தொழில்முனைவோருக்கு ஊக்கமளிக்கும் ஸ்டார்ட் அப் திட்டம்

4/2/2019 5:07:10 PM

தொழில்முனைவோருக்கு ஊக்கமளிக்கும் ஸ்டார்ட் அப் திட்டம்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நம் இந்தியாவில் ஏராளமானோர் சிறு தொழில்முனைவோர்களாக உள்ளனர். ஆனால், இவர்கள் வெளியுலகில் பெரிதாக அறியப்படுவதில்லை. பொதுவாகச் சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டுமெனில் பெரிய முதலீடும், சிறந்த திட்டமும் வேண்டும் என்பதே எல்லோர் கருத்தாகும். இதை மாற்றும் விதமாகத் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் விதத்தில் இந்திய அரசு ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த ‘ஸ்டார்ட் அப்’ திட்டத்தைப் பற்றிய தெளிவான புரிதலும், திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த தகவல்களும் தொழில்முனைவோர்களுக்குச் சரிவரத் தெரியவில்லை. இதற்குப் பலதரப்பட்டோரின் மாற்றுக் கருத்துகளும் காரணமாகும்.

பன்னாட்டு நிறுவனங்கள் கோடிக்கணக்கில் தொழில் செய்தாலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (SME, MSME) தான், இந்திய மொத்த பொருளாதாரத்தை ஆளுகிறது.நம் நாட்டை இதே முன்னேற்றப் பாதையில் எடுத்துச்செல்ல வேண்டுமெனில் தொழில்முனைவோர்களையும், வேலைவாய்ப்புகளையும் மிக அதிகமாக உருவாக்க வேண்டிய கட்டாய நிலை உள்ளது.

அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையின்படி 10,000 ஸ்டார்ட் அப்கள்  உருவாக்கப்பட வேண்டியுள்ளது. அதில் 2,500 ஸ்டார்ட் அப்கள் மட்டுமே வேகமாக வளரக்கூடியதாகவும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடியதாகவும் இருக்கும். ஏனெனில் ஸ்டார்ட் அப்களின் வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ளது.

இதுதான் இந்தியா ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்க முக்கியக் காரணமாகும். அதனால்தான் வரிச்சலுகைகள் கொடுத்தும், நல்ல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியும், ‘ஸ்டார்ட் அப் இந்தியா’, ‘ஸ்டாண்ட் அப் இந்தியா’ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தொழில்முனைவை இந்தியாவில் நிலை நாட்டச் செய்ய அரசு முயற்சியெடுத்து வருகிறது.

பெரிய அளவிலான ஸ்டார்ட் அப்களுக்கு மட்டும் உதவுவது மட்டுமில்லாமல், சிறிய அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிக்கவே இம்முயற்சி.இது ஒரு செயலே! சட்டம் அல்ல! அதனால் இதற்குரிய சட்டத்திட்டத்தில், இன்னும் சில திட்டங்களையும் மாற்றங்களையும் அமல்படுத்தக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அமல்ப்படுத்தப்படவும் உள்ளது.

வேலை வாய்ப்புகள் உருவாக்கும் ஸ்டார்ட் அப்ஸ்

நம் நாட்டில் 80% பொறியாளர்கள் வேலை இல்லாமல் உள்ளனர்.

 * எண்ணற்ற வேலைவாய்ப்புகள் இருந்தும், வேலை கிடைக்கவில்லை எனில், அவன் சுயமாகச் சிந்திக்கும் திறனும் புதிய கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளும் திறனும் இல்லாமல் இருக்கிறான் என்பதே உண்மையான காரணம்.

* படிப்பிற்கும் வேலைக்கும் வேறுபாடுகள் அதிகம் உள்ளது. திறன் மேம்பாட்டுக்கும்  வேலை இல்லாததற்கும் இதுவே காரணமாகும். துறைக்கேற்ற உரிய பயிற்சிகள்  இருந்தால்தான் திறனை வளர்க்கமுடியும். முன்னேற முடியும். அதற்கு வழிசெய்யத் தொடங்கப்பட்டதே, ஸ்டார்ட் அப்.

