எஞ்சினியரிங் படிப்புகளும் எதிர்காலமும்..!

4/2/2019 5:01:51 PM

எஞ்சினியரிங் படிப்புகளும் எதிர்காலமும்..!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் கல்வியில் ஆர்வம் சற்றுக் குறைந்திருந்தாலும், தொழிற்கல்வித் துறைகளில் அதன் மதிப்பு உயர்ந்தே உள்ளது. அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங் மூலம் நடந்த பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விகிதம் கடந்த சில ஆண்டுகளாகச் சரிவைக் கண்டது மறுக்க முடியாத உண்மை. ஆனால், பொறியியலாளருக்கு உலகம் முழுவதும் மட்டுமின்றி, அதை அடுத்த அண்டவெளியுமே ஆய்வுக் களம்தான் என்பதையும் மறுக்கமுடியாது. முறையாகப் படித்து தரமான மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றால் எதிர்காலம் வளமானதாகும்.

எஞ்சினியரிங் படிப்புகளும் அதற்குண்டான வாய்ப்புகளும் குறித்து ஆங்கில அகர வரிசையின் அடிப்படையில் உயிரித்தொழில்நுட்பம் (Biotechnology),வேதிப்பொறியியல்/தொழில்நுட்பவியல் (Chemical Engineering/Technology), குடிமைப் பொறியியல் (Civil Engineering), கணினிப் பொறியியல் (Computer Engineering), மின் மற்றும் மின்னணுப் பொறியியல் (Electrical and Electronics Engineering), மின்னணு மற்றும் தொடர்புப் பொறியியல் (Electronics and Communication Engineering), எந்திரப் பொறியியல் (Mechanical Engineering) என்றபடி 7 பிரிவுகளாக பேராசிரியர் முனைவர் ப.வே.நவநீதகிருஷ்ணன் கடந்த இதழில் வழங்கிய விவரங்களின் தொடர்ச்சியை இனி பார்ப்போம்…

3. குடிமைப் (சிவில்) பொறியியல்: இது மற்ற எல்லாப் பொறியியல் பிரிவுகளுக்கும் முந்தையது மட்டுமல்ல; ஆரம்பத்தில் எல்லாப் பிரிவுகளையும் உள்ளடக்கியதும்கூட. 18ஆம் நூற்றாண்டில் ராணுவப்பொறியியலிலிருந்து பிரித்தறியப்பட்டது என்பதுதான் இதன் பெயருக்குக் காரணம். புவித் தகவலியல், சுற்றுச்சூழல் பொறியியல், வேளாண்பொறியியல், ஆர்கிடெக்சர், நகர் மற்றும் நகர்ப்புறத் திட்டமிடல், மண்ணியல், கடல் மற்றும் கடற்கரைப் பொறியியல் ஆகியவை இந்த அடிப்படைப் பிரிவைச் சார்ந்தவை எனக்கொள்ளலாம். சிவில் பொறியாளர்களுக்குக் கட்டடக்கலை கட்டுமானத்துறை உள்பட்ட பல துறைகளில் தளப் பொறியாளர், மேலாளர், தரக்கட்டுப்பாட்டாளர், திட்டப் பொறியாளர், விற்பனை அதிகாரி, QS/QA/QC பொறியாளர், Networking IT Field Engineer போன்ற பணிகள் காத்திருக்கின்றன.

புவித் தகவலியல் (Geo informatics) என்ற பாடப்பிரிவில், புவியியல், நிலப்படவியல் (Cartography) போன்ற நில அறிவியல் துறைப் பிரச்னைகளுக்குத் தகவல் அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி விடை காணப்படும். நேஷனல் ரிமோட் சென்சிங் ஏஜன்சி, ISRO, DRDO, Forest Survey of India, சுற்றுலாத்துறை ஆகியவற்றில் பல்வகைப் பணிகள் இவர்களுக்கு ஏற்றவை. சுற்றுச்சூழல் பொறியாளர்கள் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் போக்குவரத்து மாசு ஆய்வாளர், நீர்வளப் பொறியாளர், சுகாதார வடிவமைப்பாளர், பாதுகாப்பு அலுவலர், R&D பொறியாளர் ஆகிய பணிகளைப் பெறலாம்.

வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனப் பொறியியலில் நில அளவியல், மண்/நீர் வளம், உணவுத் தொழில்நுட்பம், பண்ணைக் கருவிகள், பால்பண்ணை போன்றவை கற்பிக்கப்படும். இதைப் படித்தவர்கள் வேளாண் எந்திர விற்பனை, தரக்கட்டுப்பாடு, வங்கி வேளாண் கடன் மேலாளர், வேளாண் அலுவலர் உள்பட பல பணிகள் ஆற்றலாம். ஆர்கிடெக்சர் பிரிவில் ஆர்கிடெக்சர் வரைகலை, கட்டுமான இயல், நகர்ப்புறத் திட்டமிடல், நில இயற்கை வனப்பு, பேரிடர் மேலாண்மை ஆகியவை இடம்பெறும்.

4. கணினிப் பொறியியல்: கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பொறியியல் (CSE- Computer science and engineering) என்ற அடிப்படைப் பிரிவில் கம்ப்யூட்டர் ஆர்கிடெக்சரில் தொடங்கி, Theory of Computation, Parallel programming போன்றவை கற்பிக்கப்படும். இப் படிப்பை முடித்தவர்கள் பல தனியார் நிறுவனங்களில் மட்டுமின்றி, அரசுத் துறைகளான CDAC (Centre for Development of Advanced Computing), NIC (National Informatics Centre), ERNET (Education and Research Network), STPI(Software Technology Parks of India) ஆகியவற்றில் Software/Web development, Data base/IT Infrastructure Management, Information Scientist, System Analyst/Administrator எனப் பல பணிகள் புரியலாம். வெளிநாடுகளிலும் நல்ல வாய்ப்பு உண்டு என்பது பலரும் அறிந்ததே.

அடுத்து, தகவல்தொழில்நுட்பவியல் (IT) பாடப்பிரிவும் வேலை வாய்ப்பிலும், ஊதியத்திலும், வெளிநாட்டு வாய்ப்பிலும் கவர்ச்சி மிகுந்ததே. CSE-யிலிருந்து கிளைத்த மற்ற பிரிவுகளாக Communication and Computer Engg., Computer Science and Information Tech., Computer Software Engg., Information and Communication Tech., Information Tech and Management ஆகிய படிப்புகளைச் சொல்லலாம்.

5. மின் மற்றும் மின்னணுப் பொறியியல்: ரேடியோ, ஆம்ப்ளிஃபையர், கணினி, டிரான்சிஸ்டர், பவர் அண்ட் கன்ட்ரோல், எலக்ட்ரானிக்ஸ், மைக்ரோ/நேனோ எலக்ட்ரானிக்ஸ், அரைக்கடத்திகள், தொலைத்தொடர்பு, கருவிப்பொறியியல் எனப் பலவற்றிற்கும் அடிப்படையாக இத்துறை விளங்குகிறது. மெக்கட்ரானிக்ஸ், தன்னியக்கம், குளிர்பதனம், உயிரி-மருத்துவப் பொறியியலில் வென்டிலேட்டர், MRI Scanner, ECG கருவிகள், செயற்கை இதயம், ரோபோடிக்ஸ், விண்வெளிப் பயணம் ஆகிய பலவும் மின்னியலின் பல்வேறு பயன்பாடுகள்தான்.

