பேச்சுக்கும் செயலுக்கும் ஒற்றுமை வேண்டும்..!

5/29/2019 2:57:09 PM

பேச்சுக்கும் செயலுக்கும் ஒற்றுமை வேண்டும்..!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

* நடை உடை பாவனை 10
* உடல்மொழி

மனிதர்கள் உணர்ச்சிவசப்படும் மிருகங்கள் என்று சொல்வார்கள்.  காரணம் மனிதன் தனது உணர்வுகளை வெளிப்படுத்த உடலை ஒரு கருவியாக பயன்படுத்துகிறான். சக மனிதருடன் பேசும்போது,  அவர் சொல்வது நமக்குப் பிடிக்காமலிருந்தால், ‘அவரு பேசற சப்ஜெக்ட் பிடிக்கலை, சொன்னா முகத்துல அடிச்சது மாதிரில்ல இருக்கும்,  என்று தயவு தாட்சண்யம் காரணமாக பேசாமல் இருப்போம்.  ஆனால், பேசுவது பிடிக்கவில்லை என்பதை உடலை நெளிப்பதாலும், அவஸ்தையான அங்க அசைவுகளாலும் உடல்மொழி வெளிப்படுத்திவிடும்.

பெரும்பாலான மக்கள் வார்த்தைகளைவிட அங்க அசைவுகளையே அதிகம் கவனிக்கக்கூடியவர்கள். உள்ளுணர்வின் (Intution) மூலம் அறிந்துகொள்வதற்கு, அங்க அசைவுகள் பெரிதாக உதவும். அதேசமயம் எல்லா நேரத்திலும் அங்க அசைவுகள் சரியான பிரதிபலிப்புகளை வெளிப்படுத்துகின்றன என்று சொல்லமுடியாது. உணர்ச்சி வெளிப்பாட்டிற்கு அங்க அசைவுகள் ஒத்துழைக்காமல் போகும் தருணங்களும் உண்டு.   

பொதுவாகவே நம்முடன் பேசும் மனிதர்கள் பொய் சொல்கிறார்களா? உண்மை சொல்கிறார்களா? என்பதை அவர்களுடைய பேச்சை வைத்து மட்டும் உறுதி செய்ய முடியாது, அப்படிச் செய்யவும்கூடாது.  ஆனால், நம்மில் பலர் அன்றாட வாழ்க்கையில் அடுத்தவர்களின் பேச்சைக் கேட்ட மாத்திரம் உண்மையா பொய்யா என்பதை முடிவு செய்பவர்களாகவே இருக்கிறோம். அங்க அசைவுகளை கவனிப்பதே இல்லை.  காவல் துறையினர் மட்டும் அதை துல்லியமாக கவனிப்பார்கள்.

விசாரணை செய்யப்படும் நபரிடம் கேள்வியைக் கேட்டு, ஆழமாக கவனிப்பார்கள். கேள்வியைக் கேட்ட மாத்திரத்தில் அவரது உடல் வெளிப்படுத்தும் அங்க அசைவுகளை, முக பாவங்களை, அலைபாயும் விழிகளை, கைகால் விரல்களின் துடிப்புகளை, குரல் தொனியை தனித்தனியே நான்கு ஐந்து கோணங்களில் வீடியோ எடுப்பார்கள். ஒரு விநாடியில் மனித உடல் வெளிப்படுத்தும் நுட்பமான அசைவுகள் (Micro Gestures) பல இருக்கின்றன. அவை இயல்பான ஒட்டுமொத்த பார்வைக்கு புலப்படவே செய்யாது.

சினிமா-தொலைக்காட்சித் தொடர்களில் ஸ்லோ மோஷன் சீன்களைப்  பார்த்திருக்கலாம். ஒரு காட்சி இயல்பாக நிகழ்கையில் (ஒருவர் நடந்து வரும்போது) வசீகரமாகத் தெரியாது, ஸ்லோமோஷனில் கவர்ச்சிகரமாக, வசீகரமானதாக, மனதிற்குப் பிடித்ததாக இருக்கும். காரணம், அந்தக் காட்சியில் இடம்பெற்ற நடிகரின் உடல்மொழி வெளிப்படுத்திய நுட்பமான அசைவுகளை (Micro Gestures) நாம் கவனிப்பதுதான்.

