10ம் வகுப்பு சமூக அறிவியலில் சென்டம் பெற சூப்பர் டிப்ஸ்!

2/28/2019 5:11:05 PM

10ம் வகுப்பு சமூக அறிவியலில் சென்டம் பெற சூப்பர் டிப்ஸ்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களே... சமூக அறிவியல் பாடத்தை முழுமையாகப் படித்திருப்பீர்கள். இனி நீங்கள் எந்தப் பகுதியை திருப்புதல் செய்து சமூக அறிவியலில் 100 மதிப்பெண் பெறுவது எப்படி என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். வெற்றி பெற வேண்டுமானால் திட்டமிடல் அவசியம் என்பதை மறந்துவிடாதீர்கள். இனி தேர்வை எதிர்கொள்வதற்கான திட்டமிடலைப் பார்ப்போம்...

பகுதி Iல் ஒரு மதிப்பெண் வினாக்களில் சரியான விடை 14, பொருத்துக 10 என மொத்தம் 24 வினாக்கள். இவற்றுள் 20 புத்தக உள்வினாக்களாக கேட்கப்படலாம். பாடப்புத்தகத்தில் உள்ள எழுத்துக்களாகவும், பெட்டிச் செய்திகளிலிருந்தும் உள்வினாக்கள் வரலாம். இவற்றுள் இடம், நபர், ஆண்டு போன்ற முக்கிய குறிப்புகளை அடிக்கோடிட்டு படித்தால் முழு மதிப்பெண் பெறலாம். பகுதிIIல் இரு மதிப்பெண் வினாக்கள் 20 கேட்கப்படும். அவற்றுள் வரலாறு புவியியலில் தலா 8 கேள்விகள் கேட்கப்படும். இதில் தலா 4 கேள்விகள் எழுதினால் போதுமானது. இதேபோல குடிமையியல்  பொருளியலில் தலா 2 கேள்விகள் வரும். இங்கு தலா ஒரு கேள்வி எழுத வேண்டும். 2 மதிப்பெண் கேள்விகளைப் பொறுத்தவரை குறைவான வார்த்தைகள் கொண்ட பதில்களை எழுதும் கேள்விகளாக முடிவு செய்து எழுதும்போது நேரம் கிடைக்கும்.

முந்தைய அரசு பொதுத்தேர்வு வினாத்தாள்களைக் கொண்டு பயிற்சி செய்தால் 20 மதிப்பெண்களைச் சுலபமாகப் பெறமுடியும். பகுதி  IIIல் நான்கு மதிப்பெண் வினாக்கள் 4 கேட்கப்பட்டு 2க்கு விடை எழுத வேண்டும். 1,2,3,4,5,9,10,11,12,12 ஆகிய பாடங்களை கவனமாக படித்து தயாரானால் முழுமையான 8 மதிப்பெண் பெறமுடியும். பகுதி IVல் புவியியலிலிருந்து எட்டு வேறுபடுத்துக வினாக்கள் வரும். நாம் எழுத வேண்டியது 4. 1,2,6,7 ஆகிய பாடங்களை படித்து வினாவிடைகளை எழுதிப் பார்த்து தயாரானால் முழுமையாக 8 மதிப்பெண்களைப் பெறமுடியும். பகுதிVல் பாடத்தின் நான்கு பிரிவுகளிலிருந்து 12 கேள்விகள் கேட்கப்படும் அவை பிரிவு வாரியாக தலா 3 வினாக்கள் வரும். திட்டமிட்டு படித்தால் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு கேள்வியை எழுதிவிடலாம். மொத்தமாக 40 மதிப்பெண்களைப் பெறலாம்.

வரலாறு பிரிவை பொறுத்தவரை காரணங்கள், விளைவுகள், சாதனைகள் போன்ற வினாக்களைப் படித்து பயிற்சி செய்தாலே நாம் எழுத வேண்டிய ஒரு கேள்விக்கான விடையை எழுதிவிடலாம். புவியியல் பாடத்தை பொறுத்தவரை இமயமலை உருவான விதம், முக்கியத்துவம், மழைநீர்  மேலாண்மை, இந்திய வேளாண்மை சவால்கள், மும்பை பருத்தி விளைய சாதகம், காடுகளின் முக்கியத்துவம் போன்றவற்றை படித்துக்கொள்ள வேண்டும். குடிமையியல் பொறுத்தவரை முதல் இரு பாடம், பொருளியல் முதல் பாடம் என படித்து எழுதி பயிற்சி செய்தால் முழுமையான மதிப்பெண் பெறலாம். காலக்கோடு பொறுத்தவரை இந்திய விடுதலை வரலாற்று நிகழ்வாக 1905 முதல் 1950 வரை 25 நிகழ்வுகளை முழுமையாக அறிந்திருப்பது அவசியம்.

