நீர்மேலாண்மை படிப்புகளும் அவசியமும்!

7/15/2019 5:27:57 PM

நீர்மேலாண்மை படிப்புகளும் அவசியமும்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

முன்னெப்போதும் இல்லாத அளவில் தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. நீராதாரங்களான ஏரி, குளம், குட்டை, ஆறுகளெல்லாம் வறண்டும் புதர்மண்டியும் காணப்படுகின்றன. தண்ணீர் கேட்டு மக்கள்  தினந்தோறும் சாலைக்கு வந்து போராடுகின்றனர். தண்ணீர் விலைமதிக்க முடியாத ஒன்றாகிவிட்டது.

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பல ஐடி கம்பெனிகளும் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்ய சொல்கின்றன. பல உணவு விடுதிகளும், தனியார் விடுதிகளும் தண்ணீர்ப் பஞ்சம் குறித்த அறிவிப்பு பலகைகளை வைத்தன. இச்சூழலில் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு, நிலத்தடி நீர்மட்டம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் மற்ற இந்திய நகரங்களைவிட சென்னையில் சிறந்த நீராதாரங்கள் மற்றும் மழைப்பொழிவு இருந்தபோதிலும் 3 ஆறுகள், 4 நீர்நிலைகள், 5 ஈரநிலங்கள் மற்றும் 6 வனப்பகுதிகள் ஆகியவை நீரின்றி வறண்டுவிட்டன. சென்னை, பெங்களூரு, டெல்லி உட்பட 21 நகரங்களில் அடுத்த ஆண்டில் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் இல்லாத நிலை ஏற்படும் என எச்சரிக்கிறது அந்த ஆய்வறிக்கை.

மேலும் 2030ம் ஆண்டில் 40% மக்களுக்கு குடிநீரே கிடைக்காத நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கிறது அறிக்கை. இன்றளவும் பேசப்படும் வரலாற்றுப் புகழ்மிக்க சோழர்கள் மற்றும் நாயக்கர்கள் காலத்தில் நீர்மேலாண்மையில் சிறந்து விளங்கிய தமிழகத்தில்தான் இத்தகைய அவலநிலை ஏற்பட்டுள்ளது. கரிகாலன் கட்டிய கல்லணையின் பெருமையை பேசிக்கொண்டிருக்கும் நாம் தண்ணீர் சேமிப்பு, பயன்பாட்டில் திட்டமிடல் இல்லாமல் இருக்கிறோம்.

தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமுமே விழித்துக்கொள்ள வேண்டிய நேரமிது. நாம் சமயோசிதமாக செயல்பட்டு முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டிருந் தால் இந்த மோசமான வறட்சியை சுலபமாக கையாண்டிருக்க முடியும். நம் முன்னோர்களிடம் இருந்த நீர்மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நம்மிடம் இல்லாததுதான் முக்கிய காரணம்.

இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை நம் இளையதலைமுறை நீர்மேலாண்மை குறித்த படிப்புகளில் கவனம் செலுத்தி பயன்பாட்டிலும் கொண்டுவந்தால் வறட்சியை வென்று வளமான சமூகத்தை உருவாக்கலாம்.  மக்கள் தொகைப் பெருக்கம், நகரமயமாக்கல், தொழிற்துறைகளின் வளர்ச்சி, காடுகள் அழிப்பு போன்ற காரணங்களினால் இயற்கையின் முக்கிய வளமான நீரின் பற்றாக்குறை அதிகரிக்கிறது.

எனவே, நீராதாரங்களை நவீன தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு   முறையாக கையாளவும், தொழில்முறை பயிற்சி பெற்ற நிபுணர்களை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டு நீர்வளம் சார்ந்த படிப்புகள் உலகெங்கிலும் அறிமுகப்படுத்தபட்டன. நீர்வளம் மற்றும் அது சார்ந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளே நீர் மேலாண்மை (Water Management) படிப்புகளாகும். இந்தியாவின் பல்வேறு முன்னணிக் கல்விநிறுவனங்கள் நீர்வளம் சார்ந்த பல்வேறு  டிப்ளமோ, சான்றிதழ், இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்கிவருகின்றன.  

இளங்கலைப் பட்டப்படிப்பு

* B.E (Irrigation and Water Management)

* B.Sc (Soil Science and Water Management)

* B.Tech in Water Engineering and Management

முதுகலைப் பட்டப்படிப்பு

* M.Tech in Water Engineering and Management

* M.E (Hydrology and Water Resources Engineering)

* M.E (Integrated Water Resources Management)

* M.E (Irrigation and Water Management Engineering)

* M.Sc Water Resources Management

* M.Tech in Coastel Management

ஆராய்ச்சிப் படிப்புகள்

* Ph.D in (Irrigation and Water Management)

* Ph.D in (Soil Coservation and Water Management)

* Ph.D in (Water Resources Engineering)

* Ph.D in (Soil Science and Water Management)

டிப்ளமோ படிப்புகள்

* Advanced Diploma in Water Quality management

* Diploma in Watershed Management

* Post Graduate Diploma in Water Resource Management

* Post Graduate Diploma in Watershed Management

சான்றிதழ் படிப்புகள்

* Certificate Course in Modern Techniques in Ground water Exploration

* Certificate Course in Water Pollution Measurement and Control Engineering.

கல்வித் தகுதி

+2வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது நான்கு வருட இளங்கலை மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கான கல்வித் தகுதியாக கருதப்படுகிறது. மேலும் தேர்ந்தெடுக்கப்போகும் துறைகளுக்கு ஏற்ப இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தல் முதுகலைப் படிப்புகளுக்கான கல்வித் தகுதியாக கருதப்படுகிறது. அரசு கல்விநிறுவனங்களில் நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுகளின் அடிப்படையிலும், தனியார் கல்விநிறுவனங்களில் நேரடியாகவும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுவருகிறது.

வேலைவாய்ப்பு

உலகெங்கிலும் நீர் மேலாண்மையின் தேவை அவசியம் என்பதால் இத்துறையில் வேலைவாய்ப்புக்கு பஞ்சமிருக்காது. அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில், வேளாண் தொழிற்துறைகளில், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் என பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு பெருகிவருகிறது. நீர்வளம் சார்ந்த துறைகளில் தொழில்முறைப் பயிற்சி பெற்றவர்கள் Water Resource Specialist, Water Efficiency Technicians, Water Resource Manager, Environment Manager போன்ற   பதவிகளில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர்.

நீர்மேலாண்மைப் பாடத்திட்டம் வழங்கும் சில கல்வி நிறுவனங்கள்

* Indian Institute of Technology, IIT Roorkee

* Patna University

* The Maharaja Sayajirao University of Baroda, Gujarat

* University Visvesvaraya College of Engineering

* Vinayaka Misson’s Kirupananda variyar Engineering College, Salem

* Anna University, Chennai
 
* Punjab Engineering College, Chandigarh

­_ வெங்கட் குருசாமி.    

X