இதே டெக்னிக்கைத்தான் காவல்துறையும் விசாரணையின்போதும் பயன்படுத்துகிறது. விசாரணை செய்யப்படும் நபரின் உடல் வெளிப்படுத்தும் நுட்பமான அசைவுகளை தனித்தனியே ஸ்லோமோஷனில் ஆராய்வார்கள். உடலசைவு பற்றிய எண்ணற்ற வகைகளை வல்லுநர்கள் வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். பொதுவில் பொய் சொல்பவர்களுக்கு இதயம் படபடப்பாக இருக்கும், வியர்க்கும், கண்கள் அலைபாயும், உடலில் ரோமங்கள் சிலிர்க்கும், விரல்கள் தன்னிச்சையாகத் தாளமிடும். இவை எல்லாம் நுட்பமான வெளிப்பாடுகள். இவையனைத்தும் Real Timeல் வெளிப்படுகையில் நம்மால் கவனிக்க இயலாததாகப் போகிறது.

வார்த்தைகளைவிட வார்த்தைகளற்ற சைகைகள் ஐந்து மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஒரு விஷயம் குறித்து உரையாடும்போது சக மனிதரிடம்  “மக்கள் சந்தோஷமா இருக்காங்க. நீங்க என்ன நினைக்கறீங்க?’’ என்று கேட்க, அவர் தலையை இடவலமாக அசைத்து ‘‘ஒத்துக்க முடியலை சார்’’ என்றால் புரியும். அதுவே  தலையை இடவலமாக அசைத்து, “சரியா சொன்னீங்க சார்’’ என்றால், அப்போது பதில் எப்படி இருந்தாலும் அவர் கருத்தை ஏற்கவில்லை என்றே எடுத்துக்கொள்வீர்கள். இதைத்தான்  வார்த்தைகளும், வார்த்தைகளற்ற செயல்பாடுகளும் ஒன்றிலிருந்து மற்றொன்று முரண்பட்டு நிற்கும்போது மனிதர்கள் வார்த்தைகளைவிட, வார்த்தைகளற்ற செயல்பாட்டைத்தான் நம்புபவர்களாக இருக்கிறார்கள் என்கிறார்கள்.

பேச்சுக்கும் செயலுக்கும் எப்போதும் ஒற்றுமை இருக்கிறது. ஒரு ஆசிரியர் தன் மாணவர்களிடம் கைகளைக் கட்டிக்கொண்டு, பேண்ட் பாக்கெட்டிற்குள் நுழைத்துக் கொண்டு, முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, “உங்கள் கருத்துகளை இருகரம் கொண்டு வரவேற்கிறேன்’’ என்று உண்மையாக சொன்னால் ஒருவரும் நம்ப மாட்டார்கள். அதையே புன்னகை ததும்ப, உள்ளங்கை தெரிய அகல விரித்து, உடம்பை ரிலாக்ஸ்டாக வைத்து சாந்தமான குரலில் சொன்னால் உடனே நம்பிவிடுவார்கள்.  ஆகவே, பேச்சுக்கும் செயலுக்கும் உள்ள ஒற்றுமையே உண்மையை உறுதிபடுத்தும்.

ஒரு முறை சிக்மண்ட் ஃபிராய்டிடம் ஒரு பெண்மணி பேசிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ஃபிராய்டு,“உங்கள் திருமண வாழ்க்கையில் என்னம்மா பிரச்னை?’’ என்றார். அந்தப் பெண் அதிர்ந்துபோய், “அது எப்படி சார் உங்களுக்குத் தெரியும்? என் ஹஸ்பண்டுடன் பிரச்னைன்னு நான் சொல்லவே இல்லையே’’ என்றாள். ஃபிராய்டு சிரித்தபடி, “நீங்க சொல்லலை ஆனா பேசும்போது அடிக்கடி உங்கள் Wedding Ringஐ சுழற்றிட்டும், கழற்றிக் கழற்றி மாட்டிகிட்டும் இருந்தீங்க“ என்றார்.

சொல்லுக்கும் செயலுக்கும் எப்போதும் தொடர்பு இருப்பதுபோல் நடந்துகொள்ள வேண்டும். சக மனிதர்களிடம் பழகும்போது அவர்களது வார்த்தைளுக்கும், வார்த்தைகளற்ற சைகைகளுக்கும் இடையே பொருந்திப்போகும் ஒற்றுமையை கண்டறிந்து புரிந்துகொள்ள வேண்டும். அந்தப் புரிதல்தான் மனிதர்களின் மனோபாவத்தை சரிவர அறிந்து கொள்ளவும், தனிமனித ஆளுமையை வடிவமைத்துக்கொள்ளவும் வழிவகுக்கும். வார்த்தைகளுக்கும் வார்த்தைகளற்ற சைகைகளுக்குமான புரிதலில் அடுத்த கட்டம் சூழலோடு பொருத்திப் பார்த்தல்.

