எம்.பில். படிப்பு நிறுத்தப்படுமா?

7/8/2019 5:07:46 PM

 எம்.பில். படிப்பு நிறுத்தப்படுமா?

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

புதிய கல்விக்கொள்கைக்கான வரைவுத் திட்டத்தில், மும்மொழிக் கொள்கை வேண்டும், தமிழர்கள் கட்டாயம் இந்தி படிக்கவேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்ட செய்தி மட்டுமே முக்கியத்துவம் பெற்றது. ஆனால்,எம்.பில் படிப்பு தேவையற்ற ஆணி, அவை பிடுங்கப்பட்டே ஆகவேண்டும் என்ற இன்னொரு கண்ணிவெடியையும் அந்த வரைவுத் திட்டம் புதைத்து வைத்திருக்கிற செய்தி இப்போது வெளியாகியுள்ளது.

நாடெங்கிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் எம்.பில். ஆய்வில் ஈடுபட்டு இருக்கும்போது, திடீரென அப்படிப்பே தேவையில்லை என்ற ஆலோசனை ஏற்கப்படும் பட்சத்தில், லட்சக் கணக்கான மாணவர்களின் நேரம், உழைப்பு, பணம் அனைத்தும் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு வழங்கியுள்ள ஆலோசனையின்படி, இனிமேல் பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., உள்ளிட்ட இளங்கலைப் படிப்புகள் நான்கு வருடங்களாகவும், எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்சி., உள்ளிட்ட முதுகலைப் படிப்புகள் இரண்டாண்டுகளும், இரண்டாவது ஆண்டில் முழுமையாக ஆராய்ச்சிக்கு மட்டும் ஒதுக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், எம்.பில் படிப்புகளுக்கான தேவை இருக்காது என்றும், 4 வருட இளங்கலைப் படிப்பு முடித்த ஒருவர் நேரடியாக பிஹெச்.டி படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதிபெறுவார் என்றும் ஆலோசனை வழங்கப் பட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

X