே செய்துவந்தேன். இன்றைக்கு அது சார்ந்த பல பொருட்களை தயாரித்து வருகிறேன். அவற்றில் உதாரணத்துக்கு ஒரு பொருள் தயாரிப்பு பற்றி மட்டும் நான் கூறுகிறேன்.

பொதுவாக பென்சிலைக் கொண்டு பேப்பரில் எழுதலாம். ஆனால், பேப்பரைக் கொண்டு பென்சில் தயாரிக்க முடியுமா என்றால், முடியும் என்பதுதான் உண்மை. அதனால்தான் நான் இன்றைக்கு பேப்பர் பென்சில் தயாரித்து வருகிறேன். பேப்பர் பென்சில் செய்வதற்கு இன்றைக்கு மெஷின்கள் கூட வந்துவிட்டன. ஆனால், கைகளாலும் பேப்பர் பென்சிலை உருவாக்க முடியும்.

பேப்பர் பென்சில் செய்வது குறித்துப் பார்ப்போம். பென்சிலின் நடுப்பகுதியில் உள்ள எழுதுபொருளான கிராபைட் குச்சிகள் மீது பழைய காகிதத்தைக் கெட்டியாகச் சுருட்ட வேண்டும். (இந்த கிராபைட் (கார்பன்) எளிதில் உடையும் தன்மை கொண்டதால் கவனமாகக் கையாள வேண்டும்) நான்கைந்து சுற்றுகளில் பேப்பரின் துணையுடன் நேர்த்தியாகிவிடும்.

அதன்பின்னர் சுருட்டப்படும் பேப்பரில் நேர்த்தியாக பசையை ஒட்டி பென்சிலைத் தயாரித்துவிடலாம். இதனை ரேசர் கொண்டு சீவி உபயோகப்படுத்தலாம். இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், பேப்பர் பென்சிலின் அடிப்பாகத்தில் ஏதாவது ஒரு மரத்தின் விதையை வைத்து அதை ஒரு குப்பியால் மூடிவிட வேண்டும்.

பென்சிலை உபயோகித்துவிட்டு தூக்கி எறியும்போது, அது விழுந்த இடத்தில் ஒரு செடியாக முளைக்கும். பேப்பர் தயாரிப்புக்காக வெட்டப்பட்ட மரம் அங்கே தன்னை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளும். இந்த பேப்பர் பென்சில்களால் காடுகள் அழித்தொழிக்கப்படுவது ஓரளவு தடுக்கப்படும்.

இதேபோன்றுதான் பென்சில் பேனாவும் தயாரிக்கப்படுகிறது’’ என்கிறார்.  ‘‘தயாரித்த பென்சில் மற்றும் பொருட்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது என்பது ஒரு பெரிய சவாலான விஷயம். ஏனெனில், எப்போதுமே நம் மக்கள் கவர்ச்சியையும், கண்மூடித்தனமாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பொருட்களை வாங்கிவிடுவார்கள். ஆனால், நல்ல விஷயங்களைக் கொண்டுபோய் சேர்ப்பது கூடுதல் சிரமம் எடுக்கவேண்டியிருக்கும்.

முதலில் ஒரு சில பள்ளி, கல்லூரிகளுக்கு இதை கொண்டு சென்றபோது வித்தியாசமாகப் பார்த்தார்கள். நம்முடைய தமிழ் தினசரி செய்தித்தாள்களே இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பார்த்ததும்தான் இதை நாங்கள்தான் தயாரித்தோம் என்பதை நம்பினார்கள்.இந்த பென்சில் மற்றும் பொருட்களால் என்னென்ன நன்மைகள் என்று விளக்கிச் சொன்னோம்.

புரிந்துகொண்டார்கள். இன்றைக்கு பல இடங்களுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறோம். பயிற்சிப் பெற்றவர்கள் சுயமாகத் தொழில் தொடங்கி அந்தந்தப் பகுதிகளில் செய்து வருகிறார்கள்!. இன்றைக்கு மாநகராட்சி மற்றும் கண்காட்சிகளில் இந்த பேனா காட்சிப்படுத்தப்பட்டுவருகிறது.