- தொடரும்   
ஸ்ரீநிவாஸ் பிரபு

 உடை வழி  -  டை  (Tie)

கழுத்துப்பட்டை என்று தமிழில் சொல்லப்படும் டை நேரடியாக நவநாகரிக உலகிற்கு வந்த அலங்கார உடை வடிவம். இன்றளவும் டை கட்டிக்கொண்ட மனிதர்களைப் பார்த்த மாத்திரத்தில் அவர்மீது மதிப்பும், மரியாதையும் வரவழைக்கும் தன்மை டைக்கு இருக்கிறது. Tie என்றால் கழுத்தைச் சுற்றி கட்டிக்கொள்ளும் சிறு துணி என்று பொருள். டை வந்த வரலாறு சுவாரஸ்யமானது. 17ம் நூற்றாண்டில் (1618-1648) ஃபிரான்ஸ் மன்னர் 13ம் லூயிசை பார்க்க வந்த Croatia வணிகர்கள், கழுத்தைச் சுற்றி (குளிருக்காக) சிறு துணியைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். அதை ரசித்த மன்னர்,  உடனே அதை தனது அரச உடைகளில் ஒன்றாக இடம்பெறச் செய்தார். Croatia வணிகர்களை கௌரவிக்கும் விதமாக அதற்கு La Cravate என்று பெயரிட்டார். இன்றளவும் ஃபிரான்சில் ‘டை’ La Cravate என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டுவருகிறது.

கழுத்தைச் சுற்றி கட்டப்பட்ட துணி கழன்று விழாமல் இறுக்க முடிச்சியிட்டுக் கொள்ளும் பழக்கம் 1930களில் அறிமுகமானது. அதை Windsor knot என்றார்கள். (அதை உருவாக்கியவர் Duke of Windsor). கழுத்தைச் சுற்றி இறுக்கமான முடிச்சாக இருந்தது, அதே நேரம் சுருக்காக இறுக்காமல் இருந்தது. அந்த முடிச்சும் கழுத்துப் பகுதியில் முக்கோண வடிவில் அழகாக அமைந்திருக்க உலகம் அதை அப்படியே ஏற்றுக்கொண்டது.

உலகம் இன்று அறிந்திருக்கும் ‘சுற்றுமடிப்பு’ கொண்ட டையை 19ம் நூற்றாண்டுகளில் பிரிட்டிஷ்காரர்கள் கண்டறிந்தார்கள். அது விளையாட்டாக கண்டறியப்பட்டது. பிரிட்டனில் வாழ்ந்த குதிரைக்காரர்கள் வண்டிசாரத்தில் பூட்டிய நான்கு குதிரைகளின் லகான்களை ஒரே கையில் பிடித்துக்கொள்வதற்காக போடும் முடிச்சை, கழுத்தில் கட்டிக்கொண்டிருந்த துணியிலும் போட்டுப் பார்க்க, அது அழகானதாகவும், இறுக்கமானதாகவும் இருந்தது. அதுவே இன்றைய டையானது. ஆரம்ப காலங்களில் டை கழுத்து முதல் கீழ்ப் பகுதிவரை ஒரே அளவில் இருந்தது. அலங்கார உலகில் நுழைந்ததாலோ என்னவோ அதன் வடிவமும் காலத்திற்கு ஏற்ப நீண்டு, சுருங்கி, தடித்து, இளைத்துப்போனது.

ஆரம்ப காலங்களில் டை கழுத்து முதல் கீழ் பகுதிவரை ஒரே அளவில் இருந்தது. அலங்கார உலகில் நுழைந்ததாலோ என்னவோ அதன் வடிவமும் காலத்திற்கு ஏற்ப நீண்டு, சுருங்கி, தடித்து, இளைத்துப்போனது. பிரிட்டிஷ் ஃபேஷன் டிசைனர் மிக்கேல் பிஷ் என்பவர் 1966ல் வடிவமைத்த டையின் அகலம் 6 இன்ச் இருந்தது.  டை காற்றில் அலைபாயாமல் இருக்க சட்டையுடன் டிசைனர் பின் குத்திக்கொள்ளும் வழக்கம் அன்றைய காலகட்டத்தில்தான் தோன்றியது.

உலகம் முழுக்க Tie பல நாடுகளின் Royal Dressingகிலும், Corporate உலகிலும் முக்கியமான உடையாக இருக்கிறது. அதை கௌரவிக்கும் விதமாக டிசம்பர் மாதத்தை டை மாதமாக அனுசரிக்கிறார்கள். ஒரு Casual உடையை, Formal உடையாக மாற்றும் வல்லமை சிறிய டைக்கு இருப்பதுதான் விசித்திரம். இருந்தபோதும், இன்றளவும் இந்தச் சிறிய டையை சரிவர அணியத் தெரியாமல் பலரும் தவிப்பதுதான் அதைவிட விசித்திரம். அதை உணர்ந்துதானோ என்னவோ, ஆஸ்கர் ஒயில்டு ஒருமுறை குறிப்பிட்டார், “A well tied tie is the first serious step in life” என்று.

X