எஞ்சினியரிங் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும்!

3/21/2019 5:13:41 PM

எஞ்சினியரிங் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?

பொறியியல் கல்வியில் ஆர்வம் தற்போது சற்றுக் குறைந்திருந்தாலும், தொழிற்கல்வித் துறைகளில் அதன் மதிப்பு உயர்ந்தே உள்ளது. ‘மருத்துவரின் ஆர்வம் ஆறடி மனித உடலில் அடங்கிவிடுகிறது; பொறியியலாளருக்கோ உலகம் முழுவதும் மட்டுமின்றி, அதை அடுத்த அண்ட வெளியுமே ஆய்வுக்களம்தான்’ என்பார்கள்.

மருத்துவப் படிப்புக்கும் பொறியியல் கல்விக்கும் உள்ள முக்கிய வேறுபாடுகளில் மற்றொன்று, MBBS-ல் படிப்புப் பிரிவுகள் (Branches) இல்லை; BE/B.Tech படிப்புகளில் நாற்பதுக்கும் அதிகமான படிப்புப் பிரிவுகள் உண்டு. ஒரே படிப்புப் பிரிவிலும், தன்னாட்சி (Autonomous) கல்லூரிகளில் வழங்கப்படுவதற்குத் தனிப் பாடத்திட்டம் இருக்கும் என்பதால் அதைத் தனியாகக் கணக்கிடவேண்டும்.

இதைத் தவிர, ‘SS’ (Self Supporting) என்றும், ‘மதிப்பளிக்கப்பட்டது’ (Accredited) என்றும், ‘Sandwich’ என்றும் உள்பகுப்புகளும் உண்டு. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும், அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகளில் இல்லாத, பிரிவுகளும் உண்டு. இக்காரணங்களால் பொறியியலில் எந்தப் படிப்புப் பிரிவைத் தேர்ந்தெடுப்பது என்பது பலருக்கும் எழக்கூடிய ஒரு முக்கியமான கேள்வி.

சில குறிப்பிட்ட பொறியியல் துறைகளில் சில மாணவர்களுக்கு இளமையிலிருந்து நாட்டம் (Aptitude) ஏற்பட்டிருக்கும். அது வெறும் கவர்ச்சியாலும்,(‘ஏரோநாட்டிகல் படித்தால் விமானி ஆகலாம்’ என்பது போன்ற) தவறான தகவலாலும் அல்ல என்று உறுதிபடுத்திக்கொண்டு, அதன்அடிப்படையில் பிரிவுகளைத் தேர்ந்தெடுக்கலாம். அடுத்து, அப்படித் தேர்ந்தெடுத்த பிரிவுகளில் தமக்கு எட்டாக்கனியாக இருப்பவற்றை நீக்கிவிட வேண்டும்.

(‘+2 தேர்வில் 50% சராசரி மதிப்பெண் பெறாதவர்கள் ஆர்கிடெக்சர் சேர முடியாது’; ‘மரைன் எஞ்சினியரிங் சேரக் கட்டணம் அதிகம்’ போன்றவை). மீதமுள்ளவற்றில், வேலைவாய்ப்பு, ஊதியம், முன்னேற்ற வாய்ப்பு ஆகியவற்றில் திருப்தியளிப்பனவற்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
பல மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மேற்சொன்னவற்றில் முதல்கட்டத் தேர்வே எளிதாக இருக்காது. உள்ள பல வகையான பாடப் பிரிவுகளை ஒரே நேரத்தில் எடுத்துக்கொண்டு அலசுவதால் குழப்பம்தான் மிஞ்சும். மாறாக, அத்தனை பாடப் பிரிவுகளையும் பின்வரும் ஏழு பாடத் துறைகளில்/தொகுப்புகளில் அடக்கலாம் என்பது கவனிக்கப்பட வேண்டியது.

ஆங்கில அகர வரிசையில்
அத்துறைகள்/தொகுப்புகள்
1.உயிரித் தொழில்நுட்பம்
(Bio-technology)
2. வேதிப்பொறியியல்/தொழில்நுட்பவியல் (Chemical Engineering / Technology)
3. குடிமைப் பொறியியல் (Civil Engineering)
4. கணினிப் பொறியியல் (Computer Engineering)
5. மின் மற்றும் மின்னணுப் பொறியியல் (Electrical and Electronics Engineering)
6. மின்னணு மற்றும் தொடர்புப் பொறியியல் (Electronics and Communication Engineering)
7. எந்திரப் பொறியியல் (Mechanical Engineering)

குழப்பத்தைத் தவிர்க்க, முதலில் இந்த ஏழு துறைகளில் தமக்கு நாட்டமுள்ள ஓரிரு துறைகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அத்துறை/துறைகளுக்குள்ளேயே கவனம்செலுத்திப் பாடப் பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பதும் வரிசைப்படுத்தி முயற்சி செய்வதும் எளிதாக இருக்கும்.
இனி, இத்துறைகளில் ஒவ்வொன்றிலும் அடங்கும் பாடப் பிரிவுகளைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