EEE முடித்தவர்கள் மோட்டார், ரேடார், கடல் பயண/தொலைத்தொடர்பு மின்பொறிகள் வடிவமைத்தல், உயிரி மருத்துவம், கணினி வன்/மென்பொருள், காப்புரிமை, தரக்கட்டுப்பாடு, மின்பகிர்மானம் ஆகிய பணிகளை ஏற்கலாம். சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகளிலும், HMT, ISRO, DRDL, DRDO-விலும் ஆராய்ச்சிப் பணிகளும் உண்டு. பணிப்பயிற்சியும் இணைந்த EEE (Sandwich) படிப்பு (5 ஆண்டு கள்), வேலைக்கு 100 சதவீதம் உத்தரவாதமே அளிக்கிறது. கருவியியல் மற்றும் கட்டுப்பாட்டுப் பொறியியல் (ICE), ஆற்றல் பொறியியல் (Energy Engineering) ஆகியவற்றை EEEன் கிளைப் பிரிவுகள் எனலாம். சில NIT, IIT-களில் Electrical Engineering, Electrical Engineering & Power என்ற பிரிவுகளும் வழங்கப்படுகின்றன.

6. மின்னணு மற்றும் தொடர்புப் பொறியியல்: ECE எனப்படும் இதன் கிளைப் பிரிவுகளாக Electronics and Instrumentation, Applied Electronics and Instrumentation, Electronics, Electronics and Telecommunication, Electronics and Electrical Communication ஆகியவற்றைச் சொல்லலாம். சென்னை IIT உள்ளிட்ட சிலவற்றில் இது Electrical Engineering துறையின் பகுதியாகவே கருதப்படுகிறது. ECE பாடத்திட்டத்தில் Signals and Systems, Communication Theory, Control Systems, Transmission Lines, Digital VLSI, Optical/Wireless Communication ஆகியவை அடங்கும். இப்படிப்பை முடித்தவர்கள் பயன்பாட்டு மின்னணுவியல், விமானப் போக்குவரத்து, விண்வெளி ஆராய்ச்சி, மின்உற்பத்தியும் பகிர்மானமும், தொலைத்தொடர்பு, வானொலி, தொலைக்காட்சி, கணினி, மருத்துவப் பயன்பாட்டுக் கருவிகள் கையாளுதல், ஆழ்கடல் பணிகளில் சேரலாம்.

Electronics and Instrumentation என்ற பாடப் பிரிவு, இயக்கங்களை அளத்தல், கட்டுப்படுத்துதல், தானியக்கமாக்குதல் பற்றியது. மெக்கட்ரானிக்ஸ், ரோபோடிக்ஸ் துறைகளுக்கு அடிப்படையானது. இரும்பு, எண்ணெய், பெட்ரோகெமிக்கல்ஸ், மின் மற்றும் பாதுகாப்பு எனப் பல துறைக் கருவிகளை இவர்கள் இயக்குகிறார்கள். கணினி வன்/மென்பொருள் பணிகளிலும் சிறக்கிறார்கள். Centre for Development of Advanced Computing, Hindustan Aeronautics Limited, Bharat Heavy Electricals Ltd, Telecom Authority of India, தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் ஆகியவற்றில் இவர்கள் பணியாற்றலாம்.

7. எந்திரப் பொறியியல்: தானூர்திகள், விமானங்கள், விண்வெளி ஓடங்கள், செயற்கை உடலுறுப்புகள், ரோபோக்கள், ஆட்டோமேஷன் ஆகிய பல துறைகளும் எந்திரவியல் பொறியாளர்களின் பங்களிப்போடுதான் இயங்குகின்றன. இந்த அடிப்படைப் பிரிவிலிருந்து கிளைத்தவையாக, Aeronautical, Automobile, Industrial Manufacturing, Marine, Mechanics and Automation, Mechatronics, Mining, Mining Machinery Production, Robotics, Mechanical(Sandwich) ஆகியவற்றைச் சொல்லலாம். சுத்திகரிப்பு/எரிவாயு பராமரிப்புப் பொறியாளர், Turbine Technician, Design/QC/Project/Automotive/CNC-VMC பொறியாளர்கள் ஆகிய பொறுப்புகளுக்கு ஆஸ்திரேலியா, குவைத், கனடா போன்ற வெளிநாடுகளிலும், புனே, சென்னை, ஐதராபாத் போன்ற நகரங்களிலும் எந்திரப் பொறியாளர்கள் பெருமளவில் தேவைப்படுகிறார்கள். இப்படிப்புடன் AutoCAD, Solid works, Ansys, Unigraphics, Catia ஆகிய பயிற்சியும் இருந்தால் பணி வாய்ப்பு அதிகமாகும்.