அவை: 1905  வங்கப் பிரிவினை, 1907  சூரத் பிளவு, 1911  வங்கப் பிரிவினை நீக்கம், 1914  முதல் உலகப் போர் தொடக்கம், 1918  முதல் உலகப் போர் முடிவு, 1919  ரௌலட் சட்டம், 1920  ஒத்துழையாமை இயக்கம், 1922  சௌரி சௌரா சம்பவம், 1927  சைமன் குழு அமைத்தல், 1928  சைமன் குழு வருகை, 1930  உப்புச் சத்தியாக்கிரகம், 1930 முதல் வட்ட மேஜை மாநாடு, 1931  இரண்டாம் வட்ட மேஜை மாநாடு, 1932  இரண்டாம் வட்டமேஜை மாநாடு, 1935  இந்திய அரசுச் சட்டம், 1939  இரண்டாம் உலகப் போர் ஆரம்பம், 1940  ஆகஸ்ட் நன்கொடை, 1942  வெள்ளையனே வெளியேறு இயக்கம், 1945  இரண்டாம் உலகப் போர் முடிவு, 1945  ஐ.நா. சபை துவக்கம், 1947  இந்திய சுதந்திரதினம், 1948  காந்தியடிகள் படுகொலை, 1950  இந்தியக் குடியரசு தினம்.

வரைபடங்கள் பொறுத்தவரை வரலாறு பகுதியில் 5 மதிப்பெண்கள். இவை ஆசியா  இந்திய புரட்சி மையங்கள் என்ற தலைப்பில் வரும். ஆசிய வரைபடம் பொறுத்தவரை துருக்கி, அரேபியா, பர்மா, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் தீவுகள், ஹாங்காங், காண்டன், கௌலூன், பார்மோசா, சீனா, ஹங்காய், நான்கிங், பீகிங், கொரியா, மஞ்சூரியா, ஜப்பான், சாகலின் தீவு, பசிபிக் பெருங்கடல். இந்திய வரைபடம் பொறுத்தவரை டெல்லி, மீரட், பரேய்லி, லக்னோகான்பூர், ஜான்சி, குவாலியர்பாரக்பூர்அலகாபாத், ஆராஹைதராபாத், வேலூர் போன்றவை முக்கியமானவை. புவியியல் இந்திய வரைபடம் பொறுத்தவரை 15 கேட்கப்பட்டு அவற்றுள் 10 குறிக்க வேண்டும்.

இவை முறையே கீழ்க்கண்ட தலைப்பாக வரும். மலைகள், சிகரங்கள், சமவெளிகள், பீடபூமிகள், கடற்கரைகள், காடுகள், தீவுகள், விளைச்சல், மண்வகைகள், பருவக்காற்று, மழை வீசும் பகுதிகள், அதிக மழை  குறைவான மழை, வளைகுடாக்கள், ஏரிகள் போன்ற தலைப்பில் ஒன்று வரலாம். பிற இடங்கள் என பார்க்கும்போது  ரான் ஆஃப் கட்ச், பாக் ஜலசந்தி, கங்கை நதி முகத்துவாரம், கட், கத்தியவார் தீபகற்பம், துறைமுகங்களான கண்ட்லா  மர்ம கோவா மங்களூர், கொச்சி  விசாகப்பட்டினம் பாரதீப் போன்ற இடங்களைக் குறிக்கவும், நிழலிட்டுக் காண்பிக்கவும் பழகிக்கொள்ள வேண்டும். அதேபோல சாலைப் போக்குவரத்து வழிகள்  ரயில் வழி  விமான வழிகள் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இங்கு அதனை குறிக்கும்போது முதல் இடம், இடை இடம், முடிவு இடம், மூன்றையும் குறிக்க வேண்டும். அதில் தவறு ஏற்பட்டால் மதிப்பெண் கிடைக்காமல் போகலாம். செண்டம் வாங்க வேண்டும் என்று நினைக்கும் மாணவர்கள் வினாத்தாள் வரிசை மாற்றாமல், அடித்தல், திருத்தல் இல்லாமல், விடைத்தாளை மேம்படுத்தி எழுதும்போது 100% வெற்றி பெறுவது நிச்சயம். வாழ்த்துகள் மாணவர்களே!

பே.சீனிவாசன்

X