அனைவரையும் தொழில்முனைவோராக மாற்றுவது சாத்தியமில்லை. ஆனால், அவர்களைச் சுயமாகப் புதிய வழிகளில் சிந்திக்க வைக்கமுடியும். ‘ஸ்டார்ட் அப்’ - வெற்றி வியூகம் ஸ்டார்ட் அப் என்றாலே தற்போது பரவலாகப் பேசப்படும் பெயர்கள் Ola, Uber போன்ற ஆப்ஸ் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகள்தான் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், நடைமுறைப்படுத்தக்கூடியதாக மட்டுமின்றி வேகமாக வளரக்கூடிய எந்தவொரு புதிய ஐடியாக்களும் ஸ்டார்ட் அப் தான்.

சமூகத்திலுள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் புது எண்ணங்களே, ஸ்டார்ட்அப் ஆகும். ஒவ்வொரு தொழில்முனைவோரும் சமூகத்திலுள்ள பிரச்னைகளுக்கு தீர்வாகவே தொழிலை ஆரம்பிக்கின்றனர். சமூக நலனுக்காக தொழில்முனைதலால், தொடங்கப்பட்ட தொழிலைப் பெரியளவில் விரிவடைய செய்யவும் அவர்களால் முடிக்கிறது.

கோவை பழமுதிர்சோலை, யஷ்ராஜ் கெய்தானின் ‘க்ராம்பவர்’, பார்வையற்ற காந்த் போலாவின் ‘பொலன்ட் இ்ண்டஸ்ட்ரீஸ்’, கோயம்புத்தூர் வேலுமணியின் ‘தைரோகேர்’, வித்யா மற்றும் லக்ஷ்மணனின் ‘சார்மினார் - ஜீரோ ஆயில் பிரியாணி’, அருணாச்சலம் முருகானந்தத்தின் வீட்டிலே தயாரிக்கக்கூடிய சுகாதார நேப்கின்ஸ் இயந்திரம், கண் தெரியாதவர்களுக்கும் காது கேட்காதவர்களுக்கும் ரூமா ரோகா அமைத்த பாதை, போன்றவை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.

புதிய பொருள் தயாரிப்பு (Product innovation) மற்றும் செயல்முறைப்படுத்தக்கூடிய கண்டுபிடிப்பு (Process innovation) என ஸ்டார்ட் அப்கள் இரு வகை கொண்டது.

‘ஸ்டார்ட் அப் இந்தியா’வில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

தொழில்முனைய ஒரு ஐடியா கிடைத்தால், அதனை ‘ஸ்டார்ட் அப்’ திட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு செயல்படுத்தலாம். அதற்கான வழிமுறைகளை இப்போது
பார்ப்போம்.

“ஸ்டார்ட்அப்” கற்றல் திட்டம் (Startup India Learning Program - SILP) மூலம் இலவசமாக இணையதளத்தில் கீழ்க்காணும் தலைப்புகளில் கற்றுக்கொள்ளலாம்.

* அறிமுகம் - தொழில்முனைவோர்
* ஸ்டார்ட் அப்பிற்கான சட்ட அம்சங்கள்
* நிதி அடிப்படைகள்
* தொழில் திட்டமிடுதல்
* எண்ணங்களுக்கு உருக்கொடுத்தல்

உங்கள் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனத்தை இணையதளத்தில் சுலபமாக நேரடியாகவே பதிவு செய்துகொள்ளலாம். இதைத் தவிர, அடைவு ஆதரவு தேவைப்படுமெனில் உங்கள் ‘ஸ்டார்ட் அப்’ -ஐ அரசாங்க அனுமதி பெற்ற (இன்குபேஷன் சென்டர்ஸில் (Incubation centers) IIT போன்ற ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்களிலோ, IIM போன்றவைகளிலோ விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

பலர் அவர்களது ஐடியாக்களுக்கோ, கண்டுபிடிப்புகளுக்கோ, காப்புரிமை (patent)/அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property Rights) வாங்குவது இல்லை. காப்புரிமை இல்லாததால், அவர்கள் கண்டுபிடிப்பு காப்புரிமை உள்ள வேறொருவருக்குச் சொந்தமாகிவிடுகிறது. இதற்குக் காரணம், இந்தியாவில் செயல்படுத்த எடுக்கும் கால அவகாசமும், பதிவு செய்யப் பணத்தேவையும்தான். அதனால் அரசு, காப்புரிமை / அறிவுசார் சொத்துரிமையை 90 நாட்களுக்குள் கிடைக்க வழிசெய்யும் வேக செயல்பாட்டுத் திட்டமும் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. அந்த செயல்பாட்டுத் திட்டம் எப்படி நடைமுறைப்படுத்தப்படும் என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்…  
 
தொகுப்பு: திருவரசு

X