கல்லூரி, பள்ளி மாணவர்களிடையே வரவேற்பைப் பெற்றுவருகிறது’’ என்று உற்சாகமாக சொல்லும் மீனசலோச்சனி “ஒரு வகையில் இது பழைய பேப்பர்கள் குப்பையாக மாறி பெரிய தலைவலி ஆவதைக் குறைக்கிறது; இன்னொரு வகையில் புதிய பென்சில்கள் உற்பத்தி செய்யப்படுவதற்கு மரம் வெட்டப்படுவதைத் தடுக்கின்றது. இக்கைவினைப் பொருட்களை விற்பனை செய்ய அரசுக் கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் கண்காட்சி நடத்தி ஆர்டர் பெறலாம். பெண்கள் வீட்டில் இருந்தபடியே இந்தத் தொழிலை செய்யலாம்.

பயிற்சி வகுப்புகளும் எடுக்கலாம். இத்தொழிலுக்கு எதிர்காலத்தில் நல்ல வரவேற்பு இருக்கும். இப்பொருட்களை விற்பனை செய்வது எளிது. நிரந்தரமான வருமானம் கிடைக்கும் இத்தொழிலை தொடங்க ஆர்வம் இருந்தால் போதும். ஒரு வாரத்தில் கற்றுக்கொள்ளலாம்’’ என்றவர் செலவினங்கள் பற்றியும் கூறினார்.

‘‘தயாரிக்கவும் சேமித்துவைக்கவும் விற்பனை செய்யவும் தோராயமாக 10க்கு 10 அடி என்ற அளவில் ஒரு அறை போதும். தேவைப்படும் பொருட்கள் என்று பார்த்தால், டேபிள் (Table) ரூ.750 முதல் ரூ.1000, சேர் (chair) - ரூ.250, ஃபெவிக்கால் (fevicol) - ரூ.630, நியூஸ் பேப்பர் (Newsapaer) - ரூ.10, சிசர்ஸ் (Scissors) - ரூ.20, கட்டர் (Cuter) - ரூ.25, ஸ்கேல் (Scale) - ரூ.10, பென்சில் (Pencil) - ரூ.5, பெயின்ட் (Paint) - ரூ.250 உள்ளிட்டவை ஆகும். இந்தப் பொருட்களை சுமார் 3,000 ரூபாயில் வாங்கிக்கொள்ளலாம். வீட்டில் ஏற்கனவே டேபிள், சேர், கத்திரிக்கோல் ஆகியவை இருந்தால் 1000 ரூபாய் மிச்சமாகும், 2,000 ரூபாய் போதுமானது.

பழைய வேஸ்ட் பேப்பர்களைக்கொண்டு 250 வகையான பொருட்களை உற்பத்தி செய்யலாம் ஒரு நபர் ஒரு நாளைக்கு 60 பென் (Pen), 60 பென்சில் (Pencil), ஒரு டேபிள் (Table, 10 X15 inch), 30 மணி பர்ஸ் (purse), 20 ஜுவல் பாக்ஸ் (jewel box), 30 மொபைல் பவுச் (Mobile pouch) இதில் ஏதாவது ஒரு வகையைத் தேர்ந்தெடுத்து தயாரிக்க ஒரு நாளைக்கு உற்பத்திச் செலவாக ரூ.500 தேவைப்படும்.

25 வேலைநாட்களில் ரூ.12,500 மற்றும் இதர செலவுகள் ரூ.2000 என ஒரு மாதத்திற்கு 14,500 தேவைப்படும்’’ என்றவர் உற்பத்தி செய்த பொருட்கள் மூலம் வரக்கூடிய வருமானம் குறித்தும் தெரிவித்தார். ‘‘ஒரு மாதம் 14,500 ரூபாய் செலவில் தயாரான பொருட்களை சில்லறையாகவும், மொத்தமாகவும் 75 சதவிகித லாபத்தில் விற்பனை செய்தால், அதன் மூலம் ரூ.24.500 வருமானம் கிடைக்கும். விற்பனையிலிருந்து செலவினத்தைக் கழித்துப் பார்த்தால் மாதம் 10,000 ரூபாய் லாபம் கிடைக்கும்’’ என்கிறார் மீனலோச்சனி.

 - தோ.திருத்துவராஜ்

X