1.உயிரித் தொழில்நுட்பம்: உயிரியலில் அதிக நாட்டமும், அதேநேரத்தில் பொறியியலில் ஆர்வமும் கொண்டவர்களுக்கு இப்பிரிவுகள் ஏற்றவை. தாவர, விலங்கு செல்களையும் நுண்ணுயிரிகளையும் மனிதர் நலத்திற்குப் பயன்படுத்தும் பயோடெக்னாலஜி, உயிரியலும் வேதிப் பொறியியலும் இணைந்தது. வேளாண்மை, உணவியல், மருத்துவம், மருந்தியல் உள்ளிட்ட பல துறைகளின் அடிப்படையில் இயங்குவது. பயோகெமிஸ்ட்ரி, செல்திசு வளர்ப்பு முதலிய துறைகளைப் பயன்படுத்தும் அறிவியல் என இதை The European Federation of Bio-technology வரையறை செய்கிறது. கிண்டி பொறியியல் கல்லூரி உள்ளிட்ட சில கல்லூரிகளில் Industrial Bio-technology என்ற பாடப்பிரிவு வழங்கப்படுகிறது.

மருந்தியல், உணவியல், வேதியியல், பிளாஸ்டிக்ஸ், பாலிமர்ஸ், வாசனைத் திரவியங்கள், அழகுசாதனத் தொழிற்சாலைகள் முதலியவற்றில் இத்துறை வல்லுநர்களுக்குப் பணி வாய்ப்புகள் அதிகம். தவிர எம்.டெக்., பிஎச்.டி. படிப்புகளுக்கு உள்நாட்டிலும் உதவித்தொகையுடன் வெளிநாட்டிலும் வாய்ப்புகள் மிகுதி.

பயோமெடிக்கல் பொறியாளர்கள், மருந்துகளின் தரத்தை உயர்த்துவதிலும், சக்கர நாற்காலி உள்ளிட்ட, விபத்து, பிணி, மூப்பு ஆகியவற்றின் தாக்கத்தைத் தணிக்கும் கருவிகளைக் கண்டும் கையாண்டும் மனித வாழ்க்கையைச் செழுமைப்படுத்த உதவுகிறார்கள். பயோ-இன்ஃபர்மேடிக்ஸ் பிரிவு, கணினி அறிவியல், புள்ளியியல் உள்ளிட்ட கணிதம், பொறியியல் ஆகியவற்றைப் பயன்படுத்தி உயிரியல் தகவல்களைப் புரியவைக்கிறது. பயோமெடிக்கல் இன்ஸ்ட்ருமென்டேஷன் பாடப்பிரிவில் நோயாளிகளின் உடல்நிலை குறித்த தகவல்களை அளந்து பெறவும் சீர்படுத்தவும் உதவும் மின், மின்னணுக் கருவிகளைப் பேணுதல், இயக்குதல், வடிவமைத்தல் முதலிய பணிகள் அடங்கும். பயோமெடிக்கல் ஃபீல்டு பயன்பாட்டுப் பொறியாளர், எக்யுப்மென்ட் சப்போர்ட் ஸ்பெஷலிஸ்ட், இமேஜிங் பொறியாளர், மெடிக்கல் கோடர் ஆகிய பணிகளில் இவர்களுக்கு மிகுந்த வாய்ப்பு உண்டு.

2. வேதிப்பொறியியல்/தொழில்நுட்பவியல் என்பதை அடிப்படையாக (core subject) கொண்ட பிற பாடப் பிரிவுகள்: பாலிமர் பொறியியல், பிளாஸ்டிக்/ரப்பர் தொழில்நுட்பவியல், வேதியியல் மற்றும் மின்வேதிப் பொறியியல், பெட்ரோலியப் பொறியியல், பெட்ரோகெமிக்கல் பொறியியல், செராமிக் பொறியியல், டெக்ஸ்டைல் தொழில்நுட்பவியல், டெக்ஸ்டைல் ஃபேஷன் தொழில்நுட்பவியல், டெக்ஸ்டைல் வேதியியல், கார்பெட் மற்றும் டெக்ஸ்டைல் தொழில்நுட்பவியல், மெட்டலர்ஜிக்கல் பொறியியல், மெட்டலர்ஜி மற்றும் மெட்டீரியல்ஸ் பொறியியல், மரக்கூழ் மற்றும் காகிதத்தொழில் நுட்பம், பயோகெமிக்கல் பொறியியல், மருத்துவத் தொழில்நுட்பவியல், உணவுத் தொழில்நுட்பம், தோல் தொழில்நுட்பம் ஆகியவை.

தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் பிறந்த வேங்கடராமன் ராமகிருஷ்ணன் 2009ல் நோபல்பரிசு பெற்றது வேதியியலில்தான் என்பது கவனிக்கத்தக்கது. வேதிப்
பொறியாளர்களுக்கு ஆராய்ச்சி, கிரிஸ்டலாகிராஃபி, சாயங்கள், தொழிற்கூட/ஆய்வுக்கூட மேலாண்மை, வேதிய மனிதநலம், தர உறுதி, டாக்சிகாலஜி, தகவல் பரிமாற்றம், ப்ராசஸ் கெமிஸ்ட்ரி ஆகிய துறைகளில் பணிகள் காத்திருக்கின்றன.

பாலிமர்கள் சமையல் பாத்திரங்கள் முதல் விண்வெளி ஓடங்கள், தானூர்திகள், மின்தளவாடங்கள் எனப் பலவற்றில் பயன்படுவது. பாலிமர் படிப்பு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல வேலை வாய்ப்பைத் தரவல்லது. வேதியியல் மற்றும் மின்வேதிப் பொறியியலில் வேதிப்பொருட்களின் தொகுப்பு, உலோகங்களைத் தூய்மைப்படுத்துதல், எரிசெல்கள், உணர்பொறிகள், மின்படிவு, துரு முதலிய மின்வேதி வினைகளின் தொழில்நுட்பப் பயன்பாடுகள் முதலியவை கற்பிக்கப்படும்.

இப்படிப்பை முடித்தவர்கள், உயிரி-மின் மருத்துவம், பாட்டரி ஆய்வு மற்றும் விரிவாக்கப் பொறியாளர், ஆற்றல் சேமிப்பு அறிவியலாளர், நீர் சுத்திகரிப்புப் பொறியாளர் பேன்ற பணிகளை ஏற்கலாம். பெட்ரோலியப் பொறியியலை மேலொழுக்கப் பகுதி, கீழொழுக்கப் பகுதி என இரண்டாகப் பிரிக்கலாம். இப்பொறியாளர்களுக்கு, பெட்ரோலியச் சுத்திகரிப்பு ஆலைகள், R&D நிறுவனங்கள், பெட்ரோலியம் ஜியாலஜிஸ்ட்டுகள், உற்பத்தி நீர்த்தேக்கப் பொறியாளர்கள் எனப் பல பணிகளில் உலக அளவில் வாய்ப்பு உண்டு.

உணவுத் தொழில்நுட்பத்தில் உணவு நுண்ணியிரியல், உணவுப் பதப்படுத்தலும் பயன்படுத்தலும், மரபணு மாற்றம் முதலியன கற்பிக்கப்படும். இதில் பயின்றவர்கள் உணவுத் தரக்கட்டுப்பாடு, வினியோகம், நுண்ணுயிரி ஆய்வு, டயட்டிக்ஸ் முதலிய துறைகளில் பணியாற்றலாம். டெக்ஸ்டைல் டெக்னாலஜி, மற்றும் அத்துடன் இயைந்த ஃபேஷன் டெக்னாலஜி, டெக்ஸ்டைல் கெமிஸ்ட்ரி படித்தவர்களுக்குத் தர/தயாரிப்பு மேலாளர், மருத்துவ/கட்டுமானத் துகில் பொறியாளர், தரக்கட்டுப்பாடுகள்/விற்பனை மேலாளர், பாணி வடிவமைப்பாளர் போன்ற வேலைகள் பொருந்தும்.

மரக்கூழ் மற்றும் காகிதத் தொழில்நுட்பம் பயின்றவர்களுக்கு மத்திய மரக்கூழ் மற்றும் காகித ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் துறைகளில் ஆராய்ச்சி அறிவியலாளர், ப்ராசஸ் பொறியாளர் போன்ற பணிகள் உண்டு. தோல் தொழில்நுட்பம் நம் நாட்டுக்கு அதிக அந்நியச் செலாவணி பெற்றுத்தரும் துறைகளில் ஒன்று. தோல் தயாரிப்பு, ஏற்றுமதி, ஃபேஷன் துறை, பாதுகாப்புப் பொருட்கள் தயாரிப்பு சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் உள்நாட்டிலும் சீனா, இந்தோனேஷியா, ஜெர்மனி, இத்தாலி ஆகிய வெளிநாடுகளிலும் நல்ல பணி வாய்ப்பு உண்டு.

எஞ்சினியரிங் பாடத் துறைகளை ஏழு பிரிவாக பிரித்து பார்த்தாலே ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளன. எதைத் தேர்வு செய்வது, எப்படி படித்து வெற்றிகரமான பாதை அமைத்துக்கொள்வது என்பதை நீங்கள்தான் திட்டமிட வேண்டும். மேலும் உள்ள ஐந்து பாடத் துறைகளைப் பற்றியும் வேலைவாய்ப்புகள் குறித்தும் அடுத்த இதழில் பார்ப்போம்.

X