இதன் ஒரு கிளைப் பிரிவான Aeronautical Engineering, விமானங்களையும் அதன் பகுதிகளையும் வடிவமைத்தல், பழுது பார்த்தல் பற்றியது. விமான எஞ்சின்கள், ஏவுகணை அமைப்புகள், ராணுவ விமானங்கள், பயண விமானங்கள் என்ற நான்கு பிரிவுகளில் இவர்கள் பணி அடங்கும். விமானப் பராமரிப்புப் பொறியாளர், தொழில்நுட்பப் பதிவுப் பொறியாளர், வானூர்தி வடிவமைப்புப் பொறியாளர், விமானப் பாதுகாப்பு அலுவலர், Short Service Commission (Technical) in Army/Navy, R&D போன்ற பணிகள் இப்படிப்பை முடித்தவர்களுக்குக் காத்திருக்கின்றன. NASA-விலும் நம் பொறியாளர்கள் பணியாற்றுகிறார்கள்.

Automobile Engineering துறையின் நிலையைக் கொண்டு ஒரு நாட்டின் பொருளாதார நிலையையே அளந்துவிடலாம் என்பார்கள். ஆடி, ரீனால்ட், ஃபோக்ஸ்வாகன் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடும் இருப்பது நம் நாட்டில் இத்துறை சிறக்க வழிவகுத்திருக்கிறது. Marine Engineering என்ற கிளைப் பிரிவில் படிக்க கூடுதல் படிப்பு/உடல் தகுதிகளை மத்திய அரசின் கப்பல் துறை விதித்திருக்கிறது. கட்டணமும் சற்றுக் கூடுதல். ஆயினும், நிறைவான ஊதியமும் உலகம் சுற்றும் வாய்ப்பும் இருப்பதால் இப்படிப்பு மாணவர்களை ஈர்க்கிறது. Mining Engineering பிரிவு, நிலத்தடிக் கனிமவளங்களைப் பற்றியது. சில ஆண்டுகளாகத்தான் பெண்கள் இப் படிப்பில் சேர்க்கப்படுகிறார்கள். தரை மட்டத்திற்கு மேலுள்ள சுரங்கப் பகுதியில் மட்டுமே, அதிலும் காலை 6 மணியிலிருந்து மாலை 7 மணி வரை மட்டுமே வேலை பார்க்கலாம் என்ற நிபந்தனை பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

Mechatronics பிரிவு, மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், டெலிகம்யூனிகேஷன், கண்ட்ரோல், கம்ப்யூட்டர் ஆகிய பொறியியல்களைச் சார்ந்தது. இத்துறைப் பொறியாளர்களுக்கு Product Engineer, Robotic Control Engineer, Design and Development, Industrial Automation ஆகிய பணிகள் பொருந்தும். Industrial / Manufacturing / Production Engineering படிப்புகள் சில கல்லூரிகளில் மட்டுமே வழங்கப்படுகின்றன. இப்பொறியாளர்களுக்கு ரோபோடிக்ஸ், தானியக்கம், ஆலைக்கருவிகள், தளவாடங்களின் தயாரிப்பு, மூலப்பொருட்கள், தொழிலாளர் மேலாண்மை ஆகிய பல துறைகளில் பணி வாய்ப்பு உண்டு. புரொடக்‌ஷன் பிரிவில் சில கல்லூரிகளில் 5 ஆண்டு சாண்ட்விச் படிப்பும் உண்டு.உயர்கல்வியில் பொறியியல் பட்டம் படிக்க விரும்பும் மாணவர்கள் மேலே சொன்ன தகவல்களை கவனமாக படித்தால் உங்களுக்கு ஏற்ற பாடப்பிரிவை / பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் சுலபமாக இருக்கும். நம்பிக்கையோடு செயல்படுங்கள் வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!

பேராசிரியர் முனைவர் ப.வே.நவநீதகிருஷ்ணன்
தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

X