குறுகிய கால நர்ஸிங் படிப்புகள் அங்கீகாரம் அற்றவையா?

3/27/2019 5:28:36 PM

குறுகிய கால நர்ஸிங் படிப்புகள் அங்கீகாரம் அற்றவையா?

நன்றி குங்குமம் கல்வி-வழிக்காட்டி

அரசு மற்றும் தனியார் என அனைத்து தமிழக மருத்துவக் கல்வி நிறுவனங்களிலிருந்தும் சுமார் ஆயிரம் அங்கீகரிக்கப்படாத குறுகிய கால நர்ஸிங் கோர்ஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் ஒவ்வொரு வருடமும் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் அங்கீகரிக்கப்படாத கோர்ஸ்களைப் படித்துவிட்டு மருத்துவ மனைகளில் வேலை செய்துவருகின்றனர். ஆகையால் பொதுமக்களின் நலன் கருதி அங்கீகரிக்கப்படாத கோர்ஸ்களை தடை செய்யவேண்டும் எனத் தமிழக அரசிடம் முறையிட்டுள்ளது தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில்.

நான்கு வருட இளங்கலைப் பட்டம், மூன்று வருட டிப்ளமோ படிப்பு மற்றும் இரண்டு வருடத் துணை மருத்துவப் படிப்பு ஆகியவையே இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நர்ஸிங் படிப்புகளாகும். இதைத் தவிர்த்துவிட்டு குறுகியகாலப் படிப்புகளான ஆறுமாத சான்றிதழ் படிப்புகள் மற்றும் ஒரு வருட டிப்ளமோ போன்ற அங்கீகரிக்கப்படாத நர்ஸிங் கோர்ஸ்கள் இன்றளவும் வழங்கப்பட்டு வருகின்றன. இப்படிப்புகளை முடித்துவிட்டு வரும் துறை சார்ந்த போதிய திறனும், அறிவும் இல்லாதவர்களைப் பணிக்கு அமர்த்தினால் மக்களின் ஆரோக்கியம் கேள்விக்குள்ளாகும் எனத் தெரிவித்திருக்கிறார் தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சிலின் பதிவாளர் எஸ். அனிகிரேஸ் கலைமதி.

1956ம் ஆண்டு இந்திய அரசால் அமைக்கப்பட்ட ஆலோசனை அமைப்பான தொழிற்பயிற்சிக்கான தேசிய கவுன்சிலால் (NCVT) அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளையே வழங்கி வருகிறோம் எனக் கல்வி நிறுவனங்கள் கூறிவருகின்றன. நிைலமையின் தீவிரத்தை பற்றி சமூக சமத்துவத்திற்கான மருத்துவசங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத்திடம் பேசியபோது, ‘‘நான்கு வருட இளங்கலை மற்றும் மூன்று வருட டிப்ளமோ கோர்ஸ்கள் இருக்கையில் ஆறுமாத சான்றிதழ் படிப்புகள் படித்தவர்களை மருத்துவமனையில் வேலைசெய்ய அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு அனுமதிக்கப்பட்டால் மக்களின் உடல்நலம் கேள்விக்குள்ளாகும். ஆறுமாத கோர்ஸ் படித்தவர்களிடம் என்ன தகுதியை, திறனை எதிர்பார்க்க முடியும்.

 துறை சம்பந்தமாக அவர்களுக்கு ஒன்றுமே தெரிய வாய்ப்பில்லை. தரமான சிகிச்சையை அவர்களால் ஒருபோதும் வழங்கமுடியாது.
அவர்களால் பொதுமக்களுக்குத்தான் பிரச்னை. இதுபோன்ற செயல்பாடுகள் நோயாளிகளின் நலனுக்கு எதிரானது. மேலும் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இக்குறுகிய காலப் படிப்பைப் படித்துள்ளதால் அவர்களின் வருங்காலமும் கேள்விக்குள்ளாகிறது.

அதே சமயம் அங்கீகரிக்கப்படாத படிப்புகளைப் படித்தது யாருடைய தவறு? ஆகையால் இதற்கு யாரும் பொறுப்பேற்க முடியாது.
ஆனாலும் அரசையும் கண்டிக்கிறோம். இது அரசு எந்திரத்தின் கண்காணிப்பின் தோல்வியையே காட்டுகிறது. அரசும் பெருந்தவறை இழைத்துள்ளது’’ என்கிறார்.

மேலும் அவர், ‘‘அங்கீரிக்கப்படாத கல்வி நிறுவனங்களையும், குறுகியகால படிப்புகளையும் கண்காணித்து அதை உடனே தடை செய்வதும் மற்றும் அந்நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதும்தான் அரசுக்கு இருக்கும் ஒரே வழி. அவ்வாறு செய்தால்தான் வருங்காலத்தில் இது போன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க வழிவகை செய்யமுடியும்’’ என்கிறார் டாக்டர்.

X